Saturday, December 28, 2013

டப்பிங் சீரியல் ஏன் பிடிக்கிறது?




சித்தியிலும் மெட்டிஒலியிலும் சரவணன் மீனாட்சியிலும் மயங்கிக் கிடந்த தமிழ்ப் பெண்களின் மனத்தை, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘உள்ளம் கொள்ளை போகுதே’, ‘என் கணவன் என் தோழன்’, ‘தெய்வம் தந்த வீடு’, ‘சிந்து-பைரவி’, ‘இது காதலா’, ‘மதுபாலா’ போன்ற டப்பிங் மெகா சீரியல்கள் எப்படிக் கொள்ளையடித்தன?


தமிழ் மெகா சீரியல்களை மாய்ந்து மாய்ந்துப் பார்த்த, அழுதும் புலம்பியும் பார்த்த பெண்கள் இப்போது டப்பிங் மெகா சீரியல்களை விரும்பிப் பார்க்கத் தொடங்கியதன் காரணங்கள்தான் என்ன?


90களில் நாடகங்கள் தொடர்களாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின. வாரம் தோறும் அல்லது வாரம் இருமுறை என்ற அமைப்பிலும் 13 வாரத்தொடர் என்ற அமைப்பிலும் வெளிவந்தன. பெரும்பான்மையாக அவை ஸ்டூடியோவுக்குள் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை. ஒருவிதத்தில் அவை “வீட்டுக்கு வந்த மேடைநாடகங்கள்” என்ற அளவில் இருந்தன. அவற்றால் மக்கள் தங்களின் மனத்தைத் திரைப்படத்திலிருந்து சற்று விலக்கிக் கொண்டனர்.


2000த்தில் நாடகங்கள் திரைப்படத் தரத்தில் பெருந்தொடராக (மெகா சீரியல்) நாள்தோறும் வெளிவரத்தொடங்கின. அப்போதும் பிறமொழி நாடகங்கள் தரமற்ற மொழிபெயர்ப்பில் வெளிவந்தன. ஆதலால், அவற்றை மக்கள் வரவேற்கவில்லை. அதேவேளையில் தமிழ் மெகா சீரியர்கள் தரமுடன் தயாரிக்கப்பட்டன. வெளிப்புறப் படப்பிடிப்பு, தெளிவான ஒளி-ஒலி,  பெண்களின் குடும்பப் போராட்டங்களை மையப்படுத்திய கதையமைப்பு, பாடல்கள், சண்டைக் காட்சிகள் என அவை தம்மைத் திரைப்படங்கள் போலவே பாவித்துக்கொண்டன. அதில் மனத்தைப் பறிகொடுத்தத் தமிழ்ப் பெண்கள் அவற்றைத் “தொடர்த் திரைப்படங்கள்” என்று கருதுகின்றனர்.


2010களில் பிறமொழி மெகா சீரியல்கள் தமிழில் தரமாக மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவரத்தொடங்கின. குறிப்பாக ஹிந்திமொழி மெகா சீரியல்கள் பல 2013இன் தொடக்கத்தில் தமிழ் மொழியாக்கத்தில் வெளிவரத் தொடங்கின. அவற்றின் தரம் தமிழ்ப் பெண்களைத் தமிழ் மெகா சீரியல்களுக்கு இணையாக ரசிக்கும் அளவுக்குச் செய்துள்ளன.


70களிலிருந்து தமிழர்கள் தமிழ்ப் படங்களுக்கு இணையான வரவேற்பை ஹிந்திப் படங்களுக்கும் வழங்கிவருகின்றனர். அதைப் போலவே தமிழ்ப் பெண்கள் தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்பப்படும் ஹிந்தி மெகா சீரியர்களுக்கும் இப்போது வரவேற்பு அளிக்கின்றனர்.


எந்தெந்த விதத்தில் அவை தமிழ் மெகா சீரியல்களைவிடச் சிறந்துள்ளன?


    டப்பிங் மெகா சீரியல்களின் புதுவிதமான கதைதான் தமிழ்ப்  பெண்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. தமிழ் மக்கள் அனுபவிக்காத, கேட்டறியாத புதுக்கதைகள். குறிப்பாக, பெரிய இடங்களில் நடந்துகொண்டிருக்கும் உண்மைக்கதைகள்.


    சின்னத்திரைக்கதை அமைப்பு யாரும் கணிக்க இயலாத வகையில் திருப்பங்களைக் கொண்டிருக்கும். நம் பெண்களுக்கு அவை ஒரு த்ரில்லர் அனுபவத்தைக் கொடுக்கின்றன.


    வசன அமைப்பு செறிவாக இருக்கிறது. ஒரே விஷயத்தை ஒவ்வொரு கதைமாந்தரும் ஒவ்வொருவிதத்தில் பேசி போரடிப்பதில்லை. வசனத்தின் குறுக்கே பின்னணி இசை ஒருபோதும் வருவதில்லை.


    கதைமாந்தர்களின் உடையலங்காரம், சிகையலங்காரம், பின்னணிக் காட்சி அமைப்பின் பிரம்மாண்டம், காமிரா நகர்வு போன்றவை பெரிய பட்ஜெட் திரைப்படத்துக்கு இணையானவை.


