Wednesday, January 8, 2014

தொட்டபெட்டாவில் மனிதர்களை கொன்று தின்னும் மர்ம விலங்கு?






நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா மலைச்சரிவில் உள்ள சோலாடா கிராமத்தைச் சேர்ந்த கவிதா (வயது-30), என்ற பெண் அருகிலுள்ள ஆடாசோலை குக்கிராமத்தில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கிவர் சனிக்கிழமை மாலை நடந்து சென்றபோது வழியில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். இவரை இரு சிறுத்தைகள் சேர்ந்து தாக்கியதாக அப்பகுதி மக்களும், புலி தாக்கியிருக்கலாம் என வனத்துறையினரும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தொட்டபெட்டா அருகிலுள்ள சின்கோனா பகுதியை அடுத்த அட்டபெட்டு பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன் (வயது-58) மர்ம விலங்கால் கொல்லப்பட்டுள்ளார். இவர் திங்கள்கிழமை மாலை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றவர் இரவு 7 மணி வரை வீடு திரும்பவில்லை.


இதையடுத்து அவரது குடும்பத்தாரும், அருகிலுள்ளோரும் அவரைத் தேடி வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். வனப்பகுதிக்குள் மர்ம வனவிலங்கு ஒரு உடலைக் கடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.  ஆனால்,  சின்னப்பனை தேடிக்கொண்டு தீப்பந்தத்துடன் போன பொதுமக்களின்  சத்தத்தைக் கேட்டவுடன் அவ்விலங்கு தின்றுகொண்டிருந்த உடலை போட்டுவிட்டு புதருக்குள் மறைந்துவிட்டது.


பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது, அது சின்னப்பன் தான் என்பது உறுதியானது. இதுகுறித்த தகவல் வனத்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. இறந்த சின்னப்பன் குடும்பத்திற்கு அரசின் உடனடி நிவாரண உதவியாக ரூ. 25,000 வழங்கப்பட்டுள்ளது.


சோலாடா, அட்டபெட்டு பகுதிகளைச் சேர்ந்தவர்களின் உயிரிழப்பிற்குக் காரணமான ஆட்கொல்லி வனவிலங்கு, சிறுத்தையா அல்லது புலியா என்பதில் குழப்பம் உள்ளது. அந்த ஆட்கொல்லி வனவிலங்கை உயிருடன் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.


இதன் ஒரு கட்டமாக, முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு மற்றும் தெற்கு வனக்கோட்டங்களிலிருந்து தலா ஒரு கூண்டுகள் கொண்டுவரப்பட்டு, சந்தேகத்திற்கிடமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.


இந்த 5 இடங்களிலும் இரகசியமாக காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இனம் காணப்படாத இவ்விலங் கைப் பிடிக்கும் பணியில் 30 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டபெட்டு முதல் கல்லட்டி பகுதி வரை தொடர் ரோந்துப்பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒலிபெருக்கி மூலம் இப்பகுதிகளில் வனப்பகுதிகளுக்குள் யாரும் அனுமதியின்றி செல்லக் கூடாது என்றும் அறிவித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment