Thursday, May 22, 2014

மணிரத்னம் மகேஷ்பாபு மோதல், படம் ட்ராப்!


கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்கை வைத்து மணிரத்னம் இயக்கிய கடல் படு தோல்விப்படம். அதற்கு முன் இயக்கிய ராவணன் படமும் தோல்விதான். எனவே மணிரத்னம் கால்ஷீட் கேட்டு வந்தால் என்ன பதில் சொல்லி அவரை திருப்பி அனுப்புவது என்ற சிந்தனையில் இருக்கின்றனர் நம்ம ஊர் ஹீரோக்கள். எனவே மகேஷ்பாபு, நாகார்ஜுனா ஆகிய தெலுங்கு நடிகர்களை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் அடுத்தப்படத்தைத் தொடங்க இருந்தார் மணிரத்னம். அப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யாராய் ஆகிய இருவரும் நடிக்க இருந்தனர்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்குவதாக இருந்த புதிய திரைப்படம் திடீரென கைவிடப்பட்டதாக தகவல் அடிபடுகிறது. மகேஷ்பாபு கேட்கும் ரூ.5 கோடி சம்பளத்தை குறைத்துக்கொள்ளுமாறு மணிரத்னம் தரப்பில் இருந்து வந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நாகார்ஜுனன், ஐஸ்வர்யாராய், ஸ்ருதிஹாசன் ஆகிய பிரபலங்கள் ஒரே படத்தில் நடிக்க இருப்பதால் அனைவருமே சம்பளத்தை குறைத்து நடிக்க மணிரத்னம் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும், இதற்கு மகேஷ்பாபு தரப்பில் இருந்து மட்டும் பாசிட்டிவ்வான பதில் வராததால், படம் கைவிடப்படுவதாகவும் கேள்வி.

இந்த படம் டிராப் ஆனதை நாகார்ஜுனா, தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

6 ஆயிரம் தியேட்டர்கள்...! பரபரப்பானது கோச்சடையான் வெளியீடு!!


கோச்சடையான் படம் வெளியாக இன்னும் இரு தினங்களே இருப்பதால் படத்திற்கான ரிலீஸ் வேலைகள் பரபரப்பு அடைந்துள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். கூடவே சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கே.எஸ்.ரவிக்குமாரின் மேற்பார்வையில், ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கி, இயக்குநராக களம் இறங்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முதலாக மோசன் கேப்சர் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது இப்படம். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரகி உள்ள இந்தப்படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், மீடியா ஒன் குளோபல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

பல்வேறு பிரச்னைகளால் இப்படம் ரிலீஸ் ஆவதில் அடிக்கடி தாமதம் ஏற்பட்டது. இதுவரை இப்பட ரிலீஸ் 6 முறை தள்ளிப்போய் உள்ளது. இந்நிலையில் வருகிற மே 23ம் தேதி படம் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டு, அதற்கான வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

உலகம் முழுக்க சுமார் 6000 தியேட்டர்களில் கோச்சடையான் வெளியாக இருக்கிறது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 450 தியேட்டர்களிலும், கேரளாவில் 140 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 650 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 300 தியேட்டர்களிலும், போஜ்புரி, பஞ்சாபி, இந்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழி பேசும் மாநிலங்களில் 1200 தியேட்டர்களிலும் ஆக மொத்தம் இந்தியாவில் மட்டும் 3000 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 3000 தியேட்டர்களிலும் கோச்சடையான் ரிலீஸ் ஆக இருக்கிறது. நேற்றே வெளிநாடுகளுக்கான தேவையான 3000 பிரிண்ட் காப்பிகளும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் பிரிண்ட் காப்பிகள் அனுப்பி வைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.


வெளியீட்டில் சாதனையை நிகழ்த்துகிறது கோச்சடையான்!

