Thursday, May 22, 2014

இந்திய கலைஞர்கள் உலக அரங்கிற்கு வர வேண்டும்: கேன்ஸ் திரைப்பட விழாவில் கமல் பேச்சு


பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா கடந்த 14ந் தேதி தொடங்கியது. வருகிற 25ந் தேதி வரை நடக்கிறது. இங்கு இந்திய அரசும், இந்திய பிக்கி அமைப்பும் இணைந்து அரங்கம் அமைத்துள்ளன. இதனை பிக்கி அமைப்பின் மீடியாப் பிரிவு தலைவரான கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

பின்னர் அங்கு வந்திருந்த இந்திய பிரிதிநிதிகளிடையே அவர் பேசியதாவது: சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் இருப்பது பாராட்டுக்குரியது. இதன் மூலம் இந்திய சினிமா வர்த்தகத்தை, உலக சினிமாவுடன் ஒருங்கிணைக்க முடியும். இதுபோன்ற விழாக்களுக்கு தனியாக வர முடியாத கலைஞர்கள், இந்த அமைப்புடன் இணைந்து கலந்து கொண்டு உலக சினிமா பிரபலங்களை சந்தித்து உரையாடலாம்.

அதேபோல இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் திறமைகள் உலக சினிமா பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இது அமையும். இந்திய கலைஞர்களின் பிரச்னையே அவர்கள் சின்ன சின்ன சாதனைகளுக்குகூட தன்னிறைவு பெற்று விடுவதுதான். அதிலேயே முழு திருப்தி அடைந்துவிடுகின்றனர். அதனால் சர்வதேச சந்தைகளின் அறிமுகம்கூட அவர்களுக்கு இல்லாமல் போகிறது. சர்வதேச சந்தை குறித்த பயம்தான் நம்மிடம் உள்ளது. இந்திய கலைஞர்கள் உலக அளவில் பாராட்டப்படுகிறார்கள். அது அவர்களுக்கு தெரியவில்லை. தங்களிடம் இருக்கும் திறமையை உணர்ந்து இந்திய படைப்பாளர்கள் உலக அரங்கிற்கு வரவேண்டும், உலக சினிமாவில் ஜொலிக்க வேண்டும்.

இவ்வாறு கமல் பேசினார்.

0 comments:

Post a Comment