Sunday, September 15, 2013

எண்ணெய் வயல் முதல் ஏடிஎம் வரை உளவு பார்க்கும் அமெரிக்காவின் ‘பறக்கும் பன்றி’ ‘மவுன நாய்க்குட்டி’


 வெளிநாடுகளின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் ஊடுருவி, ரகசிய தகவல்களை சேகரிக்கவில்லை என்று அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவாதம் கொடுத்தாலும், அதன் உளவு அமைப்பு, பிரேசில் நாட்டின் எரிவாயு கம்பெனிகளின் கம்ப்யூட்டர்களில் இருந்த ரகசிய ஆவணங்களை ‘திருடியிருப்பது’ பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 
   அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு ஏஜென்சி, வெளிநாடுகளுடன் ‘சைபர்’ போர் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. 

பல ரகசிய ஆவணங்களை, அந்தந்த அரசுகளின் சீக்ரட் கம்ப்யூட்டர்களில் ஊடுருவி ‘திருடுகிறது’ என்று எட்வர்ட் ஸ்னோடென் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.  அமெரிக்க உளவு ஏஜன்சியின் முன்னாள் அதிகாரியான இவர் இப்படி ரகசிய தகவல்களை வெளியிட்டதால், அவரை நாட்டை விட்டு துரத்தியது மட்டுமின்றி, அவரை கைது செய்ய துடித்தது அமெரிக்கா. ஆனால், அவர் பல நாடுகளில் அலைந்து கடைசியாக ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார். 

  அவர் இப்போது மீண்டும் ஒரு ரகசிய ஆவணத்தை வெளியிட்டுள்ளார். பிரேசில் நாட்டின் எண்ணெய் வளங்களை சாமர்த்தியமாக சுரண்டும் வகையில், கம்பெனிகள் ஏலம் தொடர்பான சில ரகசிய ஆவணங்களை அந்த நாட்டு அரசின் ரகசிய கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் ஊடுருவி, அமெரிக்கா எடுத்து விட்டதாக ஸ்னோடென் கூறியிருந்தார். 

  லண்டனை சேர்ந்த குளோப் டிவியில் கடந்த ஞாயிறன்று,  கார்டியன் பத்திரிகையாளர் கிளென் கிரீன்வால்டு இந்த ரகசிய தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரேசில் பிரதமர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் அவரின் அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பாக பெட்ரோப்ராஸ் என்ற நிறுவனம் ஆகியவற்றின் கம்ப்யூட்டர்களில் ஊடுருவி,  ஏலம் தொடர்பான  ஆவணங்களை அமெரிக்க ஏஜென்சி ‘திருடி’யிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

 ஏன் நடக்கிறது:  பிரேசில் நாடு, அமெரிக்காவுக்கு பிடிக்காத  நாடு. எண்ணெய் வளம் மிக்க நாடு. இதன் லிப்ரா எண்ணெய் வயலில் 1200 கோடி பேரல் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. அமெரிக்காவின் 2 ஆண்டுக்கான  எல்லா எண்ணெய் தேவைகளுக்கும் இது போதுமானது. இதுபோல, பெட்ரோப்ராஸ் என்ற நிறுவனம் ஏலம் விடப்பட உள்ளது. அதை தனக்கு வேண்டியவர்கள் கையில் பெற்றுத்தருவதே அமெரிக்க உளவு  அமைப்பின் எண்ணம். இதனால் தான் முக்கிய ஆவணங்களை கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் ஊடுருவி  எடுத்துள்ளது என்று புகார் எழுந்துள்ளது. 

பிரேசிலின் மொத்த எண்ணெய் வளம் 10 ஆயிரம் கோடி பேரல்கள். மேலும் புதிய எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை தன் வசம் கொண்டு வருவதே அமெரிக்காவின் நோக்கம் என்று பிரேசில் குற்றம்சாட்டுகிறது. அதற்காக, தன் உளவு வேலை மூலம், பிரேசிலில் ஏலம் எடுக்க சிலரை தயார் செய்கிறது  என்றும் அது சந்தேகிக்கிறது. 

இது தொடர்பாக பிரேசில் பிரதமர் லுலா கூறுகையில், அமெரிக்கா  மறைமுக ‘சைபர் போர்’ துவங்கியுள்ளது. பிரேசில் மட்டுமின்றி, சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் இப்படி ‘சைபர்’ போரை துவங்கி உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. எந்த ஒரு ஆவணங்களும் ரகசியமானவை என்று கூற முடியாத நிலை உள்ளது. இதை உடனே கூட்டாக எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். 

பறக்கும் பன்றி:  


அமெரிக்க உளவு  அமைப்பு மட்டும் இந்த வேலையில் இறங்கவில்லை. அதற்கு முழு துணை நிற்பது, பிரிட்டனின் ஜிசிஎச்கியூ என்ற உளவு அமைப்பு. அமெக்காவின் இந்த சைபர் உளவு வேலையில் இப்போது இரு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றுக்கு பெயர் பறக்கும் பன்றி. இன்னொன்றின் பெயர் மவுன நாய்க்குட்டி. இந்த திட்டங்களில் ஈடுபட சில தனியார் நிறுவனங்களையும் அமெரிக்க உளவு அமைப்பு நியமித்துள்ளது. 

இந்த தனியார் நிறுவனங்களுக்கு ‘சைபர்’ தில்லுமுல்லுகளில் இறங்க முழு அதிகாரம் அளித்துள்ளது. எந்த நாட்டின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளில் ஊடுருவி தகவல்களை எடுக்க வேண்டும், எந்த தகவல்கள் வேண்டும் என்று அமெரிக்க அமைப்பு சொல்லி விடும். அவற்றை இந்த தனியார் நிறுவனங்கள் சேகரித்து தரும். 

  இந்த இரு திட்டங்கள் மூலம், 212 நாடுகளின் 10,000 வங்கிகளின் ரகசிய ஆவணங்களை சேகரிப்பது முக்கிய நடவடிக்கை. ஏடிஎம்களில் பணம் எடுக்கும் தகவல்கள் போன்றவையும் இதில் அடங்கும். இந்த நாடுகளில் இந்தியாவும் உண்டு. தனிநபர் ஏடிஎம் கணக்கு வழக்குகளும் கூட இந்த ரகசிய நடவடிக்கை மூலம் அமெரிக்க உளவு அமைப்புக்கு போகிறது என்கிறார் கிரீன்வால்டு. 

ஏன் செய்கிறது அமெரிக்கா? 

* அமெரிக்காவுக்கு ‘எண்ணெய் பசி’ உண்டு. அதனால், பல நாட்டு  எண்ணெய் வளங்களை தன் வசம் வைக்கவே அதில் உளவு வேலை பார்க்கிறது. 
* அடுத்து, நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், தூதரக அதிகாரிகளின் இமெயில்கள், ரகசிய கணக்குகள். அதிலும் உளவு பார்க்கிறது. 
* இன்னொரு பக்கம், நிதி நடவடிக்கைகளை முடக்கும் உளவு வேலை. பங்கு சந்தை, நிதி நடவடிக்கைகள் தொடர்பான எல்லாவற்றையும் கண்காணிக்கிறது. 
* ஏடிஎம்களில் பணம் புழக்கம் போன்றவற்றையும் அமெரிக்க உளவு ஏஜென்சி கண்காணிக்கிறது. 
* எண்ணெய் வளம், நிதி வளம் எல்லாவற்றிலும் தன் ‘கை’ இருந்தால் எந்த நாடும் தைரியமாக எதிர்க்காது  என்பதற்காகவே இப்படி ‘சைபர்’ போரில் இறங்கியிருக்கிறது  என்பது ஸ்னோடென் குற்றச்சாட்டு. 
* பிரேசிலில் உளவு பார்த்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால், அமெரிக்கா மவுனம் சாதிக்கிறது. ஐநா தலையிடுமா என்பதே இப்போதைய கேள்வி.

0 comments:

Post a Comment