Saturday, May 31, 2014

குடும்பத்தை சிக்கலின்றி நடத்துவது எப்படி..?

              இல்லறத்தில் கணவன் மனைவிக்கிடையே ஆயிரம் விசயங்கள் பேசுவதற்கு இருக்கும். அந்தரங்கமாக பேசும் விசயங்களை அவையில் பேசுவது நாகரீமாக இருக்காது. இது சிக்கலை ஏற்படுத்திவிடும். அதேபோல் கணவரிடம் நடந்து கொள்வதற்கும் சில வழிமுறைகள் உண்டு. இவற்றை கடைபிடித்தால் குடும்ப பயணம் சிக்கலின்றி இருக்கும். இப்போது ஆண்களுக்கு எது எது பிடிக்காது என்பதை பார்க்கலாம். அவற்றை பின்பற்றிப் பாருங்கள்.

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ கணவன் மனைவிக்கு இடையேயான அன்பிற்கும் ஒரு அளவு உண்டு. அடிக்கடி போன் செய்து நச்சரித்தால் வேலை கெடும். அந்த எரிச்சலில் கணவர் ஏதாவது கத்துவார் பின்னர் பிரச்சினை பெரிதாகும். எனவே அன்பாயிருக்கிறேன் என்று போன் பண்ணி டிஸ்டர்ப் செய்வது பிடிக்காதாம்.

சொல்ல வந்த விசயத்தை நேரடியாக சொல்லுங்கள். எதையாவது சொல்ல வந்து பின்னர் அதை விடுங்க என்று பொடி வைத்து பேசுவது கணவரை எரிச்சல் படுத்துமாம்.

எந்த விசயமென்றாலும் தனியாக சமாளித்து பழகுங்கள். சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம் கணவரை துணைக்கு அழைப்பது பிடிக்காதாம். ஏனெனில் அவருக்கும் நிறைய வேலை இருக்கும் இல்லையா?

சம்பளப் பணத்தைப் பற்றி எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்காதீங்க. பெரும்பாலான கணவர்களுக்கு மனைவி மேல் வெறுப்பு வர அதுதான் காரணமாக உள்ளது.

வேலை விசயமாக வெளியே அலைந்து விட்டு கணவன் வீட்டுக்கு திரும்பும்போது முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு பேசுவது கணவனுக்கு பிடிக்காதாம். முக்கியமாக ஏன் இவ்வளவு நேரம்? எங்கே ஊர் சுத்திட்டு வர்ரீங்க என்று கேட்க கூடாதாம்.

எதையும் அழுது சாதிக்கலாம் என்று நினைக்கும் மனைவியை கணவருக்கு அறவே பிடிக்காதாம். அழுது வடியும் அழுமூஞ்சி பெண்களை கண்டாலே காத தூரம் ஓடிவிடுவார்களாம்.

கணவருக்கு என்று சில கொள்கைகள் இருக்கலாம். ஆனால் தனக்கு பிடித்தமாதிரிதான் இருக்க வேண்டும் என்று கணவரை மாற்ற முயற்சி செய்வது கூடாதாம். அது சிக்கலில் கொண்டு போய் விடும் என்கின்றனர் அனுபவசாலிகள்.

அதேபோல் சாப்பிடும் நேரத்தில் சந்தோசமாக சாப்பிடாமல் குடும்ப பிரச்சினைகளை கிளறுவது சுத்தமாக பிடிக்காத விசயமாம். கணவருக்காக காத்திருக்கிறேன்  என்று இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது பிடிக்காத விசயமாம்.

0 comments:

Post a Comment