    ஒரு எபிசோடில் மூன்று காட்சிகளும் ஒவ்வொருகாட்சியிலும் இரண்டுக்கும் குறையாத திருப்பு முனைகளும் இருக்கும். சுவாரஸ்யம் கூடியபடியே இருக்கிறது.


    இந்தியப் பண்பாடு சார்ந்த வழக்கங்களைத் தற்காலத்துக்கு ஏற்ப முற்போக்காக மாற்றிப் பல காட்சிகளை இடம்பெறச் செய்கின்றனர். இரண்டு குழந்தைகளைப் பெற்ற ஒரு விதவைக்கு மறுமணம் செய்துவைத்தல் போன்றன.


    நகைச்சுவை என்ற பெயரில் “மொக்கை“  போடுவதில்லை.
    மாமியார் – மருமகள் சண்டைக்காட்சிகள்கூட இயல்பாக, அதிகக் காழ்ப்புணர்ச்சி இன்றிக் காட்டப்படுகின்றன. மாமியார்களை எதிரியாச் சித்தரிக்கும் போக்கு இருப்பதில்லை.


    இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காகக் கதைமாந்தர்களின் செயல்பாடுகளை நிதானமாகக் காட்டி, நேரத்தை ஓட்டிப் பார்வையாளர்களுக்கு அலுப்பூட்டுவதில்லை.


    எல்லாக் கதைமாந்தர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். டிவிஸ்ட் தருவதாக எண்ணித் திடீரென ஒரு புதுக்கதைமாந்தரை அறிமுகப்படுத்திப் பார்வையாளரைக் குழப்புவதில்லை.


    அழுகைக் காட்சிகளில் கதைமாந்தர்களின் கண்கள் இயல்பாகச் சிவக்கின்றன. அவர்களின் கண்களில் கண்ணீர் அரும்புகிறது.  அவர்களின் மனச் சோகத்தை இசையே பார்வையாளர்களுக்கு ஊட்டிவிடுகிறது. அந்த இயல்பான அழுகைப் பார்வையாளரின் உள்ளத்தை ஊடுறுவுகிறது.
    பிரிந்துள்ள தம்பதிகள், காதலர்கள் ஆகியோரின் காதல் மற்றும் அன்புறவுகளைச் சின்னச்சின்ன சலனங்களுடன் எடுத்துக் காட்டுவதில் டப்பிங் மெகா சீரியல்கள் உச்சத்தில் நிற்கின்றன.


    சீரியலை அப்டுடேட் செய்கிறேன் என்ற போக்கில் நாட்டு நடப்பு நிகழ்ச்சிகளை சீரியலுக்குள் திணித்து, வலிந்து காட்சிப் படுத்துவதில்லை. ஒரு வசனமாகக்கூட அவை வெளிப்படுத்துவதில்லை.


    கதாமாந்தர்களின் குணத்தைப் பிறரின் வசனங்களின் வழியாகத் தெரியப்படுத்தாமல் அந்தந்தக் கதாமாந்தர்களின் செயல்களின் வழியாகவே காட்டுகின்றனர்.


    ஒரு எபிசோடில் அத்தியாவசியமான தருணத்தில் மட்டுமே தீம் மியூசிக் வெளிப்படுகிறது.


    திருமணம் சார்ந்த விழாக்கள் அனைத்தும் சங்கடங்களின்றி மிகுந்த உற்சாகத்துடன் காட்டப்படுகின்றன. ஆனால், தமிழ் மெகா சீரியல்களோ திருமணக்கட்சிகள் என்றாலே ஏகப்பட்ட சண்டைகளும் மனக் கசப்புகளுமாகக் காட்டி “அவைதான் நம் வழக்கம்“ என்பதுபோலப் பாவனைசெய்கிறார்கள்.


தற்போது தமிழ்த் தொலைக்காட்சிகள் பரவலாக டப்பிங் மெகா சீரியர்களைப் ஒளிபரப்பத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், தமிழ் மெகா சீரியல்கள் வீட்டுப்பெண்களின் விரும்பங்களை நிறைவேற்றிச் சின்னத்திரையில் தாக்குப்பிடிக்குமா?

லட்சியங்கள் நனவாக !




1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்’ என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்’ ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.


2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதே நேரம், முடியாது என்றால் எதுவுமே முடி யாமல் போய்விடும்.


3. பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக பணமே வாழ்க்கை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அதுவும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருதியெனக் கொண்டால் இல்லாத பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.


4. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுபோகும். அந்த பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடே!


5. ஜன்னலை திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் தென்றல் காற்றின் இனிமையை உணர முடியும். அதுபோல், கவலைகள் சுமக்காத திறந்த மனதுதான் ஆனந்தமாக இருக்கும்.


6. ஆடை பாதி, ஆள் பாதி என்பார்கள். நீங்கள் எப்படிபட்டவர் என்பதை நீங்கள் அணியும் ஆடையும் தீர்மானிக்கிறது. நல்ல பழக்கவழக்கங்களோடு தூய்மையான-நேர்த்தியான ஆடையை தினமும் அணிவது, உங்கள் மீதான அடுத்தவர்களின் மரியாதையை அதிகபடுத்தும்.


