Friday, May 30, 2014

தொலைந்துபோன மகிழ்ச்சிகள்...?

                   இன்று மளமளவென வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்கள் நமக்கு அதிக பயன்பாடுகளைத் தந்தாலும், ஏனோ மனதிற்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை தருவதில்லை. எதுவுமே அளவுக்கு மீறிப் போகும்போது ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. ஐம்பது பைசா இன்லாண்ட் கடிதங்களும், 25 பைசா போஸ்டு கார்டும் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை இன்றைய மொபைல் போன்களும், பேஸ்புக்கும் வெளிப்படுத்துவதில்லை.

தொழில்நுட்ப சாதனங்கள் நம்மை மெல்ல மெல்ல சுயமாக பல காரியங்களைச் செய்ய இயலாதவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு திருமணம், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழை நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பிவிட்டால் போதும், நிகழ்ச்சி நடைபெறும் நாளில் அனைவரும் ஆஜராகிவிடுவார்கள். ஆனால் இன்றைய நிலைமையே வேறு. நேரில் பத்திரிகை வைத்துவிட்டு வந்தாலும் மீண்டும் ஒருமுறை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் போன் செய்து அழைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

சென்னையிலிருந்து திருச்சிக்கு நண்பரின் விஷேசத்திற்கு செல்ல வேண்டும் எனில் பத்திரிகை கையில் கிடைத்ததும் ஒருமுறை போன் செய்து எப்படி வரவேண்டும் என விசாரித்துவிட்டு, பிறகு விஷேச தினத்தில் "நான் பஸ் ஸ்டாண்ட் வந்துட்டேன் இங்கிருந்து எப்படி வருவது?", "விவேகானந்தர் நான்காவது தெருவுக்கு வந்துட்டேன்.. ஏழாவது தெருவுக்கு எப்படி வருவது?" என நிகழ்ச்சி நடத்தும் நண்பரின் மொபைல் போனுக்கு ஓயாமல் அலைபேசும் நபர்களும் இருக்கிறார்கள். ஏண்டா இவனைக் கூப்பிட்டோம் என நினைக்கும் அளவுக்கு எரிச்சலூட்டுகிறார்கள்.

முன்பெல்லாம் கடிதங்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலங்களில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க வேண்டும் என நண்பருக்கு ஒரு கடிதம் போட்டால் போதும். அந்த நேரத்தில், அந்த இடத்தில் தவறாமல் ஆஜராகிவிடுவார்.

இன்றைய தேதியில் பிரசவ வார்டில் மனைவி இருக்கும் போது கூட, " Awaiting for my sweet little baby " என டுவிட்டரில் தகவல் பரிமாறி, பிரசவமான குழந்தையை உடனே புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றுகிறார்கள். குழந்தை பிறந்ததை விட, அந்த செய்தியை பதிவேற்றம் செய்வதில் அதிக மகிழ்ச்சியடைகிறார்களோ என்று தோன்றுமளவுக்கு தொழில்நுட்ப அடிமைகளாகிவிட்டனர்.

ஆனால் அன்று, குழந்தை பிறப்புக்காக அம்மா வீடு வந்த மனைவிக்கு குழந்தை பிறந்த தகவல் கடிதம் மூலம் மூன்று நாட்கள் கழித்து தான் தெரிய வரும். அதன்பிறகு விடுமுறை எடுத்துக் கொண்டு தனக்கு பிறந்த மகனை / மகளைப் பார்க்க ஊருக்கு சென்றவர்கள் ஏராளம். தனது மகன் எப்படி இருப்பான் என நினைத்துக் கொண்டே பயணித்து, மனம் நிறைய  மகனை அள்ளி முத்தமிடும் தருணத்தின் மகத்துவத்தை அனுபவித்தவர்களைக் கேட்டால் தெரியும்.

ஏதேனும் துக்கம் நிகழ்ந்துவிட்டால் ஊருக்கு ஒருவர் தகவல் சொல்ல கிளம்பி போவார். அவர் போகும் ஊரில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தகவல் சொல்ல தேவையில்லை. அந்த ஊரில் ஒருவருக்கு தகவல் சொன்னால்கூட போதும். அவர்கள் மூலம் தகவல் பரவி அனைவரும் வந்து சேர்ந்துவிடுவர். ஆனால் இப்போது அப்படி இல்லை.. சில குடும்பங்களில் மாமா, அத்தை, அத்தை மகன், அத்தை மகள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக போன் செய்து தகவல் சொல்ல வேண்டியுள்ளது. இல்லையெனில் எனக்கு ஏன்  சொல்லவில்லை நான் முக்கியமான ஆளில்லையா என்ற சண்டைகள் ஏராளமாக நடப்பதைக் காணமுடிகிறது.

ஊரிலிருக்கும் தாத்தாவுக்கு போட்ட கடிதத்திற்கு பதில் கடிதம் வந்த அன்று அதை பிரித்து படிப்பதற்குள் மனதிற்குள் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. நேரத்திற்கு சாப்பிடு, கவனமாக பள்ளிக்கூடத்துக்கு போ, வெயிலில் அதிகம் அலையாதே, காலாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வா என ஒவ்வொரு வார்த்தையிலும் தாத்தாவின் பாசமும், அக்கறையும் இருக்கும். கடிதங்களின் ஓரத்து மடுப்புகளில் கூட தாத்தா, பாட்டியின் அன்பு ஒட்டிக் கொண்டிருக்கும்.

கடிதப் போக்குவரத்தில் 'இப்டிக்கு உங்கல் அன்புள்ள மகன்', 'இப்படிக்கு உங்க அன்புல்ல பேத்தி' என தப்பு தப்பாய் எழுதியிருந்தாலும், அதில் வார்த்தைக்கு வார்த்தை அன்பு நிறைந்திருக்கும். அவை பொக்கிஷம் போல் அவ்வப்போது எடுத்து எடுத்து படிக்கப்படுவதும் உண்டு.

ஆயிரம் எஸ்.எம்.எஸ். மெசேஜ்கள் அனுப்பினாலும், அவை ஒரே ஒரு கடிதம் சொல்லிய அன்பை முழுமையாகப் பரிமாறிவிட முடியுமா?

ஹேப்பி பர்த்டே கே.எஸ்.ரவிகுமார்ஜி...!

              1990ல் தமிழ் சினிமாவில் ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்த கே.எஸ்.ரவிகுமாருக்கு இது வெள்ளிவிழா ஆண்டு.. இந்த 25 வருடங்களில் இவர் அடைந்துள்ள உயரம் அளவிடமுடியாதது. தமிழ்சினிமாவின் இரு ஜாம்பவான்களான ரஜினியும் கமலும் தங்களது அன்பு பிடியால் இவரை கெட்டியாக பிடித்துக்கொண்டு, முறைவைத்துக்கொண்டு ஆளுக்கொரு படத்தில் இவரது டைரக்ஷனில் நடித்த்தே இதற்கு அழுத்தமான சாட்சி.

விக்ரம், தனுஷ் தவிர மற்ற அனைத்து முதல்வரிசை நடிகர்களும் இவரது டைரக்ஷனில் நடித்துவிட்டார்கள். நல்ல கதை யாரிடமிருந்தாலும் அதை வாங்கி அதற்கு தனது தெளிவான திரைக்கதையாலும் டைரக்ஷனாலும் உயிரூட்டக்கூடிய வல்லமை இவருக்கு உண்டு.. சரத்குமாரை முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைத்த பெருமையும் இவரையே சாரும்.

இதுவரை வெளிநபர்களின் கதைகளையே படமாக்கிவந்த கே.எஸ்.ரவிகுமார் சூப்பர்ஸ்டாரின் ‘கோச்சடையான்’ படத்திற்கு தானே கதை எழுதி அதை சூப்பர்ஹிட்டாகவும் மாற்றிக்காட்டியுள்ளார். இப்போது ரஜினியுடன் ‘லிங்கா’ படப்பிடிப்பை நடத்திக்கொண்டு இருக்கிறார்.

நயன்தாரா, அனுஷ்காவின் சம்பளம் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

              இதுவரை எந்தவொரு தமிழ், தெலுங்கு நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை என்று சொல்லும் அளவுக்கு எக்கச்சக்கமாக உயர்ந்திருக்கிறது நயன்தாரா, அனுஷ்காவின் சம்பளம். இவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 3 கோடி ரூபாய்! இருவருக்கும் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. எனவேதான் சம்பளத்தை வரலாறு காணாத அளவு உயர்த்தி உள்ளதாக காரணம் சொல்கின்றனர் திரையுலகைச் சேர்ந்தவர்கள்..

ஹிந்தியில் ஹிட்டான கஹானி படத்தின் தெலுங்கு ரீமேக்கான அனாமிகா படத்துக்காக நயன்தாராவுக்கு 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்தப் படம் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் தமிழில் வெளியானது. இரண்டு மொழிகளிலும் படம் அட்டர் ப்ளாப். தமிழில் அஜீத் ஜோடியாக நடித்த ஆரம்பம், ஆர்யாவுடன் நடித்த ராஜாராணி, உதயநிதியுடன் நடித்த இது கதிர்வேலன் காதல்ஆகிய மூன்று படங்களுமே பெரிய வெற்றியை அடையவில்லை.நயன்தாரா அது பற்றி கவலையேப் படாமல் தன் சம்பளத்தை 3 கோடியாக்கிவிட்டார்.

