Monday, September 23, 2013

10ம் வகுப்பு எக்சாம்! இனி நோ டென்சன்.......




பத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்கிவிடும். கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு 24 மணி நேரமும் படிக்க வேண்டும் என பார்ப்பவரெல்லாம் வெறுப்பேற்றும் அளவுக்கு அட்வைஸ் சொல்வார்கள். இனி அந்த மாதிரியாக மாணவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறை நடப்பில் உள்ளது. அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஆய்வுகள் மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வகுத்து வருகிறது.


மத்திய பாடத் திட்டத்தில் உள்ளது போல் மாணவர்களின் கற்றல் திறனுடன் அவர்களது தனித்திறன்களையும் வளர்க்கும் விதமாக பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகள் முப்பருவக் கல்வி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடங்களை மூன்று பருவங்களாக பிரித்து தேர்வு நடத்துவதால் மாணவர்கள் ஆழமாக கற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாடம் சார்ந்த விஷயங்களை செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தும்போது தனித்திறன் மேம்பாட்டுக்கும் வழிவகை செய்யப்படுகிறது.


இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ‘மாணவர்களின் பாடச்சுமை குறைகிறது. இதுவரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை காரணம் காட்டி வணிகம் செய்து வந்த தனியார் பள்ளிகளின் நிலை மாறும். டியூஷன்களுக்கு என தனியாக செலவளிக்க வேண்டியதில்லை. பத்தாம் வகுப்பு என்றாலே சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கூட தொலைத்து விட்டு சிறை படுத்தப்பட்ட குழந்தைகள் அனுபவித்த கொடுமைகள் மாறும்.


பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டாலும் இதன் மதிப்பீட்டு முறை சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில் உள்ளபடி மூன்று பருவத் தேர்வுகளின் ‘குமுலேட்டிவ்’ மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பிடல் இருக்குமா? மதிப்பீட்டின் போது ஒன்பதாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படுமா? பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறை நடைமுறைக்கு வரும் போது அதன் மதிப்பிடல் முறை குறித்து நிறைய கேள்விகள் இருக்கிறது. முப்பருவ கல்வித் திட்டத்தில் பார்மேட்டிவ் அசஸ்மெண்ட்டுக்கு வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே மாணவனின் புரிதல் திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும்.


கற்றல் முடித்த பின்னர் பாடங்களை முழுமையாக அவர்கள் புரிந்து கொண்டதை வெளிப்படுத்தும் வகையில் சம்மேட்டிவ் அசஸ்மெண்ட்டில் 60 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வை எழுதுகின்றனர்.  பத்தாம் வகுப்பிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுமா? மத்திய பாடத்திட்டத்தில் மாணவர்களின் பிராப்ளம் சால்விங் திறனை மேம்படுத்த தனிப்பட்ட முறையில் கேள்விகள் கொடுக்கப்பட்டு தீர்வு காண முயல்கின்றனர். பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் அடுத்ததாக 11ம் வகுப்பில் படிப்பை தொடருகின்றனர்.


அந்த வகுப்பிலும் இம்முறை அமல்படுத்தப்படுமா? ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் முதல் பருவத் தேர்வுகளை முடித்து விட்டு அடுத்த பருவத் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் அடுத்த ஆண்டு கற்றல் மற்றும் மதிப்பீடு இரண்டும் எப்படி இருக்கும் என்ற கேள்விகள் ஆசிரியர் மாணவர், இருவருக்குள்ளும் உள்ளது. விரைவில் பள்ளிக் கல்வித் துறை இது போன்ற சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.


மாணவர்களுக்கு சுதந்திரமாக சிந்திக்க நேரம் கிடைக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள். மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘கல்வியாண்டில் 210 வேலை நாட்கள் மூன்று செமஸ்டருக்கு 70+70+70 நாட்களாகப் பிரிக்கப்படும். படிக்க வேண்டிய பாடங்கள் குறைவாக இருக்கும். பாடம் தொடர்பான தகவல்களை சேகரித்தல், அவற்றை புரிதல், புரிந்து கொண்ட அறிவை செயல்படுத்திப் பார்த்தல், சரியா, தவறா என சோதித்து அறிதல், அவ்வாறு புரிந்து கொண்ட விஷயத்தில் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி புதுமை செய்தல், அந்த விஷயத்தை மெருகேற்றுதல் என கற்றல் எனும் நிகழ்வில் ஆறு படிநிலைகளில் மாணவர்களின் அறிவு திறனாக மாற்றப்படுகிறது.


மாணவர்கள் தங்களது பிரச்னை மற்றும் சமூகம் சார்ந்து சிந்திப்பதற்கான வாய்ப்பு அதிகம். வளர் இளம் பருவத்தில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது உடல் சார்ந்த மாற்றங்கள், உள்ளம் சார்ந்த மாற்றங்களையும் புரிந்து கொள்ள முடியும். அதிகபட்ச டென்சனால் மன அழுத்தத்துக்கு ஆளாவது மற்றும் மதிப்பெண் குறைந்ததற்காக தற்கொலை செய்து கொள்ளும் போக்கும் தடுக்கப்படும். கற்றலில் சிரமப்படும் குழந்தைகள், தனித்திறனில் அதிக ஆர்வம் உள்ள மாணவர்கள் இம்முறையில் ஆர்வத்துடன் படிக்க வாய்ப்பு கிடைக்கும். பள்ளிக்கே வர பிடிக்காத குழந்தைகள் கூட பாடத்தை விரும்பும் நிலை உருவாகும்” என்றனர்.

0 comments:

Post a Comment