Wednesday, December 11, 2013

மகாகவி பாரதியார் - பிறந்தநாள் -11 டிசம்பர்!




 காக்கைச் சிறகினிலே நந்தலாலா
 நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா

 நல்லதோர் வீனை செய்து அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

 நெருங்கின பொருள் கைபட வேண்டும்
 மனதில் உறுதி வேண்டும்

 வட்ட கரிய விழியில் கண்ணம்மா
 வானக் கருனைக் கொள்

 இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு. அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள். வைரகவி என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், சினிமாப் பாடல்களாக வந்ததால் அவை பெரும் புகழ்ப் பெற்றன. ஆனால் சினிமா நமக்குக் காட்டாத இன்னும் பல அரிய கவிதைகளை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி அவர்தான் மீசைக் கவிஞன் என்றும் முண்டாசு கவிஞன் என்றும் தமிழ் இலக்கியம் உலகம் போற்றும் மகாகவி பாரதியார்.

அவருக்கு கவிதை என்ற வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ந்தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் என்னும் ஊரி சின்னச்சாமி அய்யருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பாரதியார். அவருக்கு பெற்றோர் இட்ட இயற்பெயர் சுப்ரமணியன். சுப்பையா என அவரை செல்லமாக அழைத்தனர்.

சுப்பையாவுக்கு 5 வயதானபோது அவரது தாயார் இறந்து போனார் 2 ஆண்டுகள் கழித்து தந்தையார் மறுமணம் செய்து கொண்டார் சிறு வயதிலிருந்தே சுப்பையாவுக்கு மொழி மீது சிறந்த பற்றும் புலமையும் இருந்தது. 7 வயதிலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார் அவருக்கு 11 வயதானபோது அவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் வியந்து பாராட்டி அவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்றிலிருந்து அவர் பெயர் சுப்ரமணிய பாரதி என்றானது. பாரதி தமிழும் கவிதையுமாக தமிழுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவரது தந்தையோ தனது மகன் தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சிப் பெற வேண்டும் என விரும்பி அவரை தமிழ்ப்பள்ளியில் சேர்க்காமல் ஆங்கிலமும் கணிதமும் பயில்வதற்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு சென்று கல்வி பயின்ற பாரதிக்கு படித்துக்கொண்டிருந்தபோதே செல்லம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார் தந்தை. ஆனால் பின்னாளில் இது போன்ற பால்ய விவாகத்தை வன்மையாக கண்டித்தார் பாரதி. "பாலருந்தும் மழலையர் தம்மையே கோலமாக மணத்திடைக் கூட்டும் இப்பாதகர்கள் இன்னும் ஆயிராமாண்டு அடிமைகளாக இருந்து அழிவர்" என்று சபித்தார்.

நல்ல நிலையில் இருந்த பாரதியின் தந்தை எட்டயபுரத்தில் பருத்தி அரவை ஆலை நிறுவ விரும்பினார். அந்த ஆலைக்காக வெளிநாட்டிலிருந்து கப்பல்களில் வந்துகொண்டிருந்த இயந்திரங்களும் உதிரிப் பாகங்களும் கடலில் மூழ்கவே அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அந்தக் கவலையிலிருந்து மீள முடியாமல் நோய்வாய்ப் பட்டு அவர் இறந்து போனார். அப்போது பாரதிக்கு வயது 16 தான் தந்தையின் மறைவிற்குப் பிறகு பாரதியின் குடும்பத்தில் வறுமை வந்து சேர்ந்தது.

பிறகு காசிக்குச் சென்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும் இந்தியையும் கற்றார். சமஸ்கிருத மொழியில் முதல் வகுப்பில் தேறினார் ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன் போன்றோரின் கவிதைகளில் அவருக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அதன்காரணமாக அவர் பின்னாளில் ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரி கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இந்தி சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம் பெங்காலி ஹச் போன்ற மொழிகளிலும் புலமைப் பெற்றிருந்தார் பாரதி. அத்தனை மொழிகளில் புலமைப் பெற்றிருந்ததால்தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று துணிந்து சொன்னார்” பாரதி.

