Sunday, December 1, 2013

சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்!


இலைகளை உதிர்த்துவிட்டு வெள்ளாடை கட்டாத விதவையாய் மரங்களெல்லாம் வாடி நிற்கிறபோது இதோ அவை துளிர்த்து சிரிக்கிற வசந்த காலத்தை நினைத்தால் மகிழ்ச்சியளிக்கிறது.

ஆற்றுப் படுகையின் வெடிப்புகளைப் பார்க்கிறபோதெல்லாம் நாளை அங்கு ஈரவாடையோடு பசுமை நம்பிக்கைக் கோலங்கள் வரைவதை நினைத்தால் உற்சாகம் உள்ளூர ஊற்றெடுக்கிறது.

கோடை காலத்தில் வெப்பம் தகித்து வியர்வை ஆறு ஓடுகிறபோது தை மாத சுகந்தமான குளிர்க்காற்று மனத்திற்கு சுகாமாயிருக்கிறது.

வெப்பமும், வெதுவெதுப்பும், குளிரும், கூதலும் ஒரு வருடத்தின் பருவங்கள் அதுபோலத்தான் மனிதவாழ்விலும் சுகமும் துக்கமும் வந்து போகும்.

இன்றைய இரவு நாளை விடிந்து விடும்; துன்பங்கள் துயரங்கள் மடிந்து விடும். நடக்கிறவரை நட பாலைவனப் பயணத்திலும் ஒருநாள் பசுஞ்சோலை தென்படும் என்ற நம்பிக்கையோடு நட.

முள்செடியின் கீறல்களை சகித்துக்கொள்ளாவிட்டால் தேன் எப்படி எடுக்க இயலும்?. கல்லிலும் கால் நடக்காது; முள்ளிலும் வதைபடாது ஒரு காலும் முன்னேற்றத்தை முத்தமிட முடியாது தோழா.

உயர்வின் உச்சியிலே ஒளி வீசிக்கொண்டிருக்கும் உயர்ந்த மனிதர்களின் உயரத்தை மட்டுமே நம்மில் பலர் எண்ணி வியக்கின்றோமேயொழிய அந்த நிலைக்குயர அவர்கள் பட்ட துன்பங்களையும் எடுத்தத் தொடர் முயற்சிகளையும் எண்ணிப்பார்ப்பதில்லை.

தந்தையின் திருவாக்கைக் காப்பதற்கு பதினான்கு ஆண்டுகள் கானகம் செல்ல துணியாவிட்டால் இன்று இராமன் நாமமில்லை
தோளிலே சிலுவை சுமந்து கல்வாரிக்கு நடக்காவிட்டால் இயேசு பிரானுமில்லை; கபிலவஸ்துவைவிட்டு வெளியேறாவிட்டால் போதிமர புத்தனுமில்லை.

கல்லடி, சொல்லிடி, கொலை மிரட்டல் போன்ற எதிர்ப்புகளை பொறுமையோடும் நம்பிக்கையோடும் சமாளித்தப் பின்னரே நபிகள் இஸ்லாத்தை உலகுக்குப் பரப்பினார்.


வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியையே தழுவிய ஆப்ரகாம் லிங்கன் பின்னாளில் அதிபராக எழவில்லையா?

எத்துணை தோல்விகளையும் வெற்றியாக உருமாற்றிய எடிசனை உலகம் கொண்டாடவில்லையா? உடல் பழுதுபட்டாலும் உயர் எழுத்துக்களால் எலன் கெல்லர் பிரகாசிக்கவில்லையா?


இன்றும் நம்மோடு வாழும் சிலர் புயலையும் கடந்து வெள்ளி நிலவாய் பிரகாசிக்க நாம் மட்டும் இயலாமைகளையே வாழும் இலக்கணமாய் வைத்துக்கொண்டு வாழ்வது தகுமா?

நமது சொந்தச் சிறைகளிலிருந்து முதலில் வெளியேற வேண்டும். காட்டு யானையைப் பழக்குவதற்காக முதலில் அதன் காலை சங்கிலியால் பிணித்துத் தூணில் கட்டுவார்கள்.