7. சிலர் தோல்வியைக் கண்டால் அப்படியே துவண்டுபோய் விடுகிறார்கள். தோல்வியும், வெற்றிம் நிரந்தரமல்ல. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தமும் அல்ல. சோர்ந்தாலும் எதிர்த்து போராடினால் நிச்சயம் வெற்றிக்கனி பறிக்கலாம்.


8. வாழ்க்கை என்பது பூக்களின் இதழ்கள் பரப்பபட்ட மென்மை யான பாதை அல்ல. அங்கே ரோஜா வும் இருக்கலாம், ரோஜாவின் முட்களும் இருக்கலாம். ரோஜா கிடைத்தால் சந் தோஷப் படலாம். அதன் முள் குத்தினால், அங்கே யே இருந்து விடக் கூடாது. அதை எறிந்து விட்டு லட்சியபாதையில் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.


9. காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்ங்கள். அது, உங்கள் மனதை அமைதிபடுத்தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும்.


10. சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்து வரவேண்டும். அதற்கு, நம்மை சுற்றி ள்ள சூழ்நிலைகள் ஆரோக்கியமாக – மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். அதற்கு, வாரத்தில் ஒருநாளையாவது குடும்பத்தோடு செலவிடுங்கள். அன்று, பார்க், பீச், தியேட்டர் என்று வெளியில் சென்று வருவது செலவை வைத்தாலும், அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியை கொண்டு வரும்.


11. பிரச்சினை இல்லாத கணவன்-மனைவியே கிடையாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும், அவர்களே ஆற அமர்ந்து பேச ஆரம்பித்தால் அதற்கான தீர்வு எளிதில் கிடைக்கும். முன்றாவது நபரிடம் உங்கள் பிரச்சினை பற்றி எக்காரணம் கொண்டு சொல்லி விடாதீர்கள். மீறி சொன்னால், குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆகிவிடும் உங்கள் மண வாழ்க்கை.


12. பிரிந்திருந்தால்தான் காதல் பலப்படும் என்று சொல்வார்கள். இதே பிரிவு கணவன் – மனைவியருக்குள் எக்காரணம் கொண்டும் , எந்த சூழ்நிலையிலும் ஏற்படக்கூடாது. மீறி பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால், வேறு வாழ்க்கைக்கு மனம் பழகிவிடும். அதனால் உஷார்…


13. வேலைக்கு செல்பவர்கள் வேலையே கதியென்று இருந்து விடக் கூடாது. குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என்ற நினைப் பும் இருக்க வேண்டும். அப்படி வரும்போது, திருமணம் ஆன ஆண்கள் மனைவிக்கு மல்லிகைபூவையும், கூடவே ஸ்வீட்டைம் வாங்கி வந்து கொடுப்பது மனைவியை ஆனந்தத் தின் உச்சிக்கே கொண்டு போய் விடும்.


14. குழந்தைகளை லட்சியத்தோடு வளர்த்து ஆளாக்க வேண்டும். பாலின வேறுபாடு காட்டக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித திறமை உண்டு. அதை கண்டறிந்து ஊக்க படுத்தினால், அவர்களும் பிற்காலத்தில் ஸ்டார்களாக ஜொலிப் பார்கள்.


15. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். பாக்கெட்டுகளில் தயாரித்து விற்கபடும் உணவு வகைகளையும், பாஸ்ட் புட் அயிட்டங் களையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இவற்றை நீங்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் உடல் எக்குத்தப்பாக சதை போட ஆரம்பித்துவிடும். இல்லாத நோய்களும் வந்து ஒட்டிக் கொள்ளும்.


16. வருடத்திற்கு ஒருமுறையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என்று குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதுவும் உங்கள் உள்ளத்தை உற்சாகபடுத்தும்.

17. வரவிற்குள் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அதனால், மாதம்தோறும் பட்ஜெட் போடுவது சிறந்தது. அந்த பட்ஜெட்டில் சேமிபுக்கு என்றும், மருத்துவச் செலவுக்கு என்றும் தேவைபடும்போது மாத்திரம் எடுத்து பயன்படுத்தும் வகையில் ஒரு தொகையை ஒதுக்குவது ஆனந்த வாழ்வுக்கு வித்திடும்.


18. உங்கள் நட்பு வட்டாரம் பயனுள்ளதாக இருக்கட்டும். உங்களை உற்சாகபடுத்தும் நட்புக்கே முதலிடம் கொடுங்கள்.


19. அட்ஜஸ்ட் என்பது அளவோடு தான் இருக்க வேண்டும். வாழ்க்கையே அட்ஜஸ்ட் ஆகிவிட்டால், நீங்கள் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.


20. தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு தாம்பத்திய வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணம். அந்த வாழ்க்கை ஆனந்த மாக இருந்தால் உங்கள் ஒவ்வொரு செயலும் இனிக்கும். ஆனந்த வாழ்க்கை தானாகத் தேடி வரும்.

சங்க கால மலர்கள்...





சங்க காலத்தில் 99 வகையான மலர்களை அக்கால மகளிர் தொடுத்தும், அணிந்தும் மகிழ்ந்ததாகக் கபிலர் தனது குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.


அம்மலர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.