தீண்டாமையை அறவே வெறுத்தவர் பாரதி. அதற்கு தன்னையே முன் உதாரணமாக்கிக்கொண்டார் தீண்டாமை எனும் கொடுமைக்கு ஆளானோரிடம் அன்பு செலுத்தியதோடு அவர்களுக்கு இல்லாதது தனக்கு வேண்டியதில்லை என்று கூறி தான் அணிந்திருந்த பூ நூலை அறுத்தெரிந்தார. நான்கு ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு திரும்பிய பாரதி எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவைக் கவிஞாராக பணியாற்றினார்.

1903 ஆம் ஆண்டு 21 ஆவது வயதில் அவரது எழுத்துக்கள் முதன்முதலில் அச்சில் வந்தன. அதற்கு அடுத்த ஆண்டு மதுரை சேதுபதிப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார். 1905 ஆம் ஆண்டு சுதந்திர வேட்கைக் காரணமாக அரசியலில் பிரவேசிக்கத் தொடங்கினார் பாரதி.

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. சகோதரி நிவேதிதாவை சந்தித்தப் பாரதி அவரையே தந்து ஞான குருவாக ஏற்றுக் கொண்டார். 1907 ஆண்டில் இந்தியா என்ற வார ஏட்டையும் பாலபாரதம் என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். அப்போது பாரதியின் கவனம் இந்திய சுதந்திர போராட்டத்தின் பக்கம் திரும்பியது.

சுதந்திரத்தை வலியுறுத்தும் கட்டுரைகளையும் தலையங்கங்களையும் பிரசுரித்தார், வ.உ.சிக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை கடுமையாக கண்டித்து கட்டுரைகள் எழுதினார். பிரிட்டிஷ் ஆட்சியாளரின் கவனம் பாரதி பக்கம் திரும்பியது. பாரதியை கைது செய்ய முனைந்தனர். அதனையறிந்த பாரதி தன் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ஃப்ரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருந்த பாண்டிச்சேரியில் சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்தார். அவ்வாறு வாழ்ந்தபோதுதான் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலிசபதம், போன்ற புகழ்பெற்ற அமரக் கவிதைக் கவிதைகளை எழுதினார்.

அதோடு 1912 ஆம் ஆண்டு பகவத் கீதையை தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்டார் பாரதி பாண்டிச்சேரியில் இருந்தவாறே அவர் இந்தியா பத்திரிக்கையின் மூலம் தொடர்ந்து சுதந்திர வேட்கையைத் தூண்டிவிடும் கட்டுரையை எழுதினார். பாரதியின் குரலுக்கு தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா பத்திரிக்கைக்கு தடை விதித்தது.

1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளியேரிய பாரதி தமிழ்நாட்டு எல்லையில் பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப் பட்டு 34 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். விடுதலையானதும் கடையம் எனும் ஊரில் குடியேறினார் பாரதி. அங்கு வறுமையில் வாடிய அவர் தனது சிரமத்தை விவரித்து எட்டயபுர மன்னருக்கு கடிதம் எழுதினார் ஆனால் பாரதிக்கு எந்த உதவியும் கிடைக்க வில்லை. பாரதியின் மனைவி செல்லம்மாள் வீட்டின் வறுமை தெரியாமல் கணவரைப் பராமரித்தார். அத்தகைய மனைவி வாய்த்ததால்தான் குடும்ப கவலையே இல்லாமல் தமிழ்ப்பணியிலும் பொதுவாழ்விலும் ஈடுபட முடிந்தது.

