Friday, May 23, 2014

கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரியை வசூலிக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை ஐகோர்ட்டில் எர்ணாவூரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்தையா என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

திரைப்பட தணிக்கை துறையிடம் 'யு' சான்றிதழ் பெற்ற திரைப்படம், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை வளர்க்கும் விதமாக உள்ள திரைப்படம், பெரும்பான்மையான வசனங்கள் தமிழில் உள்ள திரைப்படம் ஆகியவைகளுக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையின்படி பல திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசிடம் வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களை பார்க்க வரும் பொதுமக்களிடம் இருந்து தியேட்டர் உரிமையாளர்கள் வரியை வசூலிப்பதாகவும், இதில் மிகப்பெரிய மோசடி நடப்பதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும் 2011-ம் ஆண்டு அரசாணைக்கு தடை விதித்து கடந்த ஏப்ரல் 10-ந் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையில், 'தெனாலிராமன்' மற்றும் 'என்னமோ ஏதோ' ஆகிய திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி கேட்டு அந்த திரைப்படங்களில் தயாரிப்பாளர் அரசிடம் விண்ணப்பம் செய்தனர். வரி விலக்கு தொடர்பான அரசாணைக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளதால், அவர்களது விண்ணப்பத்தை பரிசீலிக்க முடியாது என்று தமிழக வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை முதன்மை செயலாளர், ஆணையாளர் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால் தமிழக அரசு 'கோச்சடையான்' படத்துக்கு வரி விலக்கு அளித்து கடந்த 12-ந் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.

வரி விலக்கு அளிக்கும் அரசாணைக்கு இந்த ஐகோர்ட்டு தடை விதித்து இருக்கும்போது, இதுபோன்ற வரி விலக்கு அளிக்க முடியாது. ஆனால், கோச்சடையான் படத்துக்கு எப்படி வரி விலக்கு வழங்கப்பட்டது? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிகாரிகளின் இந்த செயல் கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும்.

தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டம் அல்லது தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றின் கீழ் ஏதாவது ஒரு உத்தரவு பிறப்பிக்கும்போது, தமிழக அரசின் ஒப்புதலை பெறவேண்டும் என்பதையும் இந்த அதிகாரிகள் கவனிக்க தவறியுள்ளனர்.

திரையரங்கு உரிமையாளர்களுடன் கூட்டுச்சேர்ந்து, தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டத்தை தவறாக பயன்படுத்தி, அரசுக்கு மிகப்பெரிய இழப்பை இந்த அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

கேளிக்கை வரி விலக்கு என்பது பொதுமக்களுக்குத்தானே தவிர, அது தனி நபருக்கு இல்லை என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. எனவே, கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யவேண்டும்.

இந்த வழக்கு பைசலாகும் வரை அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அந்த அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். எனவே, திரையரங்கு உரிமையாளர்கள், கோச்சடையான் படத்தை பார்க்க வரும் பொதுமக்களிடம் இருந்து கேளிக்கை வரியை வசூலிக்கக்கூடாது.

கேளிக்கை வரி சேர்க்காமல், அரசு நிர்ணயம் செய்துள்ள டிக்கெட் கட்டணத்தை மட்டுமே திரையரங்கு உரிமையாளர்கள் வசூலிக்க வேண்டும். இந்த வழக்கில், திரையரங்கு உரிமையாளர்களை எதிர்மனுதாரராக மனுதாரர் சேர்க்க வேண்டும். வழக்கை, ஏற்கனவே கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment