Wednesday, September 18, 2013

அகராதி படைத்த சாமுவேல் ஜான்சன்!


சாமுவேல் ஜான்சனின் இல்லம்


ஆங்கில மொழியை உலகம் முழுக்க ஆங்கிலேயர்கள் பரப்பினார்கள் என்று நமக்கு தெரியும். அம்மொழி அவர்களின் நாட்டிலேயே ஒரு காலத்தில் பயன்பாட்டில் அருகி இருந்தது என்பதையும் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். பிரெஞ்சும்,லத்தீனும் அதன் இடத்தை பிடித்துக்கொண்டு சிரித்தன. 



பின்னர் மீண்டு எழுந்தது ஆங்கிலம். ஆங்கிலத்தில் அகராதிகள் பல எழுதப்பட்டன. எனினும், எளிமையான அதேசமயம் ஆழமான அகராதி ஒன்று இல்லை என்கிற குறை இருந்தது. அதை நீக்கியவர் சாமுவேல் ஜான்சன். 


சாமுவேல் ஜான்சனின் அப்பா மிகவும் ஏழை. படிக்க புத்தகங்கள் வாங்கித்தரக் கூட காசில்லை, அந்த புத்தக வியாபாரியிடம். 



“வா மகனே! “ என்று உடன் உட்கார வைத்துக்கொண்டு புத்தகங்களுக்கு பைண்டிங் போடுகிற வேலை கொடுப்பார் தந்தை. அப்படி வரும் நூல்களை படித்து படித்து தன்னுடைய அறிவை விசாலப்படுத்திக் கொண்டார் அவர். 



எளிமையான முறையில் தன்னை விட இருபது வருடம் மூத்தவரான எலிசபத் போர்ட்டர் எனும் பெண்ணை மணந்தார். இவரின் நேரமோ என்னவோ பெரும் பணக்காரியான அப்பெண் இவருடன் வாழ்ந்த காலத்தில் பார்த்தது வறுமை,வறுமை மட்டுமே. இந்த சூழலில் தான் ஆங்கிலத்துக்கு ஒரு நல்ல,கட்டமைக்கப்பட்ட வடிவிலான ஒரு அகராதி வேண்டும் என்று இவரிடம் சில வியாபாரிகள் வந்தார்கள். 



பிரெஞ்சு அகராதி உருவாவதற்கு நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தது. சாமுவேல் ஜான்சனோ வறுமையில் வாடிக்கொண்டு இருந்தார். இருந்தாலும், நம்பிக்கையோடு 'மூன்றே வருடத்தில் முடித்து விடுகிறேன்' என்று வாக்கு கொடுத்துவிட்டார். ஆனால், அகராதி ஏகத்துக்கும் வேலை வாங்கி தொலைத்தது. செஸ்டர்பீல்ட் கனவானிடம் உதவி கேட்டார்; அவர் முகத்தை திருப்பிக் கொண்டார். 



காசநோய், விரை புற்றுநோய், பல்மோனரி பிப்ரோசிஸ், தௌரேட் சிண்ட்ரோம் என ஏகப்பட்ட சிக்கல்கள். அம்மாவை அடக்கம் பண்ணகூட காசில்லாமல் வாடிய சம்பவம் நடந்தது. ஒரு முறை ஐந்து பவுண்ட் கடனை திருப்ப செலுத்த முடியாமல் சிறை போய் மீண்டதும் நடந்தது. எல்லாவற்றிலும் உடனிருந்த அன்பு மனைவியும் இறந்துபோயிருந்தார். மனிதர் அசரவில்லை. ஒன்பது வருடகாலத்தில் அந்த ஒற்றை மனிதரின் உழைப்பில் அகராதி எழுந்தது. 



இந்த புள்ளிவிவரம் அது எத்தகைய உழைப்பு என்பதை காட்டும். 42,773 வார்த்தைகள், ஒரு லட்சத்து பதினான்காயிரம் மேற்கோள்கள். நூல் செம தடியாக இருந்தது. ஐந்து பதிப்புகள் வந்து நாட்டை கலக்கி எடுத்தது. உலகம் முழுக்க மனிதரின் புகழ் பரவியது. பணமே தராத செஸ்டர்பீல்ட் கனவான், தான் உதவி இவர் அகராதியை முடித்தது போல கடிதங்கள் எழுதி வெளியிட்டார். இவர் மெல்லிய நகைச்சுவை இழையோட, “ஏழாண்டு காலம் உங்கள் வீட்டின் முன் காத்திருந்தும் இரங்காதவர் அல்லவா நீங்கள் ? “ என்று பொங்கிவிட்டார். 



அவரது அகராதி நூற்றி ஐம்பது வருடங்களுக்கு ஆங்கிலத்தின் இணையற்ற பொக்கிஷமாக நிலைத்து நின்றது.அலங்கார வார்த்தைகளைக் கொண்டிருந்த ஆங்கில கவிப்போக்கை விமர்சனம் செய்து எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுத வலியுறுத்தினார். “வாழ்க்கை வரலாறுகள் புகழ்பாடும் நூல்களாக இருக்க வேண்டியதில்லை” என உரக்கச் சொன்னார். ஷேக்ஸ்பியரையும் விமர்சித்து எழுதினார். 



சாகிற வரை அவரை வறுமை தான் துரத்தியது. என்றாலும் அவர் நம்பிக்கையோடு வாழ்ந்தார். இப்பொழுது எண்ணற்ற அகராதிகள் வந்துவிட்டாலும் எல்லாவற்றுக்கும் முதல் மாதிரி என சொல்லப்படுகிற அளவுக்கு அற்புதமான ஓர் அகராதியை ஆங்கிலத்துக்கு தந்துவிட்டு போன அவரின் வரிகளான,”மனிதன் அழுதுகொண்டே பிறக்கிறான்,குறைசொல்லிக்கொண்டே வாழ்கிறான், ஏக்கத்தோடு இறக்கிறான்” என்பது அவரின் வாழ்வுக்கே பொருந்தும். ஆனால்,அந்த வாழ்வில் அவர் நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சினார் என்பதே நமக்கான பாடம். 



சாமுவேல் ஜான்சன் என்கிற இணையற்ற இலக்கிய மேதைக்கு இன்று (செப்.18) பிறந்தநாள். அயராது பங்காற்றி ஆங்கில இலக்கிய உலகின் போக்கை மாற்றியவர் அவர் என இன்றைக்கு அவரை கொண்டாடுகிறார்கள். 

0 comments:

Post a Comment