Saturday, May 24, 2014

அசத்தும் மைக்ரோ சினிமாக்கள்!

பளிச் ஐடியாக்களால் கவனம் ஈர்த்த அண்மைக்கால சயின்ஸ்ஃபிக்ஷன்  குறும்படங்கள் (Sc-Fi short films) இவை... உலகம் முழுவதும் பல்வேறு விழாக்களில் ஸ்பெஷல் கவன ஈர்ப்பு பெற்று அசத்தியவையும்கூட!

அலைவ் இன் ஜோபர்க் (Alive in joburg) :

2006-ல் ரிலீஸான இந்த ஆறு நிமிடக் குறும்படத்தை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல இயக்குநர் நெய்ல் ப்ளோம்காம்ப் இயக்கினார். வசூலை வாரிக் குவித்த உலகின் நம்பர் ஒன் சயின்ஸ்ஃபிக்ஷன் படமான 'டிஸ்ட்ரிக்ட் 9’ஐ இயக்கியவர் இவர். டாக்குமென்ட்ரி ஸ்டைலில், ஏலியன்களுக்கு எழும் ஒரு பிரச்னையைத் தத்ரூபமாகப் படமாக்கி இருக்கிறார். இப்படியும்கூட ஒரு இயக்குநரால் யோசிக்க முடியுமா என்பதுதான், இந்தக் குறும்படம் நமக்கு உணர்த்தும் செய்தி.

மெமொரைஸ் (memorize)

கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்கள்... உலகில் உள்ள எல்லோரும் வலுக்கட்டாயமாக கூகுள் கண்ணாடியை மாட்டிக்கொள்ளச் செய்யப்பட்டு அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ரெக்கார்டு செய்யப்படுகின்றன என்றால் எப்படி இருக்கும்? உச்சா போவதில் ஆரம்பித்து எல்லாமே கண்காணிக்கப்பட்டால், நம் வாழ்க்கை எத்தனை நரகமாகும்? அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பள்ளித் தோழர்கள் எரிக் ராம்பெர்க் மற்றும் ஜிம்மி எரிக்ஸன் இந்த ஒன்லைனை வைத்து மிரட்டலான ஆக்ஷன் படத்தைத் தந்துள்ளனர். எதிர்காலத்தில் நம் எல்லோரின் உடலிலும் சிப் பொருத்தப்பட்டு நம் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என்ற 'எனிமா’ விஷயத்தை இந்தப் படம் சொல்கிறது. அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இந்தப் படத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதேபோல எவ்வளவுதான் குற்றங்களைத் தடுக்க டெக்னாலஜியை போலீஸ் பயன்படுத்தினாலும், டெக்னாலஜியைப் பயன்படுத்தித் தப்பிக்கும் கூட்டம் ஒன்றும் இருக்கும் என்பதை பொளேர் என ஏழு நிமிடங்களுக்குள் சொல்கிறது.

கிரவுண்டட் ( Grounded):

வினோதமான ஒரு கிரகத்திற்குள் சிக்கிக்கொள்ளும் விண்வெளி வீரர் பற்றிய எட்டு நிமிட அழகியல் குறும்படம் இது. கெவின் மார்கோ என்பவர் இயக்கி இருக்கிறார். உலகப்புகழ் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கின் (தல அஜீத்தின் முகச் சாயலில் இருப்பாரே... அவரேதான்.) ஸ்பேஸ் ஒடிஸி சாயலில் இந்தப் படம் இருக்கிறது. படம் முடிவடையும் கடைசி நிமிடம், மென்சோகக் கவிதை!

ரோபார்ட்ஸ் ஆஃப் பிரிக்ஸ்டன் (robots of Brixton)   

2011-ல் கிப்வே டாபரே என்ற அனிமேஷன் டைரக்டர் இயக்கிய இந்தப் படம், எதிர்காலத்தில் மனிதர்களே இல்லாமல் எல்லாமே எந்திரமயமாக மட்டுமே இருக்கும் என்கிறது. உலகம் முழுக்க மனிதர்களைப்போல எந்திரங்கள் மட்டுமே இயங்கும் இந்த விஷ§வல் மிரட்டலாய் இருக்கிறது. (பாய்ஸ் பட 'காதல் இதுதான் அதுதான்’ பாடல் ஞாபகம் வருகிறது) எந்திரங்களும் ஒரு கட்டத்தில் குறுக்குவழியில் யோசித்து தங்கள் அழிவைத் தாங்களே தேடிக்கொள்ளும் என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஐந்து நிமிடங்களில் பின்நவீனத்துவ பாணியில் சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதையின் மையமே 'வரலாறு எப்போதும் ரிப்பீட் ஆகும். முதலில் துன்பியலாகவும் பிறகு காமெடியாகவும்’ கார்ல் மார்க்ஸின் தத்துவமேதான்!

ஃப்ரம் தி ஃபியூச்சர் வித் லவ் ( From the future with love):

அமெரிக்காவைச் சேர்ந்த கே-மைக்கேல் பரன்டியின் இந்த 12 நிமிடக் குறும்படம் 2095-ல் உலகம் எப்படி இருக்கும் என்பதை டெரராய் காட்டுகிறது. ஜில்லிடவைக்கும் இந்த த்ரில்லர் செமத்தியான ரோலர் கோஸ்டர் சவாரி அனுபவத்தைப் பார்த்த முதல் நிமிடத்திலேயே தருகிறது. ஓவராய் பயமுறுத்தி இருந்தாலும் எதிர்காலத்தில் இப்படித்தான் மனித இனம் வாழ நேரிடுமோ என்ற வருத்தத்தையும் அளிக்கிறது!

லைஃப்லைன் (Life line)


அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டோரி போர்டு ஆர்ட்டிஸ்ட் -கம்- ரைட்டர் ஆண்ட்ரூஸ் இயக்கிய இந்த ஆறு நிமிடக் குறும்படம் காதலின் ஆழத்தை டைம்மெஷின் மூலம் உணரவைக்கிறது. வயதான ஒருவர் தன் காதலியை டைம்மெஷினில் ஏறி வெவ்வேறு காலப் பரிமாணத்துக்குள் நுழைந்து தேடிக் கண்டுபிடிக்கிறார். குழம்பவைக்கும் காலச்சுழற்சிதான் வில்லன். காதல் கைகூடி தன் காதலியின் கரம் சேர்கிறார். ஆனால் அதற்கு அவர் கொடுக்கும் விலை என்ன என்பதே கிளைமாக்ஸ். பிரபல இயக்குநர் வோங் கர் வாய்யின் உலகப்புகழ் பெற்ற 'இன் தி மூட் ஃபார் லவ்’ படத்தின் ஆறு நிமிட மினியேச்சராய் படம் இருப்பது அழகோ அழகு!

கார்கோ (cargo)

இந்த Sci-Fi குறும்படங்களில் லிஸ்ட்டிலேயே மிகவும் சிலிர்க்கவைக்கும் படம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பென் ஹாவ்லிங் மற்றும் யோலன்டா ராம்கே என்ற இரட்டை இயக்குநர்கள் நடித்து இயக்கியிருக்கிறார்கள். ஸோம்பிக்கள் பற்றி படம் எடுத்தாலே க்ளிஷேவாய் கொலை வெறியோடு துரத்தும் சவ மனிதர்களைக் காட்டி நம்மைப் பயமுறுத்துவதுதானே நடக்கும்? இதுவும் ஸோம்பிக்கள் பற்றிய டெரர் படம்தான். ஆனால், அழகான தந்தைப் பாசத்தை உலகுக்கு உணர்த்துகிறது. ஏழு நிமிடங்களுக்குள் மிரட்டலான மற்றும் நெகிழ்ச்சியான அனுபவம் நமக்கு. பார்த்தே ஆக வேண்டிய உன்னதமான படைப்பு!

1 comments:

  1. Kindly from where we could view these microfilms.Ranjanimalan.

    ReplyDelete