Saturday, May 31, 2014

காமெடி கலாட்டா " அதுவேற இதுவேற " - திரைவிமர்சனம்!

பாட்சா ரஜினி மாதிரி, நாயகன் கமல் மாதிரி மிகப்பெரிய தாதாவாக வேண்டும் என்ற லட்சியத்துடன் ஊரில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் வர்ஷன். சென்னையில் தன் சித்தாப்பாவான இமான் அண்ணாச்சி வீட்டில் தங்குகிறார்.

இமான் அண்ணாச்சி போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார். இவருக்கோ இன்ஸ்பெக்டராக வேண்டும் என்பதுதான் லட்சியம். வர்ஷன், கஞ்சா கருப்புடன் இணைந்து தாதாவாக வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார். ஒருநாள் இவர்கள் முயற்சியில் எதிர்பாராதவிதமாக நாயகி சானியாதாராவை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார்கள். அதிலிருந்து சானியாதாரா, வர்ஷன் மீது காதல் வயப்படுகிறார். ஆனால் வர்ஷனுக்கு தன் லட்சியம் தான் முக்கியம் என்பதால் காதலில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்.

சானியாதாராவின் தந்தை சிங்கமுத்து மிகப்பெரிய அரசியல்வாதி. சானியாதாராவிற்கு மாடர்னாக இருக்க ரொம்ப ஆசை. ஆனால் சிங்கமுத்து பழமை விரும்பி. ஒரு கட்டத்தில் வர்ஷன் சிங்கமுத்துவின் கட்சியில் தொண்டனாக சேருகிறான். இது சானியாதாராவிற்கு பிடிக்கவில்லை. ஒருநாள் சிங்கமுத்து கட்சியின் முதல்வரை சந்திக்கும்போது, வர்ஷன் சிங்கமுத்துவை அடுத்த முதல்வர் வாழ்க!, என்று வாழ்த்தி கோஷமிடுகிறான். இதைப் பார்த்த முதல்வர், சிங்கமுத்துவை கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து விலக்குகிறார். இதனால் கோபம் அடையும் சிங்கமுத்து, வர்ஷனை கட்சியில் இருந்து நீக்குகிறார்.

இதனை கண்டு மகிழ்ச்சியடையும் சானியாதாரா, வர்ஷனிடம் உன்னுடைய லட்சியம் என்ன? என்று கேட்க, அதற்கு தன் லட்சியத்தை கூறுகிறார். அதற்கு சானியாதாரா, உன்னிடம் உள்ள பணத்தை வைத்து நாலுபேருக்கு நல்லது செய்தால் போதும். உன் லட்சியத்தை மாற்றி நல்லவனாக மாறு என்று அறிவுரை கூறுகிறார். இதனால் சானியாதாரா மீது காதல் வயப்படுகிறார் வர்ஷன்.

இதற்கிடையில் ஒருநாள் போதையில் இமான் அண்ணாச்சியிடம் லட்சியத்தை கூறுகிறார். அதற்கு எதாவது கொலை கேசில் உன்னை மாட்டி விடுகிறேன். நீயும் தாதாவாகிடுவாய், நானும் இன்ஸ்பெக்டராகி விடுவேன் என்று அண்ணாச்சி கூற, அதனை செயல்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார்கள். அதன்படி ஒரு பைனான்சியர் கொலையில் இமான் அண்ணாச்சி, வர்ஷனை மாட்டிவிடுகிறார். இதனால் வர்ஷன் ஜெயிலுக்கு செல்ல நேருகிறது. இறுதியில், வர்ஷன் நிலை என்ன? நாயகி சானியாதாராவை கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

முழுநீள நகைச்சுவை படத்தில் நாயகன் பொறுப்பை ஏற்றுள்ள வர்ஷன் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முழுக்க நகைச்சுவை கதாபாத்திரம் போலவே நடித்திருக்கிறார். நாயகியான சானியாதாரா, அழகு பதுமையாக படம் முழுக்க வலம் வருகிறார். கதையின் ஓட்டத்திற்கு இவரும் தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். இதுவரை சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த இமான் அண்ணாச்சி, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்துள்ளார்.

இவர் வரும் காட்சிகளில் சிரிப்புக்கு பஞ்சமில்லை. கஞ்சா கருப்பு, சிங்கமுத்து, தியாகு, பொன்னம்பலம், ஷகீலா, தளபதி தினேஷ் ஆகியோரும் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறார்கள். தாஜ் நூர் இசை கேட்கும் ரகம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் எம்.திலகராஜன். எந்தவித லாஜிக்கும் இல்லாமல் நகைச்சுவையை மட்டுமே மையப்படுத்தி காட்சிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். அதுவேற இதுவேற... ‘காமெடி கலாட்டா’

0 comments:

Post a Comment