Monday, June 2, 2014

உணவு பொருட்களை உண்ணும் முன்…?

உணவை உண்ணும் முன்பு கை கால்களைக் கழுவி சுத்தம் செய் என்பார்கள். பழம், காய்கறி ஆகியவற்றை நீரால் சுத்தப்படுத்து என்பார்கள். கடையில் வாங்கும் பழத்தை அப்படியே உண்ணக் கூடாது. நீரால் சுத்தம் செய் என்பர்கள்.

தானியங்களை நன்கு தண்ணீர் விட்டுக் களையச் சொல்வார்கள். நமது பெரியவர்கள் வாழைப்பழத்தைக்கூட நன்கு நீரால் கழுவிவிட்டுத்தான் தோலை உரித்து உண்பார்கள். தண்ணீரில் அப்படி என்ன விசேஷம்? தண்ணீர் திரவமாக உள்ளதால் சுத்தமாகிறது என்பது மட்டுமல்ல. விஞ்ஞான அடிப்படையில் தண்ணீரில் காற்றுவடிவாக – “ஆக்சிஜன்’ உள்ளதால் தண்ணீரை “”உயிர் நீர்” என்பார்கள். நமது உயிர் பிழைக்கவே நீரில் கழுவுகிறோமோ?

1950 பதிற்றாண்டுக் காலகட்டத்தில் விவசாயத்தில் விஷம் இல்லை. பூச்சிமருந்து அடிக்கும் பழக்கம் இல்லை. இயற்கை உரம் கொண்டு விளைவிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகளைக்கூடப் பெரியவர்கள் தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும் என்பார்கள். புழுதி, எச்சில் துளி, இருமல் துளி, தும்மல் துளி, மண் போன்ற மாசுகள் உண்டு.

ஊட்டச்சத்து நிபுணர்கள் தோலில் உள்ள சத்துகளைப் பற்றிக் கூறுவதுண்டு. ஆப்பிள், மாம்பழம் ஆகியவற்றைத் தோலோடு சாப்பிட வேண்டும் என்பார்கள். அரிசியை, பருப்பைக் களைவதுகூட தவறு, “பி’ வைட்டமின் இழக்கப்படும் என்பார்கள்.

ஆப்பிளில் இப்போது ஒருவித மெழுகைத் தடவுகிறார்கள். அது நச்சுப்பொருள். பழைய ஆப்பிளைப் புதிதுபோல் பளபளப்பாகக் காட்டுமே தவிர அழுகாமல் காப்பாற்றாது. இப்படிப்பட்ட நச்சு தடவப்பட்ட ஆப்பிளின் தோலைச் சீவாமல் தோலுடன் சாப்பிட்டால் கல்லீரல் – மண்ணீரல் பழுதுறும். தோலுடன் உண்டாலும் தோலை நீக்கி உண்டாலும் மாம்பழம் தின்றால் சிலருக்கு வயிறு ஓட்டம் (வயிற்றுப் போக்கு) ஏற்படும். ஏனெனில் சிலர், “கார்பைட்’ விஷக்கல்லைப் பயன்படுத்தி வேகமாக மாங்காய்களை மாம்பழமாக்கி விற்கிறார்கள். தண்ணீரில் கழுவுவதால் நச்சு நீங்காது. இதற்கு ஒரே வழி முற்றிய மாங்காய்களை வாங்கி நாமே பழுக்க வைத்து உண்பதுதான். பத்திரிகைக் காகிதங்களைக் கிழித்துப் போட்டு மாங்காய்களைப் போட்டு வைத்தால் மெதுவாகப் பழுக்கும். பழுக்கப் பழுக்க ஒவ்வொன்றாக எடுத்து உண்ணலாம்.

திராட்சைப்பழம் அறுவடையாகும் முன்னர் பல தடவை பூச்சிமருந்து அடிப்பார்கள். திராட்சைப் பழத்தை வாங்கியதும் நன்கு கழுவிவிட்டு 6 மணிநேரம் தண்ணீரில் ஊறப் போட்டுப் பின்னர் வெளியே நீரை வடியவிட்டு உண்டால், சுமார் 80 சதவீதம் விஷம் இறங்கிவிடலாம்.

அரிசி, கோதுமை, பருப்பு போன்ற தானியங்களில் வண்டு பிடிக்காமல் இருக்க போரிக் பவுடர், கந்தகம் கலந்த தூள் போட்டிருப்பார்கள். இவை நச்சு என்பதால் வைட்டமின் “பி’ ஐப் பற்றிக் கவலைப்படாமல் பல தடவை நீர்விட்டுக் களைந்து சமைப்பது நல்லது. நீரில் மற்றொரு சிறப்பு உண்டு. முதல் நாள் சமைத்த சாதத்தை வீணாக்காமல் மறுநாள் பழைய சோறாகச் சாப்பிட நிறைய நீரை ஊற்றி மூடி வைத்தால் சோறு கெட்டுப்போகாது. உயிர் நீரில் உயிரிகள் பெருகும். மேலும் ஒருநாள் நீரில் வைத்திருந்தால் புளிப்பு ஏற்படும். அதில் ஈஸ்டு உருவாகும். இது இயல்பான ஈஸ்டு. உளுந்தை இட்லி தோசைக்கு நீரில் ஊறவைத்துவிட்டுப் பின்னர் அரைக்கிறோம். அரிசியையும் அவ்வாறே. நீரில் ஊறவைத்து அரைப்பதால் வயிற்றுக்கு நன்மை செய்யும் உயிரிகள் வளர்கின்றன.

அரைத்த மாவை ஒன்றுகலந்து ஒரு இரவுக்குப் புளிக்க வைத்தால் மறுநாள் காலை மாவு பொங்கி வழியும். இதிலும் இயல்பான ஈஸ்டு உருவாகிறது. திடீர் இட்லி மாவு, திடீர் தோசை மாவு என்று விற்பதை வாங்கக் கூடாது. ரசாயன செயற்கை ஈஸ்டு கலக்கப்படலாம்.

இப்போதெல்லாம் சப்பாத்தியைக்கூட பாலித்தீன் கவரில் போட்டு ரெடிமேடாக விற்கிறார்கள். கோதுமை மாவை நீரில் பிசைந்து உருட்டித்தட்டி அடித்து உருண்டையாக்கிச் சற்றுப் புளிக்க வைத்தோ – புளிக்க வைக்காமலோ அவரவர் ருசிப்படி எளிதில் இட்டு அடுப்பில் போட்டு சப்பாத்தி செய்ய முடியாதவாறு – பெண்களும், சில சமயங்களில் ஆண்களும் மாலை தொடங்கி இரவுவரை டி.வி.யில் சீரியல் பார்ப்பதற்கு அதிக நேரம் செலவழிப்பது நோய்க்குறியே. மனநோயாளியாக மாறவும் வாய்ப்புள்ளது. உடலையும் உள்ளத்தையும் கெடுக்கக்கூடிய டி.வி. விளம்பரதாரர் நிகழ்ச்சிகளைத் தவிர்க்க இயலுமானால் தேக சுகம், மன அமைதி கிட்டும்.

0 comments:

Post a Comment