Friday, May 23, 2014

ரசிகர்கள் பார்வையில் - கோச்சடையான் !

             கோச்சடையான் படம் பல்வேறு தடைகளைக் கடந்து வெளியாகிவிட்டது.

சில நாடுகளில் நேற்றே வெளியானதைக் கூறியிருந்தோம். அங்கெல்லாம் சிறப்புக் காட்சி பார்த்த அனைவருமே, விமர்சகர்களாக மாறி சமூக வலைத் தளங்களில் பாராட்டுகளையும் குறைகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.

ஒட்டு மொத்தமாக சினிமாக்காரர்கள் பாஷையில் சொன்னால், 'படம் தப்பிச்சிடுச்சி..' என்பதுதான் பொதுவான டாக்!

இனி இந்தப் படத்தைப் பார்த்தவர்களின் சில கருத்துகளைப் பார்ப்போம்...

ஐஎம்டிபி எனும் புகழ்பெற்ற சினிமா புள்ளிவிவர இணைய தளத்தில் இந்தப் படத்துக்கு 10-க்கு 8.3 ரேட்டிங் தந்துள்ளது. அதாவது இது பயனாளர்கள் தந்திருக்கும் ரேட்டிங்.

பிரிட்டனிலிருந்து வெளியாகும் இந்தியன் சினிமா மேகஸின் என்ற பத்திரிகை இந்தப் படத்துக்கு 5/5 என ரேட்டிங் கொடுத்ததுடன், படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் பிரமிக்க வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

"ரிலீசுக்கு முன் இந்தப் படம் அளவுக்கு வேறு எந்தப் படமும் கிண்டல் - கேலிகளைச் சந்தித்திருக்காது. ஆனால் படம் சிறப்பாகவே வந்திருக்கிறது. சில காட்சிகளில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை இன்னும் சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம். குறிப்பாக தீபிகா படுகோனுக்கு. மற்றபடி ரஜினி, நாகேஷை இந்தத் தொழில்நுட்பத்தில் சிறப்பாகக் கொண்டுவந்துள்ளனர்", என்று ஒரு விமர்சகர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு விமர்சகர், "இந்தப் படத்தின் முதுகெலும்பு என்றால் ரஜினிகாந்த், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் ஏஆர் ரஹ்மான்தான். இந்த மூவரும் படத்தின் கிராபிக்ஸ் கொஞ்சம் அமெச்சூர்த்தனமாக இருப்பதை மறக்கடிக்க வைத்துவிடுகிறார்கள். குறிப்பாக இடைவேளைக்குப் பிந்தைய படம் அத்தனை வேகமும் விறுவிறுப்பும் கொண்டதாக உள்ளது. முதல் படம் என்ற வகையில் சவுந்தர்யாவுக்கு இது பெரிய வெற்றி, என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இந்தத் தொழில் நுட்பம் இனி பரவலான பயன்பாட்டு வரும், கோச்சடையான் வெற்றி மூலம். கோச்சடையான் மாதிரி முழுப் படத்தையும் மோஷன் கேப்சரிங்கில் எடுக்காமல், கடினமான காட்சிகளை மட்டும் இந்த மாதிரி தொழில்நுட்பத்தில் இனி தாராளமாகச் செய்வார்கள். அதற்கு பெரும் வாசலைத் திறந்து வைத்துள்ளது கோச்சடையான் என ஒரு ஆங்கில தளம் குறிப்பிட்டுள்ளது. ரஜினியின் குரல், ரஹ்மானின் இசை இரண்டும் படத்தின் அனிமேஷன் குறைகளை மறக்கடித்துவிடுகின்றன என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு பிரபல இணையதளம் படத்தை கொஞ்சம் கடுமையாகவே விமர்சித்துள்ளது. "இது ரஜினியின் ரசிகர்களுக்கானது. இந்தப் படத்தின் மோஷன் கேப்சரிங் பணிகள், நிஜ ரஜினியைப் பார்க்கும் அளவுக்கு திருப்தியாக இல்லை. அடிக்கடி பாடல்கள் வருவது சலிப்பைத் தருகிறது. தீபிகா படுகோனை இன்னும் அழகாகக் காட்ட முயற்சித்திருக்கலாம்," என்று குறிப்பிட்டுள்ள அந்த தளம், இரண்டாவது பகுதி மிக விறுவிறுப்பாகச் செல்வதாகப் பாராட்டியுள்ளது.

பெருமளவு ரசிகர்களும், விமர்சகர்களும் படத்துக்கு சராசரியாக 5-க்கு 3.75 - 4 என ரேட்டிங் தந்துள்ளனர். ஒரே ஒரு இணையதளம் மட்டும் 2.5 என மதிப்பிட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு அடுத்த பாகம் வரவிருப்பதைக் குறிக்கும் வகையில் 'தொடரும்' போட்டு படத்தை முடித்திருக்கிறார்களாம். அந்த இரண்டாவது பாகம்தான் ராணா என்றால், அதை ரஜினியை வைத்து லைவ் ஆக்ஷனாக எடுக்க வேண்டும்... அனிமேஷனில் வேண்டாம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடிக்கத் தவறவில்லை. இவையெல்லாம் ரசிகர்கள், விமர்சகர்கள் கருத்துதான்.

0 comments:

Post a Comment