Saturday, September 7, 2013

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..! – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து பிரமாண்டமான வளர்ச்சியை (சம்பளத்தில் மட்டும்) பெற்றவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் வெளிவந்திருக்கிற படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’… முழுப்படமும் காமெடியை மையப்படுத்தி எடுக்க வேண்டும் என இயக்குனர் பொன்ராம் முயற்சித்திருக்கிறார்… பாவம் பல இடங்களில் காமெடிக்கு பதில் ‘நற…நற…’ கடிதான் மிஞ்சுகிறது.


கதை என பார்த்தால் பெருசாக எதுவும் இல்லை. சிவகார்த்தியும், சத்யராஜூம் கிராமத்தில் எதிர் எதிர் பார்ட்டிகள்… சத்யராஜ் மகள் மீது சிவகார்த்திக்கு காதல்… இந்த காதல் கைகூடியதா… சத்யராஜ் வில்லத்தனம் ஏதாவது செய்தாரா? என்பதுதான் கதை.

sep 7 Varutha-Padatha-Valibar

 

படத்தின் தலைப்பை போலவே எந்த காட்சிக்கும்… பாடலுக்கும்… கதைக்கும்… ஏன் படத்துக்குமே இயக்குனரும், நடிகர்களும் வருத்தப்படாமல் இஷ்டம்போல எடுத்திருக்கிறார்கள்… படம் பார்க்கிற நமக்குத்தான் வருத்தமோ… வருத்தம்… இருக்காதா எதுவுமே புரியமாம போனா…
சத்யராஜ் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து மிகவும் மாறுபட்டு மிகவும் கீழே இறங்கி வந்து போயிருக்கிறார்… அவரின் வழக்கமான நடிப்பு கூடஇந்த படத்தில் இல்லை.

தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் இரு பெரும் தலைவர்கள் மோதிக் கொண்ட விஷயத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பேரில் நக்கல் செய்திருப்பது இயக்குனரின் குசும்புத்தனத்துக்கு ஒரு உதாரணம்…(எந்த கட்சின்னு நாங்க சொல்ல மாட்டோம்மில்ல)
ஊருக்கே தெரிந்த சத்யராஜின் மகள்தான் ஹீரோயின் என்பது சிவகார்த்திக்கு தெரிந்த பிறகும்… ‘ஊதா கலரு ரிப்பன்… யாரு உனக்கு அப்பன்’ என பாடலிலும் லாஜிக் மீறியிருக்கிறார்கள்..(சினிமாவுல ஏதுப்பா லாஜிக்னு யோசிக்கிறது தெரியுது…)

சிவகார்த்தியை மட்டுமே மையப்படுத்தி படம் ஓடுகிறது… இயக்குனர் ராஜேஷ் வசனம் பெருசாக எடுபடவில்லை… இமானின் இசையில் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கிறது… பாலசுப்பிரமணியின் ஒளிப்பதிவு மட்டும் ஓகே ரகம்… கிளைமாக்ஸ் முடியும் என பார்த்தால் நீ…..ண்டு கொண்டே போகிறது… மொத்தத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் பார்க்கிற ரசிகர்களை கூட சேர்த்துக் கொள்ளாது என்பதுதான் வெளியே தெரியாத உண்மை..!
படத்துல கதைன்னு எதுவும் இல்லாம போனாலும் போட்டிக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகாதது இந்த பட வசூலுக்கு வாய்ப்பா அமையலாம்..!

0 comments:

Post a Comment