பாரதியால் வறுமையில் கூட பாரதியிடம் தன்மானமும் செருக்கும் இருந்தது பொதுவாக கொடுக்குற கை மேலேயும் வாங்குகிற கை கீழேயும் இருக்கும் ஆனால் அந்த இலக்கணத்தையும் மாற்றினார் பாரதி ஒருமுறை அவரின் பணக்கார நண்பர் தட்டில் பணமும் பட்டாடையும் வைத்து பாரதியிடம் நீட்டினார் “தட்டை உமது கையிலேயே வைத்திரும்” என்று கம்பீரமாய் சொன்னபடி தமது கைகளால் அவற்றை எடுத்துக்கொண்டாராம் பாரதி.

கவிராஜன் என்பதால் அத்தனை மிடுக்கு என்று கூறுகிறது ஒரு குறிப்பு. மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் வயிறு நிறைய வேண்டும் என விரும்பியவர் பாரதி. அதனால் வீட்டில் செல்லம்மாள் வைத்திருந்த கொஞ்சம் அரிசியையும் காகங்களுக்கு வாரி இறைத்து விட்டு மதியம் உண்ண உணவு இல்லாமல் அவர் பசியோடு இருந்த நாட்களும் உண்டு.

“காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று பாடியவராயிற்றே அவர் ஒருசமயம் நண்பர் ஒருவர் தமக்கு அளித்த பட்டாடையை வழியில் மேலாடையின்றி அவதிப்பட்ட ஓர் ஏழைக்கு போர்த்தி மகிழ்ந்தார் பாரதி. இப்படி தாம் வறுமையில் வாடியபோது கூட மற்றவர்களுக்கு வாரி வழங்கினார் அந்த மகாகவி ஆனால் அவரது வாழ்க்கையில் வறுமையைத் தந்த இயற்கை அவரது ஆயுளிலும் தாராளம் காட்ட மறுத்துவிட்டது.

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதி எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எறிந்தது அதனால் பலத்த காயமுற்று நோய்வாய்ப் பட்டார். சிறிது நாட்களில் வயிற்றுக் கடுப்பு நோயால் அவதியுற்று அதே ஆண்டு செப்டம்பர் 11 ந்தேதி தனது 39 ஆவது வயதில் காலமானார் பாரதி.

இளம் வயதிலேயே அவர் மாண்டது அவலம் என்றால் அதை விட இன்னும் ஒரு சோகமான நிகழ்வை கவிராஜன் கதை’ என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார் கவிஞர் வைரமுத்து. பாரதியின் இறுதி ஊர்வலத்தில் மிகச் சிலரே கலந்துகொண்டனர், அதனைப் குறிப்பிடும்போது:

இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே, மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ அவன உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் இல்லையே!

தமிழ் பாரதிக்கு கிடைத்த வரம் பாரதி தமிழுக்கு கிடைத்த வரம். பாரதி குழந்தைகளுக்காக பாடினார், பெண்களின் முன்னேற்றத்திற்காக் பாடினார், அறியாமை நீங்கவும் ஜாதி வெறியை சாடவும் நாடு விடுதலைப் பெறவும் பாடினார். அந்தத் தீர்க்கத்தரிசியின் பல கனவுகள் பலித்தன அவர் இன்னும் அதிகம் காலம் வாழ்ந்திருந்தால் தமிழ் இன்னும் வளம் பெற்றிருக்கும் தமிழனும் வளம் பெற்றிருப்பான்.

மனித நேயமும் பெண் முன்னேற்றமும் ஜாதி ஒழிப்பும் சமத்துவமும் வறுமை ஒழிப்பும்தான் பாரதியின் வாழ்க்கைக் கனவுகளாயின அந்தக் கனவுகள் மெய்ப்படும் என்ற தன்னம்பிக்கையை அவர் எப்போதுமே இழந்ததில்லை. நமக்கும்கூட அந்த விதி பொருந்தும் நாம் விரும்பும் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையோடு பயணித்தால் நாம் விரும்பும் வானம் நமக்கும் வசப்படும் என்பதுதான் பாரதியின் 39 ஆண்டுகால வாழ்க்கை நமக்கு சொல்லும் முக்கிய பாடம்..!

0 comments:

Post a Comment