Tuesday, June 3, 2014

சண்டமாருதம் என்றால் ஊழிப்பெருங்காற்று என்று அர்த்தம் - சரத்குமார் பேட்டி

 நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகனாக சரத்குமார். படம் சண்டமாருதம். இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம் சரத்குமாரின் புதிய அடைமொழி. இதுவரை சுப்ரீம் ஸ்டாராக இருந்தவர் இந்தப் படத்திலிருந்து புரட்சி திலகமாக மாறியிருக்கிறார். புரட்சித்தலைவரிலுள்ள புரட்சியையும், மக்கள் திலகத்திலுள்ள திலகத்தையும் சேர்த்து... புரட்சி திலகம். சண்டமாருதத்தின் படப்பிடிப்பு தொடங்கிய கையோடு பத்திரிகையாளர்களுக்கு படப்பிடிப்பு இடைவேளையில் பேட்டியும் அளித்தார்.
ஜக்குபாய்க்குப் பிறகு ஹீரோவாக நடிக்க ஏனிந்த பெரும் இடைவெளி...?

நான் அரசியலில் பிஸியாக இருந்ததால் ஹீரோவாக நடிக்க நேரம் கிடைக்கலை. அதனால்தான் சென்னையில் ஒருநாள், நிமிர்ந்து நில் படங்களில் கௌரவ வேடத்தில் நடித்தேன். நல்ல கதைக்காக நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

அது என்ன சண்டமாருதம்...?

சண்டமாருதம் என்றால் ஊழிப்பெருங்காற்று என்று அர்த்தம்.

படத்தின் கதையை நீங்களே எழுதியிருக்கிறீர்களாமே?

என்னுடைய படங்களின் கதைக்கருவில் நான் அபிப்பிராயங்கள் சொல்லி திருத்தியிருக்கேன். ஆனா முழுக்கதையையும் எழுதியது இப்போதுதான். சமீபமாக திகில் - நகைச்சுவை கலந்த கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அப்படியொரு கதைதான் சண்டமாருதம். நான் எழுதிய கதையை ஏ.வெங்கடேஷிடம் சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது.  என்னுடைய கதைக்கு ரான்ஜஷ்குமார் திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார்.

படத்தில் உங்களுக்கு என்ன மாதிரியான கேரக்டர்...?

ரவி, சர்வேஸ்வரன் என்கிற இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறேன். இரண்டுமே மாறுபட்ட கதாபாத்திரம். புலன்விசாரணைக்கு அப்புறமா இந்தப் படத்தில் வில்லனாகவும் வர்றேன்.

மற்ற நட்சத்திரங்கள்...?

சரயு, அவ்னி மோடின்னு இரண்டு ஹீரோயின்கள். நிமிர்ந்து நில் படத்தில் சமுத்திரகனியுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. அவரும் என்னுடைய மனைவி ராதிகாவும் முக்கிய வேடங்களில் நடிக்கிறாங்க. விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, கன்னட நடிகர் அருண் சாகர்னு நிறைய பேர் நடிக்கிறாங்க. ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். அருண் சாகருக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம்.

இயக்குனர் ஏ.வெங்கடேஷ்...?

அவரும் நானும் இதற்குமுன் இணைந்து பணியாற்றிய மகாபிரபு, சாணக்யா, ஏய் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது. அதே மாதிரி  இந்தப் படமும் வெற்றிப் படமாக அமையும்.

0 comments:

Post a Comment