Sunday, December 1, 2013

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்..!



நடிகர் : விமல், பார்த்திபன்

நடிகை : மனிஷா, பூர்ணா

இயக்குனர் : கரு.பழனியப்பன்

இசை : வித்யாசாகர்

ஓளிப்பதிவு : அர்பிந்து சாரா



பழனி-பண்ணக்காடு வழித்தடத்தில் செல்லும் ஒரு அரசு பேருந்தை மையமாக வைத்து கதை ஆரம்பிக்கிறது. இந்த பஸ் பழனியில் இருந்து தினமும் மாலை பண்ணக்காடுக்கும், மறுநாள் காலை பண்ணக்காட்டில் இருந்து பழனிக்கும் செல்லும். இந்த பஸ்சின் டிரைவர் பார்த்திபன் சீனியர். கண்டக்டராக வரும் விமல் வேலைக்கு புதுசு.

இந்த பஸ் ஒரு தடவை மட்டும் செல்வதால், டிரைவர்-கண்டக்டர் இரவில் பண்ணக்காடு பகுதியில் தங்குவது வழக்கம். இதனால் அப்பகுதி மக்களுடன் நண்பர்களாக பழகி வருகின்றனர். இவர்களுக்கு பண்ணக்காட்டில் தங்குவதற்கு இடம், உணவு அனைத்தையும் பொதுமக்களே செய்து தருகிறார்கள்.

பார்த்திபன் சீனியர் டிரைவர் என்று சொல்லிக் கொண்டு எப்போதும் போதையில் வண்டி ஓட்டுகிறார். இந்த பஸ்சில் தான் பண்ணக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் வழக்கமாக பழனிக்கு செல்வார்கள். அதில் ஒரு பெண்ணாக மனிஷா வருகிறார். அவளை பார்த்தவுடன் மயங்குகிறார் விமல். அவருடைய காதலை அவளிடம் சொல்ல முயற்சிக்கிறார். மனிஷாவும் காதலை ஏற்றுக் கொள்கிறார்.

அண்ணா சார் என்ற பள்ளி வாத்தியாராக வருகிறார் ராஜேஷ். இவர் தன் நண்பரின் மகளான பூர்ணாவை தன் மகள் போன்று வளத்து வருகிறார். ஆசிரியையான பூர்ணாவை தன் வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறார்.

அந்த ஊரில் வசிக்கும் ரமணா, தன் தாயுடன் ராஜேஷ் வீட்டிற்கு சென்று பூர்ணாவை தனக்கு திருமணம் செய்து தரும்படி கேட்கிறார். அதை மறுக்கும் ராஜேஷ், “என் மகனுக்கு பூர்ணாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறேன். அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். மகன் ஊர் திருவிழாவுக்கு வரும் பொழுது திருமண நடத்த போகிறேன்” என்று கூறுகிறார்.

இதற்கிடையே அந்த ஊரின் டேம் பொறுப்பாளரான விதார்த், அந்த வேலையை மட்டும் செய்யாமல் ஊரில் உள்ள அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார். ராஜேஷ் மகனுக்கு நண்பர் என்பதால், அவரது வீட்டில் உள்ள அனைத்து வேலையையும் செய்கிறார்.

ஒரு கட்டத்தில் பழனியில் இருந்து பண்ணக்காடுக்கு பஸ் செல்லும் பொழுது வண்டி இன்ஜின் கோளாறு காரணமாக பாதி வழியில் நிற்கிறது. அதனை சரிசெய்யும் மெக்கானிக்கான சந்தான பாரதி, வண்டியை தன் உதவியாளரை சரி செய்ய சொல்லிவிட்டு பார்த்திபனுடன் சேர்ந்து மது அருந்துகிறார்.

இருவரும் நிலை தெரியாத அளவுக்கு மது அருந்திக்கொண்டிருக்கும் பொழுது வண்டி சரியாகி விடுகிறது. பார்த்திபனால் வண்டி ஓட்ட முடியாத சூழ்நிலையில் இருக்க, பஸ்சை விமல் ஓட்டிச் செல்கிறார். இருவரும் பாட்டுப் பாடிக்கொண்டி செல்கிறார்கள். அந்த நேரத்தில் ஒருவன் வண்டி முன்பு வந்து விழுந்து விடுகிறான். தலையில் பலத்த அடிபட்டு கிடக்கும் அவனை அந்த வழியில் வரும் ஒரு ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறுகிறார்கள்.

நான் தான் அவன்மீது ஏற்றி விட்டேன் என்று நினைக்கும் விமல், பயத்துடன் அடிப்பட்டவன் பையை எடுத்துக் கொண்டு பண்ணக்காடு செல்கிறார். அந்த பையை திறந்து பார்க்கும் விமல், அடிப்பட்டவன் ராஜேஷின் மகன் என்று தெரிந்து கொள்கிறான். அதை ஊர் மக்கள் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பார்த்திபன் சொல்ல, சொல்ல முடியாமல் விமல் தவிக்கிறான்.

இறுதியில் அடிப்பட்டவன் நிலை என்ன? விமல் ஊர் மக்களிடம் உண்மையை சொன்னானா? உண்மையாக அவன் எப்படி அடிப்பட்டான் என்பதே மீதிக்கதை.

கருப்பு என்னும் பார்த்திபன், நக்கல், நையாண்டி என அவருக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார். சுப்பையாவாக வரும் விமல் நல்ல கண்டக்டராக நடித்திருக்கிறார். இவருக்கும் மனிஷாவிற்கும் இடையேயான காதல் காட்சிகளில் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சாமி கதாபாத்திரத்தில் வரும் விதார்த்துக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் கிடைத்திருக்கிறது. அதை திறமையாக செய்திருக்கிறார்.

பாவாடை தாவணியில் வரும் மனிஷாவுக்கு கிராமத்து வேடம் பொருந்தவில்லை. டீச்சரான பூர்ணாவும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ரமணா, சிங்கம்புலி, மோனிகா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் சிலர் மட்டுமே மனதில் பதிகிறார்கள்.

யுகபாரதியின் பாடல் வரிகளில் வித்யாசாகரின் இசையில் ஒரு சில பாடல்கள் மட்டுமே ரசிக்க முடிகிறது. அர்பிந்து சாரா ஒளிப்பதிவில் மலைப்பகுதிகளை அழகாக நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். இதுவரை நேரடி தமிழ் படங்களையே எடுத்து வந்த கரு.பழனியப்பன் முதல் முறையாக மலையாளத்தில் இருந்து இப்படத்தை தமிழுக்கு கொண்டு வந்து வெற்றி பெற முயற்சித்திருக்கிறார்.

பேருந்தில் நடக்கும் சம்பவங்களை அதிகப்படியாக வைத்திருந்தால் ரசிகர்கள் இன்னும் ரசித்திருக்கலாம்.

மொத்தத்தில் 'ஜன்னல் ஓரம்'  மிதமான காற்று வருகிறது.

0 comments:

Post a Comment