இவரைப்போல் அனுஷ்காவின் சம்பளமும் விண்ணைத்தொடுமளவுக்கு உயர்ந்துவிட்டது. ருத்ரமாதேவி என்ற சரித்திரப் படத்தில் நடிக்க இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் அனுஷ்கா. அடுத்தடுத்து தேடி வந்த படங்களில் நடிக்க மூன்று கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம்..

ஈசிஆர் சாலையில் இருந்து மவுண்ட் ரோட்டுக்கு வந்த அஜீத்!!

             அஜீத்தின் 55வது படத்தின் படப்பிடிப்பு முதல்கட்டமாக சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் நடந்தது. ரசிகர் கூட்டம் படையெடுக்கவே, பின்னர் செட் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால், செட் வேலைகள் முடிய சில மாதங்கள் ஆகும் என்பதால், அந்த கேப்பில் படப்பிடிப்பை தொடர நினைத்த அஜீத், கெளதம்மேனன் இருவரும் சில நாட்களாக இரவு நேரங்களில் அதே ஈசிஆர் சாலையில் படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.

ஆனால், நேற்று முன்தினம் சென்னையிலுள்ள மவுண்ட் ரோடு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள அப்பகுதியில் அஜீத் பைக் ஓட்டி வருவது போன்று முதலில் சில ஷாட்களை எடுத்த கெளதம்மேனன். பின்னர் அஜீத், வில்லன் சம்பந்தப்பட்ட சண்டை காட்சியில் சில முக்கிய ஷாட்களை படமாக்கினார்.

மேலும், அனுஷ்கா, சம்பந்தப்பட்ட சில காட்சிகளையும் அதே ஏரியாவில் படமாக்கியிருக்கிறார் கெளதம்மேனன். மக்கள் போக்குவரத்து மிகுதியான இடம் என்பதால், ரசிகர்களை படப்பிடிப்பு நடக்கும் எல்லைக்குள் நெருங்க விடாமல் இருக்க பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.

அரையாண்டில் செஞ்சுரி அடிக்கும் தமிழ் சினிமா!

இன்றைய தேதிக்கு சினிமா நன்றாக ஒடுகிறதோ இல்லையோ.. படமெடுக்க வரும் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை தாறு மாறாக உயர்ந்து வருகிறது. லாபம் கிடைக்காவிட்டாலும், சினிமாவுக்கே உரிய கவர்ச்சி, பலரையும் தயாரிப்பாளராக்குகிறது.

அப்படி படம் தயாரிக்க வந்துள்ள திடீர் தயாரிப்பாளர்களால் இன்று 350 படங்கள் தயாரிப்பில் உள்ளன.

வாரத்துக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து படங்களாவது வெளியாகின்றன. கோச்சடையான் மாதிரி பெரிய படம் வரும்போது மட்டும் வாரத்துக்கு ஒன்றாக மாறிவிடுகிறது இந்த எண்ணிக்கை.

 மே 30ம் தேதி,  மட்டுமே 5 புதிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.

தவிர ஜூன் மாதம் மட்டும் 15 முதல் 18 புதிய படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன.

ஆக அரையாண்டுக்குள் செஞ்சுரி அடித்து சாதனைப் படைக்கவிருக்கிறது தமிழ் சினிமா.

இவற்றில் எத்தனை வெற்றிப் படங்கள் என்று மட்டும் கேட்டுடாதீங்க!

பொதுவான பொய்கள்..!

டீ கடைகாரர்:
இப்ப போட்ட வடை தான்
சார். .

மெடிக்கல் ஷாப் :
பேரு தான் வேற ,
இது அதைவிட நல்ல மருந்து .. .

பள்ளிசெல்லும் குழந்தை :
வயிறு வலிக்கிற
மாதிரி இருக்கும்மா .. .

ரியல் எஸ்டேட் செய்பவர் :
பத்து அடி ஆழத்துல நல்ல தண்ணி,
பக்கத்துலையே ரிங் ரோடு வருது ,
IT பார்க் வருது ..

காய்கறி கடையில்:
காலைல பறிச்ச
காய் தான்..

Sales Rep : இன்னையோட இந்த offer
முடியுது சார் ..

பஸ் கண்டக்டர்:
வழில எங்கயும்
நிக்காது , பாயிண்ட் டு பாயிண்ட்..
சில்ற இல்லமா…

நண்பன்:
உனக்கு கண்டிப்பா ட்ரீட்
வைக்கிறேன் மச்சி..!

#தப்பு தப்புதான்..

லிங்காவுக்கு அடுத்து ஷங்கர் படம்... ரஜினி முடிவு!

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது லிங்கா படம் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி, அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லிங்கா படத்தின் படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

லிங்காவுக்கு அடுத்து ஷங்கர் படம்... ரஜினி முடிவு!

நான்கு நாயகிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா மற்றும் லாரன் இர்வின் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் ரஜினி ஜோடிகளாக நடிக்கின்றனர். நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

இந்தப் படம் கடந்த மே 2-ம் தேதி மைசூரில் தொடங்கியது. தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து நடித்து வருகிறார் ரஜினி. யாருக்கும் அனுமதி கிடைக்காத மைசூர் அரண்மனையில் ரஜினியின் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்குகிறது. அங்கு மீதிப்படத்தை முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை திரும்பும் ரஜினி, ஷங்கருடன் கதை விவாதத்தில் ஈடுபடப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஷங்கர் தனது ஐ படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். ஒரு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கியாம். ஜூன் இறுதி அல்லது ஜூலையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். படத்தை வெளியிட்ட கையோடு, சில தினங்கள் ஓய்வெடுத்த பிறகு, ரஜினியின் படத்துக்காக களமிறங்கப் போகிறாராம் ஷங்கர்.

முன்பெல்லாம் மூன்றாண்டுகளுக்கொரு படம் என்ற கொள்கை வைத்திருந்த சூப்பர் ஸ்டார், இந்த ஆண்டே மூன்று படங்களில் நடிப்பது, ரசிகர்களுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சிதானே!

என்ன நடக்கிறது 'தாரை தப்பட்டை'யில்?

            தனது பாத்திரத்திற்கு சசிகுமார் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவது தான் 'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு துவங்காததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

'பரதேசி' படத்தினைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'தாரை தப்பட்டை'. இப்படத்தின் இசைக்காக மீண்டும் இளையராஜாவுடன் கூட்டணி சேர்கிறார் பாலா. செழியன் ஒளிப்பதிவு செய்ய, சசிகுமார் - பாலா இருவருமே இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.

இப்படத்திற்காக 12 பாடல்களை 6 நாட்களில் முடித்துக் கொடுத்துவிட்டார் இளையராஜா. மார்ச் 1ம் தேதி முதல் படப்பிடிப்பு என்று அறிவித்தார்கள். ஆனால் படப்பிடிப்பு இன்னும் துவங்காமல் இருக்கிறது.

ஏன் ஏன்று விசாரித்த போது, "இயக்குநர் பாலா படத்திற்கான மொத்த திரைக்கதை, பாடல்கள் என அனைத்தையும் முடித்து விட்டாராம். நாளைக்கு படப்பிடிப்பு என்றால் கூட போகலாம் என்று அனைவரும் தயாராக இருக்கிறார்கள்.

நாயகனாக நடிக்க இருக்கும் சசிகுமார், படத்தில் தனது வேடத்திற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். நாதஸ்வரம், மிருதங்கம் உள்ளிட்ட பயிற்சி, கரகாட்டாம் பயிற்சி என்று தீவிரம் காட்டி வருகிறார்.

படத்தில் சசிகுமாரின் கெட்டப் என்ன என்பதை முடிவு செய்துவிட்டார் பாலா. தற்போது தாடி வளர்த்து இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கும் சசிகுமார், பயிற்சிகள் முடித்து படப்பிடிப்பு கிளம்பும் நேரத்தில் படத்தின் கெட்டப்பிற்கு ஏற்றவாறு மாற இருக்கிறார்" என்றார்கள்.

முடிவடைந்த 'காவியத்தலைவன்' படப்பிடிப்பு..!

 கடந்த ஒரு வருடமாக வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வந்த 'காவியத்தலைவன்' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது.

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வந்த படம் 'காவியத்தலைவன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வந்தார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ராடியன்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

1930ல் இருந்த நாடக கம்பெனிகள் சம்பந்தப்பட கதை என்பதால் காரைக்குடி, தென்காசி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் இறுதி பாடலுக்காக மட்டும் படக்குழு காத்திருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது கடைசிப் பாடலை கொடுத்தவுடன், சென்னையில் செட் போடப்பட்டு சித்தார்த் கலந்து கொண்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. நேற்று இரவு ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவுற்றது.

இது குறித்து சித்தார்த் தனது ட்விட்டர் தளத்தில், " வசந்தபாலனின் 'காவியத்தலைவன்' படப்பிடிப்பு முடிவுற்றது. மறக்க முடியாத பயணம். இறுதிகட்ட பணிகள் துவங்கிவிட்டன. படக்குழுவிற்கு நன்றி " என்று தெரிவித்து இருக்கிறார்.

இறுதிகட்டப் பணிகள் முடிந்து, இரண்டு மாதத்திற்குள் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.