'கோச்சடையான்' திரைப்படத்தை சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட தீர்மானித்துள்ளனர். இவற்றில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில்தான் அதிகமான எண்ணிக்கையில் வெளியாகிறது. சென்னையில் உள்ள முக்கியமான மல்ட்டிபிளக்ஸ்களான சத்யம் எஸ்கேப் வளாகத்தில் 3 திரையரங்குகள், சத்யம் வளாகத்தில் 3 திரையரங்குகள், ஐனாக்ஸ் வளாகத்தில் 3 திரையரங்குகள், அபிராமி வளாகத்தில் 4 திரையரங்குகள், பிவிஆர் வளாகத்தில் 3 திரையரங்குகள், எஸ் 2 பெரம்பூர் வளாகத்தில் 3 திரையரங்குகள், வில்லிவாக்கம் ஏஜிஎஸ் வளாகத்தில் 4 திரையரங்குகள், ஓஎம்ஆர் ஏஜிஎஸ் வளாகத்தில் 3 திரையரங்குகள், உதயம் வளாகத்தில் 3 திரையரங்குகள், எஸ் 2 தியாகராஜா வளாகத்தில் 2 திரையரங்குகள், தேவி வளாகத்தில் 2 திரையரங்குகள், உட்லண்ட்ஸ் வளாகத்தில் 2 திரையரங்குகள் என பல திரையரங்குகளில் வெளியாகிறது.

கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள சென்னையின் புறநகர் பகுதியான காணாத்துர் என் இடத்தில் உள்ள மாயாஜால் வளாகத்தில் 16 தியேட்டர்கள் உள்ளன. இங்கு அனைத்து திரையரங்குகளிலும் 'கோச்சடையான்' படம் மட்டுமே வெளியாகிறது. அதாவது இந்த மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் 100 காட்சிகள் நடைபெறவிருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் மொத்தம் 300 காட்சிகள். இதுவரை எந்த ஒரு தமிழ்த் திரைப்படமும் புரியாத மிகப் பெரிய சாதனை இது என திரையுலகினர் கூறுகின்றனர்.

அஜீத்துடன் டூயட் பாட வரும் வித்யாபாலன்!


கெளதம்மேனன் இயக்கும் தனது 55வது படத்தில் படு சீரியசாக நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத். என்றாலும், அவ்வப்போது இயக்குனர்களிடம் கதை கேட்கவும் நேரம் ஒதுக்கி வருகிறார். மங்காத்தாவிற்கு பிறகு தொடர் வெற்றிகளை சந்தித்து வருபவர், அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்போது கதை விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

அதேபோல் தன்னுடன் இணைந்து நடிக்கும் ஹீரோயின், வில்லன் போன்ற முக்கிய நடிகர்களும் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார். அதனால், மங்காத்தாவில் த்ரிஷா, ஆரம்பம் படத்தில் நயன்தாரா, வீரம் படத்தில் தமன்னா என்று நடித்த அஜீத், இப்போது தனது 55வது படத்தில் அனுஷ்காவுடன் இணைந்திருக்கிறார்.

இதையடுத்து மீண்டும் வீரம் சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கும் அஜீத், அந்த படத்திற்கு நல்ல பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய ஹீரோயினாக புக் பண்ண சொன்னாராம். அதையடுத்து, இப்போது இந்தியில், தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி போன்ற அதிரடிப்படங்களில் நடித்த வித்யாபாலனை, அஜீத்துடன் ஜோடி சேர்க்க பேசி வைத்துள்ளார் டைரக்டர் சிவா.

ஆக, தமிழ் சினிமாவில் இருந்து ஏற்கனவே சில படவாய்ப்புகள் சென்றபோது பாலிவுட்டில் பிசி என்று கைவிரித்த வித்யாபாலன் இப்போது அஜீத் படம் என்றதும் கண்டிப்பாக கால்சீட் தருவதாக டைரக்டர் சிவாவிடம் உறுதி அளித்துள்ளாராம்.

Friday, January 10, 2014

‘ஜில்லா’ ! ஜெயிக்குமா? - திரை விமர்சனம்...




ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். இதனால் அவரது அடுத்த அரசியல் வாரிசாக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகளின் தாயான பூர்ணிமா பாக்யராஜை மோகன்லால் மணந்துக்கொண்டு வாக்குறுதியை காப்பாற்றுகிறார். பூர்ணிமாவின் மகன் தான் இளைய தளபதி விஜய். பிற்பாடு மோகன்லாலுக்கும் அவருக்கும் இன்னொரு உருப்படாத மகன் பிறக்கிறான். மகத்.

அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மாநில அளவில் பெரிய மனிதராகிறார் மோகன்லால். கட்டிவர சொன்னால் வெட்டிவர தயாராக வளர்ந்து நிற்கிறார் விஜய். ஆனால் மகத்தோ வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு, கண்ணில் படும் பெண்களை ரேப் செய்துக்கொண்டு, டோபு அடித்துக்கொண்டு வெளங்காவெட்டியாக உருவெடுக்கிறார்.

அரசியலில் விஜய்க்கு மோகன்லால் முக்கியத்துவம் கொடுப்பதை ஆரம்பத்திலிருந்தே மகத் விரும்பவில்லை. இளைஞரணித் தலைவர் பதவியை விஜய்க்கு தருவதை கடுமையாக எதிர்க்கிறார். ஆனாலும் மோகன்லால் விஜய்யைதான் அரசியலில் வளர்க்க விரும்புகிறார். ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்று அப்பா தன்னை வெறுப்பதாக கருதிக்கொள்ளும் மகத் , கடுப்பாகி ஹாஃப் ஹாஃபாக சரக்கடித்து, ஃபுல் போதையில், மோகன்லாலிடம் பணிபுரியும் பாஷா என்பவரின் மகளை கதறக் கதற…

இந்த அடாத செயலுக்காக மகத்தை தண்டிக்க வேண்டுமென்று விஜய் போர்க்கொடி தூக்குகிறார். விஜய்யை போட்டால்தான் தான் உயிரோடு இருக்க முடியுமென்று மகத் அவர் மீது கொலைமுயற்சியை நடத்துகிறார். விஜய் இதிலிருந்து தப்பிக்க, மிருகமாக மாறிவிட்ட மகத் என்ன செய்கிறோம் என்பது புரியாமல் பூர்ணிமாவின் மகளையும் (அதாவது விஜய்க்கு டைரக்ட், மகத்துக்கு இன்டைரக்ட் அக்காவை), அவரது கணவரையும்கூட போட்டுத் தள்ளிவிடுகிறார். அக்காவை இழந்த விஜய் எரிமலையாய் வெடிக்கிறார். தன்னுடைய மகளை கற்பழித்துக் கொன்ற மகத்தை ஒழிக்க வேண்டுமென்று விஜய்யோடு மோகன்லாலின் நம்பிக்கைக்குரிய சகாவான பாஷாவும் கரம் கோர்க்கிறார். மகத்தை போட்டுத் தள்ளுகிறார் விஜய்.

தூங்கிவிடாதீர்கள். ட்விஸ்ட் மிச்சமிருக்கிறது.

இதுவரை படத்தில் காட்டப்பட்டது மாதிரி மோகன்லால் அவ்வளவு பெரிய யோக்கிய கொண்டையெல்லாம் கிடையாது. தன் ரத்தத்தில் பிறந்த மகனான மகத்தை நன்றாக வாழவைக்க, விஜயை ஒரு பலியாடாகதான் வளர்த்துக் கொண்டிருந்தார். விஜய்யின் ஒரிஜினல் தந்தை அரசியல் கலவரத்தால் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டதும் பொய். அவரை கொன்றவரே மோகன்லால்தான் என்று பழைய கதைகளை தெரிந்த பாஷா சொல்கிறார்.

க்ளைமேக்ஸ்.