காலப்போக்கில் எதிலும் கட்டப்படாத சிறிய சங்கிலி மட்டுமே அதன் காலில் தொங்க அந்த யானை நினைவால் வாழ்நாள் முழுவதும் சிறைப்பட்டிருக்கும்.
நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது மாபெரும் உண்மை. நம்பிக்கையோடு நாள்களை நடத்திக் கொண்டிருப்பவர் வெள்ளி நட்சத்திரமாகிறார். நம்பிக்கை நலிந்து போனவர் தம்முள் நரகத்தை உருவாக்கி தம்மையே பலியிட்டுக் கொள்கிறார்.

எல்லா இரவுகளும் விடிந்திருக்கின்றன; நாளை விடியல் இல்லையென்று யார் கூறினாலும் நாம் ஏற்கப் போவதில்லை.


மனிதர்கள் வெறும் காற்றைச் சுவாசிப்பதால் வாழவில்லை; நம்பிக்கையைச் சுவாசிப்பதால்தான் வாழ்கிறார்கள். பிழைக்கவே மாட்டேன் என நினைக்கும் நோயாளிக்கு எத்தகைய மருந்து கொடுத்தும் பயனென்ன?

தூந்திர வெளிகளில் துயரத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கின்ற எஸ்கிமோக்களை வாழவைப்பதே என்றேனும் ஒரு பொழுது சூரியக் கதிர் எட்டிப் பார்க்குமென்ற நம்பிக்கைதான்.


எப்போதும் வெளிச்சத்தை நோக்கி நடக்க வேண்டும். நிதமும் எதிர்காலம் ஒளிமயமானது என்கிற நம்பிக்கையைச் சுமந்து நடைபயில வேண்டும். அப்போதுதான் இந்த வாழ்க்கையின் மீது சலிப்போ வெறுப்போ இருக்காது.

பாதைகள் பசுமையானவை; பயணங்கள் இனிமையானவை என்று நிதமும் எண்ண வேண்டும். துன்பங்கள் எதிர்பட்டாலும் அதைக் கண்டு துவண்டுவிடாமல் மேலே மேலே முன்னேற வேண்டும்.
துன்பம் தொடாத மனிதன் யாரேனும் உண்டா? துன்பத்தைத் தாங்கிக்கொண்டு நம்பிக்கையோடு பயணம் செய்தால் இன்பம் தானாக நம்மை வாழ்த்தும்.

சுடச்சுடத்தான் தங்கம் ஒளிரும்; பட்டை தீட்டத் தீட்டத்தான் வைரம் ஒளி வீசும். அதுபோல நம்மை வருத்தும் துயரம் யாவும் நம்மை பக்குவப்படுத்தி சிறந்த மனிதனாக உருவாக்குகின்றது. வாழ்க்கையை வளப்படுத்தும் நோக்கிலே எதிர்படும் சவால்களை நம்பிக்கையோடு போராடி வெல்ல வேண்டும்.

‘சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்’ என்ற கவிஞர் வைரமுத்து கூற்றுக்கிணங்க முன்னேற்றத்தைத் தரிசிக்க முட்டுக்கட்டைகளை எல்லாம் தகர்த்தெறிந்து போராடுகிறவனே மனிதன்.
நமது முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு. பசுமையான நிலத்தில் தூவப்பட்ட விதைகள் முளைக்காமல் போனதில்லை. நம்பிக்கை நம்மை மனிதர்களாக்கின்ற மகாமந்திரம்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. அதை எப்போதும் நெஞ்சிலே வைத்து வளர்த்தாக வேண்டும்.

‘காலம் இருண்டிருந்தாலும் இதயத்தையே தீபமாகப் பிடித்துக்கொண்டு தீர்க்க தரிசனத்தோடு முன்னேறுவோம், உழைப்புச் செங்கோலை உயர்த்திப் பிடிப்போம், நம் காலடிச் சுவடுகளால் எதிர்காலங்கள் பிரகாசிகட்டும்’ என்ற சூரிய காந்தன் வரிகளை துவழும் போதெல்லாம் நினைவு கொள்வோம்

0 comments:

Post a Comment