Saturday, May 24, 2014

இந்தியாவின் பிரதமராக அரை மணி நேரம் பொறுப்பு வகித்த 19 வயது வாலிபர்!

மன்மோகன்சிங் பிரதமர் பதவியிலிருந்த போது @PMOIndia என்ற பெயரில் டுவிட்டர் அக்கவுண்ட் ஒன்றை வைத்திருந்தார். பிரதமர் அலுவலக செய்திகள் அதன் வாயிலாக வெளியிடப்பட்டன. புதிய அரசு பொறுப்பேற்க தயாரானதும், பாலோவர்களை வேறு அக்கவுண்டுக்கு மாற்றி விட்டனர். இந்நிலையில் பெயர் மாற்றத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவே பழையபடி @PMOIndia அக்கவுண்ட், புதிய அரசின் பிரதமருக்கு வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் @PMOIndia முடக்கப்பட்டது. அப்போது தான் அந்த விபரீதம் நடந்தது. உத்தரபிரதேச மாநிலம் லக்னொவை சேர்ந்தவர் கைசர் அலி என்பவர் @PMOIndia என்ற பெயரில் எதேச்சையாக அக்கவுண்ட் தொடங்க டுவிட்டரும், அது போல யாரும் தற்போது அக்கவுண்ட் வைத்திருக்கவில்லை என்று கூறி கைசர்அலிக்கு அனுமதி கொடுத்து விட்டது.அனுமதி கிடைத்த அரை மணி நேரத்தில் கைசர் அலியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அப்போது தான், நாட்டின் பிரதமருக்கான டுவிட்டர் அக்கவுண்ட்டை தான் பயன்படுத்தியது கைசர் அலிக்கு தெரிய வந்துள்ளது.

இது குறித்து கைசர் அலி ”2011ம் ஆண்டில் டுவிட்டரில் நான் சேர்ந்தேன். முதலில் @Iamqaiserali என்ற பெயரில் அக்கவுண்ட் ஆரம்பித்து நான் டுவிட் செய்து வந்த நிலையில் நாடெங்கும் தேர்தல் ஜுரம் பரவியுள்ளதால், தேர்தல் சார்ந்த ஒரு யூசர் நேம் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு மே 20ம்தேதி, பெயர் மாற்று வேலையை செய்தேன். பிரதமர் பதவி குறித்து அப்போது மக்களிடையே பரபரப்பாக பேச்சு எழுந்ததால் PMOIndia என்பதை யூசர் நேமாக வைக்கலாம் என பெயர் தேர்வு செய்து கொடுத்து பார்த்தேன். அந்த பெயரை பயன்படுத்த டுவிட்டர் எனக்கு அனுமதித்தது.

அந்த அக்கவுண்ட்டை நான் ஆரம்பித்ததும், நாடு முழுவதிலுமிருந்து பல மக்கள், பிரதமர் என்று நினைத்து எனக்கு டுவிட் செய்தனர். என்னிடம் தேர்தல் தொடர்பாக கேள்விகளும் கேட்ட போதுதான் எனக்கு லேசாக நடுக்கம் ஆரம்பித்தது. தெரியாத்தனமாக, பெரிய தவறை செய்து விட்டதை உணர்ந்த நான், உடனடியாக மன்னிப்பு கேட்டு அதிலேயே டுவிட்டும் செய்தேன். அரை மணி நேரத்திற்குள் அந்த கணக்கு முடக்கப்பட்டது.

இது பற்றி தெரிந்ததும் எனது பெற்றோர் என்னை திட்டினாலும் நண்பர்கள் என்னை பிரதமராகிய யோகக்காரன் என்று பாராட்டினார்கள். நான் செய்த தப்புக்காக, என்னை சிறையில் போட்டு விடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டது. நான் தவறு செய்யவில்லை. டுவிட்டர் அனுமதி அளித்தால் நம்பி அக்கவுண்ட் ஆரம்பித்தேன். இதற்காக நாட்டு மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார். ஒரு சிறு சம்பவத்தை தான் பிபிசி செய்தி நிறுவனம் அரை மணி நேர பிரதமர் என சுவாரஸ்யமாக வர்ணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment