Monday, June 2, 2014

லிங்குசாமிக்கு பாடம் எடுத்த ராஜ்கிரண்..!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்து 2005ம் ஆண்டு வெளிவந்த படம் 'சண்ட கோழி'. இந்த படத்தில் ராஜ்கிரண் அப்பாவாகவும், அவருடைய மகனாக விஷாலும் நடித்திருந்தனர். ஏறக்குறைய 'தேவர் மகன்' படத்தின் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் கதாபாத்திரங்களை ஞாபகப்படுத்தும் கதாபாத்திரங்களில்தான் ராஜ்கிரணும், விஷாலும் நடித்திருந்தனர்.

சண்ட கோழி படம் வெற்றிப் படமாகவும், விஷால் தன்னை தமிழ் சினிமாவில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும் நிலை நிறுத்திக் கொள்ளும் படமாகவும் அமைந்தது. ராஜ்கிரணும் ஒரு அருமையான குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், ராஜ்கிரண் கதாபாத்திரத்தின் தன்மையை இயக்குனர் லிங்குசாமி முதலில் சரியாக உருவாக்கவில்லையாம். ராஜ்கிரண்தான் அந்த கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்று திருத்தினாராம். இதை லிங்குசாமியே சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் சொன்னார்.

“சண்ட கோழி' படத்தின் ஒரு பாடல் காட்சியில் ராஜ்கிரண் சாரை, அப்படியே நடக்க விட்டு படமாக்கிட்டிருந்தோம். திடீர்னு நடிக்கிறத நிறுத்திட்டு ராஜ்கிரண் சார் என்கிட்ட வந்து, “என் கதாபாத்திரம் எப்படிப்பட்ட மரியாதையான கதாபாத்திரம். ஆனால், இந்த பாடல் காட்சியில் போறவன், வர்றவனெல்லாம் என்னை இடிச்சி தள்ளிட்டு போறாங்களே. அப்புறம் எப்படி அந்த கதாபாத்திரத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கும்,” அப்படின்னு சொன்னாரு. அவர் சொன்னதுக்கப்புறம்தான் நான் யோசிக்க ஆரம்பிச்சி, அவர் கிட்ட யார் யாரு எப்படி பேசணும், எவ்வளவு தூரம் நின்னு பேசணும், எவ்வளவு தூரம் நடக்கணும்னு உருவாக்கினேன். இதுதான் உங்க கதாபாத்திரம்னு அவர் கிட்ட கொடுத்திட்டால் போதும், அதுக்கேத்தபடி தன்னை அருமையா மாத்திக்குவாரு ராஜ்கிரண்,” என அவரைப் பற்றிப் புகழ்ந்து தள்ளினார் இயக்குனர்லிங்குசாமி.

0 comments:

Post a Comment