Thursday, May 29, 2014

சேர்ந்து லோன் வாங்கினால் சுமை குறையும் வரிச்சலுகையும் கிடைக்கும்..!

                  சொந்தமாக வீடு வாங்கவேண்டும் என்று எல்லாருக்கும்தான் ஆசை இருக்கிறது. நகரத்தில் இருக்கும் வாடகை ஏற்றத்தை தாக்குப்பிடிக்கவே முடியவில்லை. இதோடு கொஞ்சம் சேர்த்து லோனாக கட்டினால் சொந்த வீடாவது வாங்கலாம் - இப்படித்தான் நடுத்தர மக்கள் பலர் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். ஆனால், எத்தனை பேரின் கனவு நிறைவேறிக்கொண்டிருக்கிறது? இதைப்பற்றி கேட்டால், என் சம்பளத்துக்கு யார் வீட்டு லோன் தருவார்கள்? டூவீலர் வாங்கவே படாத பாடுபட்டுவிட்டேன். இதில் சொந்தவீடு வேறா என அலுத்துக்கொள்வார்கள்.

 சம்பளம் குறைவு என்றால் வீடு வாங்க முடியாது என்று யார் சொன்னது? கணவன்- மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் இந்த நகர வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமே வழி இருக்கிறது. கொஞ்சம் யோசித்தால் போதும். நிச்சயமாக தீர்வு கிடைக்கும். இதுபோல் நடுத்தர  சம்பளக்காரர்கள் வசதிக்காகத்தான் ஜாயின்ட் லோன் உள்ளது. கணவன் - மனைவி மட்டுமல்ல ரத்த உறவு கொண்ட சகோதரன், சகோதரி, பெற்றோர் என இணைந்தும் லோன் போட்டு வீடு வாங்கலாம்.  உதாரணமாக நீங்களும் உங்கள் மனைவியும் வேலைக்கு செல்பவர்கள் என வைத்துக்கொள்வோம். இருவரும் நடுத்தர வருவாய் பிரிவினராக இருந்தால் லோன் மறுக்கப்படும். ஆனால், இருவரும் இணைந்து கடன் கேட்டு விண்ணப்பிக்கும்போது வருவாய் உயர்ந்துவிடும். எனவே கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

கணவன்-மனைவி சேர்ந்து வீடு வாங்குவதற்கு இது பொருந்தும். ஆனால், ரத்த உறவு கொண்டவர்கள் சேர்ந்து லோன் வாங்குவதை சில வங்கிகள் ஏற்றுக்கொள்வதில்லை.

 சேர்ந்து வீட்டுக்கடன் வாங்குவது என்பது, சேர்ந்து வசிப்பதை குறிக்கிறது. இதுகுறித்து ஹவுசிங் லோன் வழங்கும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வீட்டுக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்பவர், மனைவியை கடன் கூட்டாளியாக சேர்த்து சொத்து வாங்கும்போது, வாங்கப்படும் சொத்துரிமையில் இருவரும் பங்குதாரர்கள் என்று குறிப்பிட வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், பெற்றோரையோ, சகோதரன் அல்லது சகோதரியை கூட்டாக சேர்த்து கடனுக்கு விண்ணப்பித்தால், வாங்கப்படும் சொத்தில் இருவருக்கும் உரிமை உள்ளது என்பது கட்டாயம்’ என்றார்.

 இப்படி சேர்ந்து வீட்டுக்கடன் வாங்கும்போது வருமான வரிகள் சட்டம் பிரிவு 24ன் கீழ் வட்டி திரும்ப செலுத்துவதிலும், அசல் தொகை திரும்ப  வரிவிலக்கு பெற வகை உள்ளது. எனவே, சேர்ந்து யோசித்து செயல்பட்டால் கனவு நிறைவேறுவது நிச்சயம். நண்பர்கள் சேர்ந்து சொத்து வாங்க லோன் கிடைக்குமா? சேர்ந்து வசிப்பது என்று வரும்போது, நண்பர்களுடன் சேர்ந்து வசிப்பது, சகோதரியுடன் வசிப்பது, திருமணம் ஆகாமல் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்று வரும்போது, இவர்கள் ஜாயின்ட் லோன் கேட்டு விண்ணப்பிக்க முடியாது.

நண்பர்கள், சகோதரிகள், திருமணமாகாமல் சேர்ந்து வசிக்கும் தம்பதிகள் ஒரு சொத்துக்கு உரிமை உடையவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் சேர்ந்து கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களாக இருக்க முடியாது. கடன் வாங்குபவர்கள் யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து கடன் வாங்கிவிட முடியாது. அவர்கள் திருமணமான தம்பதி அல்லது ரத்த உறவு உடையவர்களாக இருப்பது அவசியம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

0 comments:

Post a Comment