1. அடும்பு

2. அதிரல்

3. அவரை - நெடுங்கொடி அவரை

4. அனிச்சம்

5. ஆத்தி - அமர் ஆத்தி

6. ஆம்பல்

7. ஆரம் (சந்தன மர இலை)

8. ஆவிரை - விரிமலர் ஆவிரை

9. இருள்நாறி - நள்ளிருள் நாறி

10. இலவம்

11. ஈங்கை

12. உந்தூழ் - உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்

13. எருவை

14. எறுழம் - எரிபுரை எறுழம்

15. கண்ணி - குறு நறுங் கண்ணி

16. கரந்தை மலர்

17. கருவிளை - மணிப்பூங் கருவிளை

18. காஞ்சி

19. காந்தள் - ஒண்செங் காந்தள்

20. காயா - பல்லிணர்க் காயா

21. காழ்வை

22. குடசம் - வான் பூங் குடசம்

23. குரலி - சிறு செங்குரலி

24. குரவம் - பல்லிணர்க் குரவம்

25. குருக்கத்தி - பைங் குருக்கத்தி



26. குருகிலை (குருகு இலை)

27. குருந்தம் (மலர்) - மாயிருங் குருந்தம்

28. குவளை (மலர்) - தண்கயக் குவளை

29. குளவி (மலர்)

30. குறிஞ்சி

31. கூவிரம்

32. கூவிளம்

33. கைதை

34. கொகுடி - நறுந்தண் கொகுடி

35. கொன்றை - தூங்கு இணர்க் கொன்றை

36. கோங்கம் - விரிபூங் கோங்கம்

37. கோடல்

38. சண்பகம் - பெருந்தண் சண்பகம்

39. சிந்து (மலர்)

40. சுள்ளி மலர்

41. சூரல்

42. செங்கோடு (மலர்)

43. செம்மல்

44. செருந்தி

45. செருவிளை

46. சேடல்

47. ஞாழல்

48. தணக்கம் (மரம்)

49. தளவம்

50. தாமரை - முள் தாள் தாமரை


51. தாழை மலர்

52. திலகம் (மலர்)

53. தில்லை (மலர்)

54. தும்பை

55. துழாஅய்

56. தோன்றி (மலர்)

57. நந்தி (மலர்)

58. நரந்தம்

59. நறவம்

60. நாகம் (புன்னாக மலர்)

61. நாகம் (மலர்)

62. நெய்தல் (நீள் நறு நெய்தல்)

63. நெய்தல் (மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்)

64. பகன்றை

65. பசும்பிடி

66. பயினி

67. பலாசம்

68. பாங்கர் (மலர்)

69. பாதிரி - தேங்கமழ் பாதிரி

70. பாரம் (மலர்)

71. பாலை (மலர்)

72. பிடவம்

73. பிண்டி

74. பித்திகம்

75. பீரம்



76. புன்னை - கடியிரும் புன்னை

77. பூளை - குரீஇப் பூளை

78. போங்கம்

79. மணிச்சிகை

80. மராஅம்

81. மருதம்

82. மா - தேமா

83. மாரோடம்

84. முல்லை - கல் இவர் முல்லை

85. முல்லை

86. மௌவல்

87. வகுளம்

88. வஞ்சி

89. வடவனம்

90. வழை மரம் - கொங்கு முதிர் நறுவழை

91. வள்ளி

92. வாகை

93. வாரம்

94. வாழை

95. வானி மலர்

96. வெட்சி

97. வேங்கை

98. வேரல்

99. வேரி மலர்

படித்ததில் பிடித்தது!



பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்.


துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும் நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.


உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை. தீமையையும் விரட்டுகிறது.


அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம். இரண்டாமவள் ஒரு புதையல்.


ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.


பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும், மதிப்பு இல்லாதவை!


பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.


மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.


நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே.


செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை.


பறக்க விரும்புபவனால் படர முடியாது.


ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

பெண்ணிடம் ஆண் அடக்கமா?



பெண்களுக்கு உள்ளே ஆண்கள் அடக்கம் என்பது சில வார்த்தைகள் மூலம் புலப்படுகிறது.


Female  என்பதில்  male  அடக்கம்


Lady  என்பதில்  lad  அடக்கம்


Woman  என்பதில்  man  அடக்கம்


She  என்பதில்  he  அடக்கம்.

நோபல் பரிசு – 2013




1901ல் துவக்கப்பட்ட நோபல் பரிசுகள், இடையில் 1940ல் மட்டும் உலகப்போர் காரணமாக வழங்கப்படாமை தவிர, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. துவக்கத்தில் ஐந்து துறைகளுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன.
ஆறாவதாக 1969 முதல், ஸ்வீடன் தேசிய வங்கி, அதே நோபல் அறக்கட்டளை மூலமாக பொருளாதாரத் துறைக்கும் வழங்கிவருகிறது. பரிசுக்குரிய ஆண்டுக்கு முந்தைய ஆண்டு அல்லது அதுவரையில் துறைவாரியாக எவர் புதிய புதிய கண்டுபிடிப்பு அல்லது செல் மூலம் மனித குல மேம்பாட்டுக்கு அருந்தொண்டாற்றினார்களோ அவர்களுக்கு அத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படும்.


ஆண்டுக்கு ஒருவர் அல்லது மூவருக்கு மிகாமல் அச்சமயம் உயிருடன் உள்ளவர்களுக்கு மட்டும் பரிசு அறிவிக்கப்படும்.


நபர்கள் அல்லாமல் அமைப்புகளுக்கும் வழங்கப்படலாம் என்பது பொதுவிதி! ஒருவருக்கு மேல் வழங்கப்படும்போது, தேர்வுக் குழு நிர்ணயிக்கும் விகிதப்படிப் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.


மருத்துவம்: 


அமெரிக்காவின் "யேல்’ பல்கலைக்கழக "ஜேம்ஸ் ஈ ரோத்மன்’ (62 வயது), ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக்கழக "தர்மஸ் சி சுடோஃப்’ ஆகிய மூவருக்கும் வழங்கப்படுகின்றன. மனித உடலினுள் நடைபெறும் ஹார்மோன்கள், என்சைம்கள் மற்றும் முக்கிய கெமிகல்களின் இடமாற்றம், அதாவது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வெசில்ஸ் எனப்படும் நுண்ணிய குமிழிகளின் தடை பற்றிய மூவரின் தனித்தனியான ஆய்வுகளுக்காகப் பரிசுத்தொகை 1.2 மில்லியன் டாலர் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.


அந்தப் போக்குவரத்து முறை, மூன்று பொருட்களையும் சரியான இடத்துக்கு, சரியான நேரத்துக்குக் கொண்டு சென்று ஒப்படைக்கிறது எனக் கண்ட அவர்கள், அது பாதிக்கப்படும் போது, நரம்பு தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், மற்றும் நோய் எதிர்ப்புச்சக்திக் குறைவு போன்றவை ஏற்படும் என்பது மூவரின் ஆராய்ச்சி முடிவாகும்.


"செல்களுக்கு உள்ளேயும் வெளியில் பிற செல்களுக்கு இடையேயுமான அந்தப் போக்குவரத்து இல்லாமல் அல்லது தடைப்பட்டுப் போனால் தாறுமாறாக பாதிப்புகளை அடையும் செல்களால் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிடும்’ என்று குறிப்பிடும் பரிசுத் தேர்வுக்குழு, "அந்நிலை ஏற்படாவண்ணம் தடுக்க மூவரின் ஆராய்ச்சிகள் பெரிதும் பயன்படும் என்பதால் பரிசு அளிக்கப்படுவதாக’ குறிப்பிட்டுள்ளது.


இயற்பியல்: 


ஸ்காட்லாந்தின் 84 வயது "பீட்டர் ஹிக்ஸ்’ மற்றும் மெல்ஜியத்தின் 80 வயது ஃப்ரான்கோய்ஸ் எங்வெர்ட் ஆகிய இருவருக்கும் சமமாக வழங்கப்படுகின்றன. நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்ற திடப் பொருள்களின் உருவாக்கத்துக்கு அடிப்படைச் சக்தியாக விளங்குவது இப்பிரபஞ்சத்தின் பஞ்சபூதங்களில் அடங்கியுள்ள அணுவைவிடச் சிறிய நுண்ணிய பார்டிகிள் எனப்படும் துகள்களே ஆகும் என்ற கண்பிடிப்பிற்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.


 பரிசுத்தொகை சமமாகப் பங்கிட்டு அளிக்கப்படும். அத்துகள்கள் "ஹிக்ஸ்’ என்ற அந்த இருவரில் ஒருவர் பெயரால் "ஹிக்ஸ் போசோம்’ எனப்படுகிறது. இப்பிரபஞ்சத்தின் சகலத்துக்கும் மூலசக்தியாக அத்துகள் விளங்குவதால் அதைக் கடவுள் துகள் என்கின்றனர் சமீபத்தில் நடத்தப்பட்ட லார்ஜ் ஹேட்ரன் கொல்லைடர் எனப்பட்ட செயற்கை பிக்பங்க் மோதலுக்குப் பிறகு 2012 ஜூலை 4ல் தான் இக்கொள்கை வெளியிடப்பட்டது. எனினும் அவ்விருவரும் 1964 முதலே இது பற்றி ஆய்வு செய்து வந்துள்ளனர்.
என்றாலும் "போசோம்’ அணுக்கள் கண்டுபிடிப்பின் பெருமை ஒரு இந்தியரையே சாரும்.


1920லேயே அதுப்பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் இணைந்து ஆய்வு செய்யும் வாய்ப்புப் பெற்றிருந்த சந்யேந்திரநாத் போஸ்தான் அதனைக் கண்டுபிடித்தவர். அதனாலேயே பால்டிரக் என்ற இயற்பியலாளர் அதற்க அவர் பெயரையே அதாவது போசோன் என்று பெயரிட்டார். அதையொட்டிய ஆய்வுக்கே இவ்வாண்டின் இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. என்றபோதிலும் அப்போது சத்தியேந்திர நாத் போஸ் நோபல் பரிசினைப் பெறவில்லை. அதன்பிறகு ஹிக்ஸ் போசேன் போன்று நிறையவகை துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதையும் நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.


வேதியியல்: 


வேதியியல் பரிசினை மூவர் பெறுகின்றனர். அவர்கள் ஆஸ்திரிய-அமெரிக்கர் மார்டின் கர்ப்பளஸ், அமெரிக்க இஸ்ரேல் மற்றும் பிரிட்டனின் குடியுரிமை பெற்ற மிகெய்ல் லீவிட் மற்றும் இஸ்ரேல் – அமெரிக்கர் அரீஹ் வார்ஷல் ஆகியோராவர். இவர்களின் கண்டுபிடிப்பு வேதியியல் சோதனைகளை சைபர் ஸ்பேசுக்கு இட்டுச் செல்லும் என்கிறார் அகாதமிச் செயலாளர் ஸ்டாஃபன் நார்மார்க். சிக்கலான மூலப்பொருளைத் தூண்டக்கூடிய கணினி மென்பொருள் மாதிரியை உருவாக்கியதற்காக இப்பரிசு! இனி விஞ்ஞானிகள் சோதனைக் குழாய்க்குப் பதிலாகக் கணினியைப் பயன்படுத்தலாம். ரசாயன மாற்றங்கள் நிகழும் விதத்தைக் கணினி மூலம் அறியலாம்.


இனி வேதியியலாளர்கள் பிளாஸ்டிக் உருண்டைகள் மற்றும் குச்சிகளுக்குப் பதிலாக கணினியில் அதைச் செய்துவிட முடியும். புதிய மருந்துகள் தயாரிக்கவும். சூரிய செல்கள் உருவாக்கவும் இவர்கள் கண்டுபிடித்த ஆய்வறிவு பெரிதும் பயன்படும். புரொட்டின் எப்படி வேலை செய்கிறது என்பதை அவர்கள் உருவாக்கிய வழிமுறை புரிய வைக்கிறது என்கிறார் வார்ஷல். மனித உடலின் சரியான அமைப்பைக் காணவும், அது செயல்பட வேண்டியதை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதை அறியவும் இக்கணினி முறை உதவும்.


பொருளாதாரம்: 


பொருளாதாரப் பரிசு மூன்று பேர் பெறுகின்றனர். அவர்கள் ஏல், பல்கலையின் ராபர்ட் ஷில்லர், சிகாகோ பல்கலையின் யூகின் ஃபாமா, மற்றும் லார்ஸ் பீட்டர் ஹேன்சன் ஆகியோர் ஆவர். சொத்தின் மதிப்பை நீண்டகால அடிப்படையில் கணிப்பதுதான் சரியாக இருக்கும் என்ற அவர்களது ஆய்வுக்குத்தான் இந்தப் பரிசு. அதைத் தினம் அல்லது வாரங்களுக்குள் கணிக்க முடியாது. மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் என்ற நீண்டகால அளவில் ஆராய்வது அதிகப் பலனைத் தரும் என்கின்றனர். மேலும், திரும்பக் கிடைப்பதில், சிக்கலில்லாத நிலையில் முதலீடு செய்வது சிறந்தது என்ற அவர்களின் ஆய்வு, விரும்பும்போது திரும்பக் கிடைப்பதை வலியுறுத்துகிறது.


தவறான விலை நிர்ணயம் மற்றும் முதலீடு பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி விடலாம் எனும் அவர்கள், அமெரிக்காவில் ஏற்பட்ட வீட்டுச் சந்தை மதிப்பின் வீழ்ச்சி எவ்வாறு அந்த நாட்டுப் பொருளாதார மந்தநிலையை உருவாக்கியது என்பதை உதாரணமாகக் காட்டுகின்றனர். எனவே, கடந்துவிட்ட பல தவறுகளையும், சரியற்ற நிதி நிலையையும், சமீபத்திய பொருளாதார நெருக்கடி வெளிப்படத்துகிறதல்லவா? அதை எப்படி சரிசெய்வது என்பது ஷில்லரின் ஆய்வு!


குறுகிய கால முன் கணிப்பு கடினமானது என்பதை ஆய்வு செய்த ஃபாமா புதிய தகவல் மற்றும் வழிமுறைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்கிறார். மூன்றாமவரான ஹேன்சன் புள்ளிவிவர முறை ஒன்றை வகுத்தார். அது சொத்தின் மதிப்பைக் கணக்கிடப் பெரிதும் பயன் படக்கூடியதாகும் என்பது அவரது கணிப்பாகும்.


கொள்கை மற்றும் செயலளவில் சொத்து மதிப்பு நிர்ணயத்துக்கு மூவரின் ஆய்வுகளும் பயன் அளிக்கக்கூடியவை என்பதால் அவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது.


இலக்கியம்:


இலக்கிய பரிசை கனடாவின் 82 வயது ஆலிஸ் மன்றோ அந்நாட்டின் முதல் இலக்கியப் பரிசாளர் மற்றும் பெண் பரிசாளராகிறார். இவர் ஆரம்பம் முதல் 13வது நோபல் பெண்மணி. வாசகர்களுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். அவரத தலை சிறந்த சிறுகதைகளுக்காக இப்பரிசு! அவர் ஒரு நாவலாசிரியரும் ஆவார். நியூ யார்கர்ஸ் இதழில் எழுதத் தொடங்கிய இவரது சிறுகதைகள் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றன.


 ஒரு குடியானவத் தந்தைக்கும் ஆசிரியத்தாய்க்கும் மகளாகப் பிறந்த ஆலிஸ், சிறந்த மாணவிக்கான படிப்புதவித்தொகை பெற்று, ஒன்டாரியோ பல்கலைக் கழகத்தில் பத்திரிகைத் தொழிலுக்கான முக்கியப் பாடத்துடன் பட்டம் பெற்றார். தனது எழுத்துத் திறனை வளர்த்துக் கொண்டார். ஜேம்ஸ் மன்றோ என்ற சக மாணவனைத் திருமணம் செய்து கொண்டார்.


நல்ல தாயாகி, எழுத்துப் பணியையும் தொடர்ந்தார். நாளடைவில் அவரது புகழ் பரவியது. புத்தகவிற்பனை சூடுபிடித்தது. அதே நேரத்தில் அவருக்கு இரண்டாவது கணவனை ஏற்க வேண்டிய கட்டாயம் உருவாயிற்று. அச்சமயத்தில் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு "டான்ஸ் ஆஃப் தஹேப்பி ஷேட்ஸ்’ வெளிவந்து, பிற்பாடு 1969ல் கவர்னர்ஸ் பரிசைப் பெற்றது. இப்போது இவரது சிறுகதைகளின் எழுத்துத்திறனைப் பாராட்டி, இந்த நோபல் அவரைத் தேடி வந்துள்ளது.


உலக அமைதிக்கான பரிசு:

 அமைதிக்கான நோபல் பரிசு ரசாயன ஆயுதங்களை முற்றிலுமாக இந்த உலகிலிருந்து அழித்து, உலக அமைத்திக்காகப் பாடுபடவேண்டும் என்ற உயர் நோக்கத்தோடு ஐக்கிய நாடுகள் அவையின் தீவிர முயற்சியால் 1997ல் அமைக்கப்பட்டு அரும்பணியாற்றிவரும் ஆர்கனிசேஷன் ஃபார் த ப்ரிவென்ஷன் ஆஃப் கெமிகல் வென்ஸ் என்ற பொதுநலத் தொண்டமைப்புக்கு வழங்கப்படுகிறது.


தலைமையகம் "தி ஹேக்’ நகரில் உள்ளது. தற்போது 189 நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்டது.


சிரியாவில் குவிந்து கிடக்கும் ரசாயன ஆயுதங்களை ஆபத்தான போர்க்களம் என்ற அச்சம் சிறிதுமின்றி கண்டு அழிக்க முயலும் அந்த அமைப்பின் தொழில்நுட்ப வல்லுனர்களின் மன உறுதியைப் பாராட்டியும், அவர்கள் முயன்றுவரும் ரசாயன ஆயுத ஒழிப்புப் பணி மற்றும் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளை ஊக்கப்படுத்துவதற்காகவும் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது.


இதுபற்றிக் கூறும் தேர்வுக் குழு குறிப்பிட்ட கால எல்லையாகிய 2012 ஏப்ரல் கடந்துவிட்ட போதிலும் அமெரிக்கா, ருஷ்யா உள்ளிட்ட நாடுகள் இன்னும் கூட அதன்படி நடந்துகொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.


மேலும் ஆயுதமற்ற உலகம் என்ற ஆல்ஃரெட் நோபலின் குறிக்கோளை எட்ட இந்த ஆர்கனிசேஷன் ஃபார் த ப்ரிவென்ஷன் ஆஃப் கெமிகல் வென்ஸ்வுக்கு வழங்கப்படும் அமைதிபரிசு முதல் முயற்சியாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


அதன் பொது இயக்குனர் இது ஆர்கனிசேஷன் ஃபார் த ப்ரிவென்ஷன் ஆஃப் கெமிகல் வென்ஸ்வுக்குக் கிடைத்துள்ள மாபெரும் கௌரவம் மற்றும் பணிக்கான அங்கீகாரம் ஆகும் என்கிறார்.

மூடநம்பிக்கைகள் - ஒரு உலகளாவிய பார்வை; Superstition of the World




மூடநம்பிக்கைகள் - ஒரு உலகளாவிய பார்வை....


 எல்லோருக்கும் வணக்கம், நாளுக்கு நாள் விஞ்ஞானம் அசுர வேகத்தில் ஒரு புறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் மூட நம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் விஞ்ஞானத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கிறது.


மூட நம்பிக்கைகளுக்கு உதாரணம் சொல்வதென்றால், இன்னார் முகத்தில் ராசி என்று நினைத்துக்கொண்டிருப்பது, காரை முதலில் இயக்கும் போது கார் டயருக்கு அடியில் எலுமிச்சம் பலத்தை வைத்து நசுக்குவது, புதிய வீட்டுக்கு வாஸ்து செய்யும் நாளன்று கோழி அல்லது ஆடுகளை பலிகொடுப்பது, இப்படி வரிசையாக மூட நம்பிக்கைகளுக்கு இன்று முழுவதும் உதாரணம் சொல்லிக் கொண்டே போகலாம்.


சரி., இந்த மாதிரியான மூட இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆம் இந்த மாதிரியான மூட நம்பிக்கைகள் உலகம் முழுவதிலும் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. அட அவ்வளவு ஏன் உழைப்புக்கு பெயர் போன ஜப்பான் நாட்டு மக்களிடையேயும் கூட சில மூட நம்பிக்கைகள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


ஜப்பான் நாட்டு மக்களிடையே ஒரு வினோதமான பழக்கம் வழக்கத்தில் உண்டு. பாம்புக்கறியை கன்னாபின்னாவென்று வெட்டும் ஜப்பானியர்களுக்கு பாம்பு தோல் என்பது மிகவும் புனிதமான பொருள் ஆகும். பாம்புத் தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மணி பர்ஸிலும், வீட்டில் பணம் வைக்கும் பீரோக்களிலும் வைத்துக்கொள்கிறார்கள். அப்படி வைத்துக்கொண்டால் பணம் பெருகி பலமடங்கு ஆகிக்கொண்டே இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதுவும் வெள்ளை பாம்பின் தோல் என்றால் இன்னுமும் ஸ்பெஷல். எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க ஜப்பானியர்கள் தயாராக இருப்பார்கள். உழைப்புக்கு பெயர்போன ஜப்பானிய மக்களிடையே இப்படி ஒரு மூடநம்பிக்கை இருப்பது விந்தையிலும் விந்தை.


நம்மவர்கள் முக்கியமான வேலைக்காக வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் அவ்வளவுதான். மீண்டும் வீட்டுக்குள் வந்து தண்ணீர் அருந்தாமல் மீண்டும் வெளியே செல்ல மாட்டார்கள். இதைப்போல கொரிய நாட்டு மக்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. என்னவென்றால் முக்கியமான வேலை நிமித்தமாக வெளியே செல்லும் போது காகத்தை பார்த்து விட்டார்கள் என்றால் அவ்வளவுதான் அப்செட் ஆகிவிடுவார்கள். மீண்டும் வீட்டுக்குள் வந்து அமர்ந்துவிட்டு சிறிது நேரம் கழித்து தான் செல்வார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.


பிரேசில் நாட்டை எடுத்துக்கொண்டால் அங்கு ஒரு வித்தியாசமான பழக்கம் வழக்கத்தில் உண்டு. அங்கே எந்த ஹோட்டலுக்கு சென்று காப்பி அல்லது டீ கேட்டீர்கள் என்றால் கப்பை எடுத்துக்கொண்டு முதலில் அதில் சர்க்கரையைத்தான் போடுவார்கள் பிறகுதான் தேயிலை தூள், டிகாஷன் மற்றும் பால் சேர்ப்பார்கள். மறந்தும் கூட கப்பில் முதலில் பாலையோ அல்லது டிகாஷனையோ ஊற்ற மாட்டார்கள்.


காபியோ அல்லது டீயோ தாயாரிக்கும் போது முதலில் சர்க்கரையை போட்டால் பணம் நம்மிடம் வந்து குவியும் என்றும் அவ்வாறில்லாமல் இறுதியில் சர்க்கரையை போட்டால் நம்மிடம் இருக்கும் எல்லா பணமும் நம்மை விட்டு போய் நாம் ஏழைகள் ஆகிவிடுவோம் என்பதும்  அங்கே காலம் காலமாக வழக்கத்தில் இருந்துவரும் ஒரு நம்பிக்கை ஆகும். தெரியாத்தனமாக அங்கே டீ அல்லது காப்பி தயார் செய்கையில் முதலில் சர்க்கரை அல்லாமல் வேறு எதையும் போட்டோமானால் அவ்வளவுதான் நம்மை அடிதுவைத் தெடுத்துவிடுவார்கள்.


நம்ம ஊரில் நரிகொம்பு விற்கும் நரிக்குறவர்களை போல மெக்ஸிகோ நாட்டில் மிகவும் பிரபலமானவர்கள் முயலின் வால் மற்றும் தோல் விற்பவர்கள் ஆவர். காரணம், வீட்டில் முயல் தோலோ அல்லது வாலோ இருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் எல்லாருடைய முயற்சிகளும் எந்த தடையும் இல்லாமல் வெற்றியடைந்து சிறப்பாக வாழ்வார்கள் என்பது மெச்சிக்கோ நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.


எந்த பாத்திரமாக இருந்தாலும் சரி, ஒரு வேலை அது புதிய பாத்திரங்களாகவே இருந்தாலும் சரி, அந்த பாத்திரத்தின் ஏதாவது ஒரு இடத்தில் சிறிய நசுங்கள்கள் இருந்தாலும் அந்த பாத்திரங்களை ரஷ்ய மக்கள் பயன்படுத்த மாட்டார்கள், அதே போல் உடைந்த கண்ணாடியிலும் ரஷ்ய நாட்டு மக்கள் முகம் பார்க்க மாட்டார்கள்.


இதைப்போல எண்ணற்ற மூடநம்பிக்கைகளும் மூட பழக்கங்களும் உலகெங்கும் எல்லா நாடுகளிலும் எல்ல இடங்களிலும் உண்டு, ஆகையால் மூடநம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் இந்தியாவில் மட்டும் தான் காணப்படுகிறது என்று எண்ணி நம் மக்களை வசை பாடிக்கொண்டிருக்க வேண்டாம். அது எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா இடங்களிலும் புரையோடிக்கிடக்கும் ஒரு பழக்கம் தான்.