மோகன்லாலை பார்க்க வருகிறார் விஜய். இவரை எதிர்கொள்ள முடியாமல் கூசிப்போகும் மோகன்லால், “நல்லவன், கெட்டவன் பாகுபாடெல்லாம் உலகத்தில் இல்லை. இலட்சியங்களை அடைய அனைவரும் சிறு சிறு தவறுகளை செய்தவர்கள்தான்” என்று தன்னுடைய கடந்தகால தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார். விஜய்யிடம் தன்னுடைய பழைய விஷயங்களை எல்லாம் போட்டு கொடுத்துவிட்ட பாஷாவை போட்டுத் தள்ளுமாறு ஆணையிடுகிறார். அதை மறுக்கும் விஜய், மோகன்லாலின் காலில் விழுந்து வணங்கி “யார் என்ன சொன்னாலும் நீ மட்டும்தான் என் அப்பா. என்னோட ஒரிஜினல் அப்பன் இப்போ உயிர்பிழைச்சி வந்தாலும் கூட, உன்னைதான் என் அப்பனா ஏத்துப்பேன். ஏன்னா நீ என்னை அப்படி வளர்த்திருக்கே” ரேஞ்சுக்கு எட்டு, பத்து நிமிஷத்துக்கு முழம் முழமாய் செண்டிமெண்டை கொட்டி வசனம் பேசுகிறார். அவரும், பாஷாவும் சில்லவுட்டாக தனியாக இருக்கும் மோகன்லாலை விட்டுக் கிளம்புகிறார்கள்.

இளைய தளபதியின் லாங் டயலாக்கை கேட்டு உலகத்தையே வெறுத்துவிட்ட மோகன்லால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாகிறார்.

2007ல் ‘பிரஸ்தானம்’ என்கிற பெயரில் சாய்குமார், சர்வானந்த் நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் இது. தமிழில் இதுதான் ‘ஜில்லா’வாகிறது. பாலகிருஷ்ணாவின் ஆல்டைம் ப்ளாக்பஸ்டரான ‘சிம்மா’ ரிலீஸ் ஆன தேதியில் பிரஸ்தானமும் ரிலீஸ் ஆகித் தொலைத்ததால் படுதோல்வி அடைந்தது. வேறு தேதியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் தோல்வி அடைந்திருக்கும். சாய்குமாரின் நடிப்பு மட்டும் நன்றாக பேசப்பட்டது. அவருக்கு அவ்வருடத்துக்கான ஃபிலிம்பேர், நந்தி விருதுகள் இப்படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. சில காலம் முன்பு இப்படம் ‘பதவி’ என்கிற பெயரில் டப் ஆகி தமிழிலும் ரிலீஸ் ஆனது. வந்த சுவடே யாருக்கும் தெரியவில்லை.

பின்னணி இப்படியிருக்க, ‘வேலாயுதம்’ ஷூட்டிங்கில் ஜெயம் ராஜாவின் உதவியாளராக இருந்த நேசன் சொன்ன மதுரைப் பின்னணி கதை ரொம்பவும் பிடித்துப்போய் ‘ஜில்லா’வில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டதாக கதையளக்கிறார்கள். தெலுங்கு ரீமேக் என்று சொல்லிக் கொள்வதற்கு என்ன தயக்கமென்று தெரியவில்லை. தெலுங்கில் ஹீரோவுக்கு ஜோடியில்லை. இதில் சேர்த்திருக்கிறார்கள் போல. நேசன் ஏற்கனவே ‘முருகா’ என்கிற படத்தையும் இயக்கியிருக்கிறார். விஜய்க்கு நல்ல ஸ்க்ரிப்ட் கேட்க தெரியவில்லை. தமிழில் விஜய் நடித்தால் ஷ்யூர் ஹிட் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஏராளமான படங்கள் சமீபமாகவே தெலுங்கில் வந்திருக்கின்றன. அப்படியிருக்கையில் அரதப்பழசான சப்ஜெக்ட்டுகளை ஏன்தான் குறிவைத்து தேர்ந்தெடுக்கிறாரோ தெரியவில்லை.

Thursday, January 9, 2014

காளிபிளவர் மொச்சை மசாலா...




காளிபிளவரை பகோடா செய்திருப்போம், உருளைக் கிழங்குடன் சேர்த்து வறுவல் செய்வோம். அதேப்போல, மொச்சைக் கொட்டையுடன் சேர்த்து பொறியல் செய்யலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
 
செய்யத் தேவையானவை

காளிபிளவர் - ஒரு பூ

மொச்சைக் கொட்டை - 100 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்

கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

தேங்காய் துருவல் - அரை கப்

செய்யும் முறை

மொச்சைக் கொட்டையை குக்கரில் 3 விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

காளிபிளவரை ஒவ்வொரு கிளையாக நறுக்கி  ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் ஊற்றி அதில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து சுத்தப்படுத்தி, தேவையான அளவுக்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பை பற்ற வைத்து அதில் கடாயை வைக்கவும். அதில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறிந்ததும் உளுத்தம் பருப்பை போட்டு அது சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு, வெங்காயத்தையும், தக்காளியையும் போட்டு நன்கு வதக்கி, நறுக்கி வைத்துள்ள காளிபிளவரையும், வேக வைத்துள்ள மொச்சைக் கொட்டையையும் போட்டு நன்கு கிளறவும்.

தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறவும். அடி பிடிக்காமல் இருக்கும் வகையில் அவ்வப்போது நன்கு கிளறி மசாலா பொருட்கள் சிவந்து வரும் போது தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.

காளிபிளவர் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் காய்களில் ஒன்றாகும். காளிபிளவரில் கால்சியம் அதிகம் உள்ளது. நரம்பை பலமாக்குவதோடு, புத்துணர்ச்சியை அளிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இது நல்ல உணவாக அமைகிறது. வாயுத் தொல்லை இருப்பவர்கள், காளிபிளவருடன் பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.

ரிலீஸாகுமா ஜில்லா?




ஜில்லா படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் அந்த படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

விஜய் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கல் விருந்தாக நாளை ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி சவுமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் , தெலுங்கில் வெளியான பகீரதா என்ற படத்தை தமிழில் ஜில்லா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட தயாரித்துள்ளேன். ஜில்லா என்ற பெயரை 2008ல் முறைப்படி பதிவு செய்துள்ளேன்.

படத்தை வெளியிட தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த படத்துக்கும் ஜில்லா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

கசக்கும் வேம்பின் இனிக்கும் நன்மைகள்....!




வீட்டு வாசலில் வேம்பு – நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் ‘அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica). அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.

வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ‘அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும்.

வேப்ப மரத்தின் எண்ணற்ற பலன்களின் காரணமாக, இதைக் ‘கற்பக விருட்சம்’ என்றே சொல்வார்கள். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் அதிகமான பயன்களைக்கொண்டது.

இலை: வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.

வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும்.

வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும். வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.

பூ: வேப்பம் பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை, வாந்தி ஆகியன குணமாகும். வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது செயல்படும். வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும் தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.
காய்: மிகவும் கசப்புச் சுவையை உடையது. காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.

விதை: புழு நீக்கியாகச் செயல்படும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. விதைகளை அரைத்துப் புழு உண்டாகிவிட்ட புண்களின் மேல் தடவினால், புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதோடு புண்ணும் விரைவில் ஆறும்.

வேப்ப எண்ணெய்: வேம்பின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் எருக்கு இலையைச் சேர்த்து ஒத்தடம் கொடுத்தால், பிடரி வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
பட்டை: வேப்பன் பட்டையை நீரில் இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45 மி.லி. அளவில் குடித்துவந்தால், காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வையும் நீக்கும். வேப்ப மரப் பட்டையைப் பொடி செய்து, நான்கில் இருந்து எட்டு கிராம் வீதம் தினம் இருவேளை உட்கொண்டால், வாந்தி, சுவையின்மை ஆகியன நீங்கும்.

பிசின்: உலர்த்தி சூரணம் செய்து இரண்டில் இருந்து ஆறு கிராம் அளவில் உட்கொண்டால், மேகரோகம் குறையும்.

புண்ணாக்கு: வேப்பன் புண்ணாக்கு, பயிர்களுக்கு நல்ல உரமாகும். இதை இடித்துப் பொடி செய்து வறுத்துத் தலைவலிக்குப் பற்று போடலாம்.

இது போல் வேம்பின் மருத்துவ பயன்கள் இன்றியமையாதது. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும் வேம்பின் குணநலன்களை அறிந்துகொள்வோமா?

* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.

* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.

* வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.

* 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.

* வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.

* வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.

* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.

* 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க, உடலில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.

* 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.

* வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.