Thursday, May 22, 2014

ரஜினி ஃபார்முலாவில் நயன்தாரா! இமயமலைப் பயணம்

இப்போ... தமிழ் சினிமாவின் குயின்... நயன்தாரா!

டாப் ஹீரோயின்களே பொறாமைகொள்ளும் 'ரீ என்ட்ரி ரெக்கார்டு’ கொடுத்துவிட்டு அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். 'ராஜா ராணி’, 'ஆரம்பம்’, 'நீ எங்கே என் அன்பே’ என தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்து ஹிட், இரண்டே படங்களில் இரண்டு மடங்கு எகிறிவிட்ட சம்பளம், 'நல்லா நடிச்சிருக்குல்ல பொண்ணு’ என விமர்சகர்களின் பாராட்டு, 'நம்ம படத்துக்கு நயனை ஃபிக்ஸ் பண்ணிடுங்க’ என ஹீரோக்களின் டிமாண்ட்... முன் எப்போதையும்விட உச்சத்தில் இருக்கிறது நயன்தாராவின் கிராஃப்.

ஆனால், 'இது ஏதோ நேற்று திட்டமிட்டு இன்று நடந்தது அல்ல. பிரபுதேவாவுடனான பிரிவுக்குப் பிறகு, 'மீண்டும் சினிமா’தான் என்று முடிவெடுத்தது முதல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் அவராகத் திட்டமிட்டது’ என்கிறார்கள் அவரது நெருங்கிய நண்பர்கள். இதில் ஹீரோயின்களுடன் நட்பு, ரஜினி பாணியில் ஆன்மிக நாட்டம், சிம்புவுடன் மீண்டும் நடிப்பு, தேடித் தேடி 'ஹீரோயின் ஸ்கோப்’ கதை பிடிப்பது... எனப் பல வியூகங்கள் வகுத்துச் செயல்படுகிறாராம்.

சமீபத்தில் சென்னையில் ஒரு ஹோட்டலில் நடந்த த்ரிஷா பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நயன்தாராதான் 'ஷோ-ஸ்டாப்பர்’!

த்ரிஷா, தமன்னா, காஜல், அமலா பால் என ஹீரோயின்கள் மத்தியில் ஸ்டாராக ஜொலித்திருக்கிறார் நயன். ஆர்யா, சிம்பு குறித்த தோழிகளின் விசாரிப்புகளுக்கு நயன்தாராவிடம் 'ஸ்மைல்’ மட்டுமே பதில். ஆனால், 'காதல்’ குறித்து ஹீரோயின் தோழிகளுக்கு நயன் கொடுக்கும் டிப்ஸ்களில் அத்தனை முதிர்ச்சி. சக ஹீரோயின்களின் நல்லது-கெட்டதுகளை விசாரிப்பது, பிறந்த நாள்களுக்கு வாழ்த்துவது என நட்பு வட்டத்தை ஆரோக்கியமாகப் பராமரித்துக்கொள்கிறார்.

'இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் 'வான்டெட்’ ஆக நடித்த நயன், அதன் பிறகு அவருடன் டச்சில் இல்லை. சிம்புவே முயன்றாலும்கூட நயன்தாரா 'நாட் ரீச்சபிள்’தான். இது குறித்துக் கேட்டால், ''படத்துல நடிக்கிறதோட நம்ம வேலை முடிஞ்சிருச்சு. அதுக்கு மேல என்ன இருக்கு?'' என்று சிம்பிளாக முடித்துக்கொள்கிறார்.

சமீபமாக 'நயன்தாரா, சிம்புவுடன் மீண்டும் பிரியம்’ என்று வரும் செய்திகளில் துளி உண்மை இல்லையாம். 'இது நம்ம ஆளு’ படத்தில் நடிக்க நயன் ஒப்புக்கொண்டதற்கு, அது இண்டஸ்ட்ரியில் உண்டாக்கும் பரபரப்பு மூலம் மைலேஜ் ஏற்றிக்கொள்ளலாம் என்பதே காரணம். அந்தப் படத்துக்கு அதுவரை வாங்காத சம்பளம் கேட்டது முதல், '25 நாள்கள் மட்டும் காலை 10 முதல் மாலை 6 மணி வரை நடிப்பேன். என்ன சாக்குச் சொன்னாலும் 26-வது நாள் வர மாட்டேன். நீங்கள் வேறு ஹீரோயினைக்கூட வைத்து படத்தை முடித்துக்கொள்ளுங்கள்’ என்றெல்லாம் ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்திருக்கிறார். ஆக, அந்த புராஜெக்ட் மூலம் பணப் பலன் முதல் பப்ளிசிட்டி வரை 'மேக்ஸிமம் லாபம்’ பெற்றது நயன்தாராவே!

இன்னோர் ஆச்சரிய செய்தி...   நயன்தாராவின் ஆன்மிகப் பயணம் குறித்த தகவல்தான்.   சுவிட்ஸர்லாந்து, நியூஸிலாந்துகளில் படப்பிடிப்புக்காகச் சென்றாலும், அடிக்கடி இமயமலைப் பயணமும் மேற்கொள்கிறாராம் நயன். அதோடு வாரணாசிக்கும் அடிக்கடி பறந்து காசி விஸ்வநாதரை மனமுருகத் தரிசித்து வருகிறாராம். சென்னையில் படப்பிடிப்பு என்றால், நடை சாத்தப்படுவதற்குச் சற்று முன்னதாக மயிலாப்பூர் கபாலீஸ்வரரைத் தரிசித்துவிடுவாராம் நயன். இதில் இமயமலை விசிட் அடிக்கடி நிகழ்கிறது என்கிறார்கள் அவரது 'மூவ்மென்ட்’ அறிந்தவர்கள்.

கிறிஸ்தவரான 'டயானா மரியம் குரியன்’ என்ற நயன்தாரா, சில வருடங்களுக்கு முன்னரே சென்னையில் உள்ள ஓர் அமைப்பில் சேர்ந்து இந்து மதத்துக்கு மாறிவிட்டார். ஆனால், அப்போது எல்லாம் இல்லாத ஆன்மிக ஆர்வம், சமீப மாதங்களில் ஏகத்துக்கும் நயன்தாராவிடம் அதிகரித்திருக்கிறது. ஜெயம் ரவியுடன் நடிக்கும் படத்துக்காக உத்தரகாண்ட் சென்றிருந்தபோது, படப்பிடிப்பு இடைவேளைகளில் அமிர்தசரஸ் போன்ற கோயில் ஸ்தலங்களுக்குச் சென்று வந்திருக்கிறார்.

கிசுகிசுக்கள், சர்ச்சைகள்தான் ஒரு ஹீரோயினின் மார்கெட் வேல்யூவை நிர்ணயிக்கும் என்பதில் தெளிவாக இருக்கிறார் நயன்தாரா. ஆனால், சினிமா வட்டாரத்தில் யாரையும் முழுக்க நம்பாமல் இருப்பவர், தன் மன ஆறுதலுக்காக ஆன்மிகத்தில் நாட்டம்கொண்டிருக்கிறார். அது கொடுக்கும் புத்துணர்ச்சி தன் சினிமா கேரியருக்கும் அவசியம் என்று நினைக்கிறார். அடுத்து இந்திப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பவருக்கு, இப்போதைய மார்க்கெட் ரேட்டைவிட 'ஒரு சி’ சம்பளம் அதிகம் என்று கேள்விப்படும்போது, நயன் பாலிசி நச் பாலிசி என்றே தோன்றுகிறது!

0 comments:

Post a Comment