Saturday, November 2, 2013

ரோஹித் சர்மா இரட்டை சதம்: இந்திய அணி 383/6 எடுத்து அசத்தல்!




ஆஸ்திரேலிய அணியுடனான தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 383 ரன் எடுத்தது. தீபாவளி சர வெடியாக, ரோஹித்  சர்மா இரட்டை சதம் அடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை பேட் செய்யப் பணித்தது. இதை அடுத்து இந்திய அணியில் துவக்க வீரராகக் களம் இறங்கினர் ரோஹித்  சர்மா, ஷிகர் தவான் ஆகியோர். இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்தது. ஷிகர் தவான் 57 பந்துகளில் 60 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.


பின்னர் வந்த விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா 30 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 28 ரன் எடுத்தார். யுவராஜ் சிங் 14 பந்துகளில் 12 ரன் எடுத்தார். இதில் 1 சிக்ஸர் அடங்கும். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 33.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களாக இருந்தது.
பின்னர் வந்த கேப்டன் தோனியும், ரோஹித் சர்மாவும் இணைந்து 5 வது விக்கெட்டுக்கு அதிரடி காட்டினர். ரோஹித் சர்மா தனது இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். சிக்ஸர்களாக அடித்து, ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டி, கிரிக்கெட் தீபாவளியை பெங்களூர் ரசிகர்களுக்கு காணிக்கை ஆக்கினார் ரோஹித் சர்மா. 158 பந்துகளில் 16 சிக்ஸர்களும், 12 பவுண்டரிகளும் அடித்து, 209 ரன் எடுத்து அசத்தினார் ரோஹித் சர்மா.


தோனி 38 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடித்து 62 ரன் எடுத்தார்.
இருவரும் இணைந்து, 5 வது விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தனர். இதை அடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 383 ரன் எடுத்து அசத்தியது.


ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில், மூன்றாம் இடம் பிடித்தார். முன்னதாக சேவாக், சச்சின் ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.


இதன் மூலம் 384 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment