Wednesday, October 2, 2013

உயிர் தியாகத்தில் உருவான அமராவதி அணை!





திருப்பூர், கரூர் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதில் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல கிளை நதிகளாக உருவாகி சின்னாறு அருகே சங்கமித்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பின்னர் காவிரியில் கலக்கிறது.


சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கில் அமராவதி ஆற்றை ஒட்டிய பல கிராமங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. 1950களில் தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்க பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம், பவானிசாகர் அணை பாசன திட்டம் என பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது தான் அமராவதி ஆற்றில் ஒரு அணையை கட்டி தண்ணீரை தேக்கினால் அப்போதைய உடுமலை தாலுகாவின் கிழக்கு பகுதி, தாராபுரம், கரூர் பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். அங்குள்ள மண் வளத்திற்கு நெல் விளையும் பூமியாகவே மாற்றமுடியும் என பசுமை புரட்சிக்கு வித்திட்ட சி.சுப்ரமணியம் கூறியுள்ளார்.



அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ராஜாஜியும் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கி 1953ம் ஆண்டு அணை கட்டும் பணிகள் துவங்கின. பாதி பணிகள் முடிவடைந்திருந்தது. நான்கு பணியாளர்கள் அணை கட்ட தேவையான கற்களை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு கட்டுமானம் நடந்த இடத்திற்கு சென்றனர்.



அதே வண்டியில் பயணம் செய்த துணை பொறியாளர் பார்த்தசாரதி, பணியாளர்கள் அந்தோணி, ஏசைய்யா, பழனிச்சாமி கவுண்டர், ஆறுமுகம் என 4  பேர் பயணம் செய்துள்ளார். திடீரென அந்த வண்டி கவிழ்ந்து அதில் பயணம் செய்த பணியாளர்களும், பொறியாளரும் கற்களுக்கு மத்தியில் சிக்கி உயிரிழந்தனர்.  திடீரென ஒரு நாள் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் சில காலம் அணை கட்டும் பணி நிறுத்தப்பட்டது.



பின்னர் ஒரு வழியாக 1957ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 90 அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த அணையால் தற்போது திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு மூலம் 54 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அதேபோல் 100க்கும் மேற்பட்ட கிராமங்களும் குடிநீர் வசதி பெறுகிறது. உயிரிழந்தவர்களின் நினைவுகள் காலம் முழுவதும் அழியாமல் இருக்க, அணையிலேயே கல்வெட்டாக பதித்து வைத்துள்ளனர். 


0 comments:

Post a Comment