Saturday, May 24, 2014

தோல்வி, தோல்வியல்ல தம்பி!

வாழ்வில் தோல்வி என்பது சாதாரணம். மனம் தளர்ச்சி அடைவது இயல்பு. அந்தத் தளர்ச்சி அடைந்த காலங்களில் நாம் ஆற அமர யோசிக்க வேண்டும். அப்போது நமக்குப் புது வழிகள் தென்படும்.

வழக்கமாக, நாம் என்ன செய்கிறோம்? பலரும் தோல்விகளைக் கண்டு சலித்துவிடுகிறோம். "இப்படித்தான் முன்பு முயன்றேன். தோல்வி கண்டேன். அங்கே போனேன், அதிலும் தோல்விதான் கிட்டியது. என் அதிர்ஷடம் அவ்வளவுதான். நான் ஒரு தோல்வியாளன்" என்று நம்மைப்பற்றி நாமே தீர்மானம் செய்துவிடுகிறோம்.

நாம் தோல்வியாளன் என்று நம்மீது நாமே முத்திரை குத்திவிடுகிறோம். ஆனால், நாம் தோல்வியாளர்களா? இல்லை! நாம் எத்தனையோ முறை இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ இந்தமுறை தோல்வியுற்றோம். அவ்வளவுதான்.

அப்படி எடுத்துக்கொள்ளாமல், நம் தோல்வியை எண்ணிப் புலம்பிக் கொண்டிருந்தோமானால், எல்லோரிடமும் அதைச் சொல்லி அழுது கொண்டிருந்தோமானால் - எதையும் சாதிக்க முடியாது! நமது நிலைமை இன்னும் மோசமாகிவிடும்!

666 மருந்து
ஒரு மருந்துக்கு 666 என்று பெயரிட்டார்கள். காரணம் 665 முறை முயன்றும் அதை அவர்களால் தயாரிக்க முடியவில்லை. ஆனால் சளைக்கவில்லை. 666-வது முறைதான் அதைத் தயாரித்தார்கள். எனவேதான் அதற்கு பெயர் "சால்வர்சான் 666".

அதேபோல, எடிசன் மின்சார விளக்கைத் தயார் செய்து கொண்டிருந்தார். அதற்கு மின்சாரம் பாய்ந்தவுடன் ஒளி விடும் ஒரு கம்பி தேவை. அதாவது மின்சார சக்தியைத் தடுத்து, ஒளியாக மாற்றும் ஒரு சுருள் கம்பி தேவை. எடிசன் எத்தனையோ உலோகக் கம்பிகளை எடுத்து முயன்றார்.. முயன்றார்.. மனம் சளைக்காமல் முயன்றார். கடைசியில் 'டங்ஸ்டன்' என்ற உலோகக் கம்பி அந்த வேலையைச் செய்தது!

தோல்வியை சமாளிப்பது எது? சளைக்காத மனம்தான்!
தோல்வியை வெற்றி கண்டது எது? விடாமுயற்சிதான்!

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்" என்பார் வள்ளுவர். ஆம், தெய்வத்தால் முடியாதது கூட, முயற்சியால் முடியும். தம்பீ ! சோர்வு இல்லாமல், முயற்சியில் குறைவு இல்லாமல், மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்கள், விதியைக்கூட வெற்றி கொள்வார்கள் என்றும் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

0 comments:

Post a Comment