Saturday, May 31, 2014

வாடகை வீடு தேடுபவரா நீங்கள்.! உங்களுக்காக..?

* வாடகைக்கு வீடு தேடும்போது, நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்கும் பகுதியையே தேர்ந்தெடுங்கள். கொசுக்கள் மண்டிய, சாக்கடைகள் நிரம்பிய பகுதிகளை அவசியம் தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால், வாடகையில் மிச்சப்படுத்தும் பணத்தை மருத்துவமனைக்குத் தர வேண்டியிருக்கும்.

* இப்போதெல்லாம் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் வீட்டின் பயன்பாட்டுக்காக அமைத்துக் கொள்கிறார்கள். எனவே வாடகை வீட்டைத் தேர்ந்தெடுக்கும் முன் பார்க்கிங் வசதி பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள். நிறைய வீடுகளில் வாகனங்களைத் தெருவிலேயே நிறுத்த வேண்டியிருக்கும். இயன்றவரை பாதுகாப்பாக நிழலில் வாகனங்களை நிறுத்த இயலுமா என்பதையாவது உறுதி செய்து கொள்ளுங்கள்.

*  வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் வளர்க்கும் வழக்கம் இருந்தால் வாடகைக்கு வீடு தேடும்போது அங்கு அதற்கான வசதிகள் இருக்கின்றனவா என்று கவனியுங்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதை ஆட்சேபிப்பார்களா என்பதையும் விசாரித்துக் கொள்ளுங்கள். அதுபோல் உங்களுக்கு வளர்ப்பு பிராணிகள் அலர்ஜியாக இருக்கும்பட்சத்தில் அக்கம்பக்கத்தில் யாரேனும் அதை வளர்க்கிறார்களா என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

*  அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகைக்கு குடிபுகும்போது லிஃப்ட் வசதி இருக்கிறதா, ஏசி பொருத்த ஆகும் ஒயரிங் செலவு மற்றும் யூபிஎஸ் ஒயரிங் செலவு யாருடையது என்பதையும் முன்கூட்டியே பேசிக் கொள்ளுங்கள். அதுபோல அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகை தவிர பராமரிப்பு செலவு எனத் தனியே கணிசமான தொகை ஒன்றையும் தர வேண்டியிருக்கும். அதைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

*  வீடு அமைந்திருக்கும் பகுதியில் திருட்டு பயம் உண்டா என்பதை விசாரியுங்கள். அக்கம்பக்கத்தில் ஏற்கெனவே திருட்டுகள் நடைபெற்று இருக்கிறதா? தனியே இருக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பான பகுதியா என்பதை எல்லாம் தீர விசாரித்துவிடுவது கவலைகளைத் தவிர்க்க உதவும். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வருவதற்கு சிரமம் இல்லாதபடி வீடு அமைவது மிக மிக முக்கியம்.

*  நீங்கள் குடிபுகும் வீடு, பஸ் நிலையம் அல்லது ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி, அலுவலகம், மருத்துவமனை, கடைவீதி, வங்கிக் கிளை ஆகியவற்றுக்கு நடந்து செல்லும் தூரத்தில் அமைந்திருந்தால் மிகவும் நல்லது. அலைச்சலில் மிச்சமாகும் நேரத்தை அவசியமான பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

*  வாடகை வீட்டுக்குக் குடி புகுவதற்கு முன்பு விரிவான ஒப்பந்தம் அவசியம் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

0 comments:

Post a Comment