Friday, May 23, 2014

'ஹாலிவுட் மோஷன் கேப்சர் படங்களை விட நன்றாக இருக்கிறது கோச்சடையான்' - பில் ஸ்டில்கோ!


ஹாலிவுட்டில் வெளியாகும் மோஷன் கேப்சர் படங்களை விட எவ்வளவோ மேம்பட்டதாக உள்ளது ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம், என்று பாராட்டியுள்ளார் ஹாலிவுட்டின் பிரபல மோஷன் கேப்சரிங் நிறுவனத் தலைவர் பில் ஸ்டில்கோ.

ஹாலிவுட்டில் அனிமேஷன் மற்றும் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் நிறுவனம் சென்ட்ராய்ட் மோஷன் கேப்சர் கம்பெனி.

இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் பில் ஸ்டில்கோ. இவர்தான் இப்போது தலைவராகவும் செயல்படுகிறார். லண்டனில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோவில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

'ஹாலிவுட் மோஷன் கேப்சர் படங்களை விட நன்றாக இருக்கிறது கோச்சடையான்' - பில் ஸ்டில்கோ

கோச்சடையான் 3டி படத்தைப் பார்த்த பில் ஸ்டில்கோ ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள எக்ஸ்க்ளூசிவ் பேட்டி:

நான் இந்தத் துறையில் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளேன். ஹாலிவுட்டில் இந்தத் தொழில்நுட்பம் புகுந்த ஆரம்ப நாளிலிருந்து படங்களைப் பார்த்து வருகிறேன். நிச்சயமாகச் சொல்வேன், இதற்கு முன் ஹாலிவுட்டில் இந்த மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் வெளியான எத்தனையோ படங்களைக் காட்டிலும், பல மடங்கு சிறப்பாக வந்துள்ளது கோச்சடையான்.

இந்தப் படம் பற்றி, அது வெளியாகும் முன்பே சில விமர்சனங்கள் வந்ததை அறிந்தேன். ஆனால் நிச்சயம் அது வேறு ஏதோ காரணங்களுக்காக வந்திருக்கலாம். படம் பார்த்தால் அவர்கள் அமைதியாகிவிடுவார்கள்.

என் ஆர்வமெல்லாம், பத்தாண்டுகளில் இந்தத் தொழில்நுட்பம் எந்த அளவு வளர்ந்திருக்கிறது.. இதை இந்தியா எப்படி இனி பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதுதான்.

கோச்சடையானை இதே தொழில்நுட்பத்தில் இதற்கு முன் வந்த எந்தப் படத்தோடும் ஒப்பிட முடியாது. காரணம், இந்தப் படம் உருவாக்கப்பட்ட விதம் மற்றும் பின்னணி.

இந்தப் படத்தை வேறு படங்களோடு ஒப்பிடுவது மிகவும் தவறு. வேறுபட்ட பட்ஜெட்கள், வேறுபட்ட கால அவகாசம் மற்றும் வேறுபட்ட அனுபவங்கள்தான் அதற்குக் காரணம். அடுத்த 5 அல்ல பத்தாண்டுகளில் இந்த மாதிரி ஒப்பீடுகள் கூட இருக்காது என நினைக்கிறேன். தாங்கள் எப்படிப்பட்ட தவறான முடிவுகளுக்கு வந்துவிட்டோம் என விமர்சகர்கள் உணர்வார்கள்.

எல்லா மோஷன் கேப்சர் படங்களும் அதிக பட்ஜெட்டில் உருவானவை என்று சொல்ல முடியாது.

டின் டின், அவதார் படங்களுக்கு பெரிய அளவில் செலவானது ஏன் என்று கேட்கிறார்கள். இந்தப் படங்கள் உருவானபோது, மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம் அதன் ஆரம்பத்தில் இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் புதிதாகக் கண்டுபிடித்துப் பயன்படுத்தினோம். அந்த கண்டுபிடிப்புச் செலவும் படத்தின் பட்ஜெட்டில் சேர்ந்து கொண்டது.

ஆனால் இந்தியாவுக்கு அந்தக் கஷ்டம் இல்லை. இந்தத் தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தி படம் எடுத்ததால் ரூ 125 கோடியில் கோச்சடையானை எடுக்க முடிந்திருக்கிறது.

ரஜினிகாந்த் என்ற மிகப்பெரிய ஈர்ப்புள்ள நடிகர் இந்தப் படம் முழுக்க இருப்பதே, கோச்சடையானை மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வைக்கும் என நம்புகிறேன்.

இந்தப் படம் இந்தியப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

மோஷன் கேப்சர் டெக்னாலஜியை இந்திய சினிமாவில் அழுத்தமாக அறிமுகப்படுத்த ரஜினிகாந்த்தான் சிறந்த தேர்வு. இந்த மாதிரி ஒரு புதுமையான விஷயத்துக்கு அவர்தான் தேவை.

கோச்சடையானை குழந்தைகளுக்கான ஒரு அனிமேஷன் படம் என்று சிலர் பார்க்கிறார்கள். இது அவர்களின் சினிமா ரசனை எந்த அளவு பாமரத்தனமாக உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம். கிராபிக் நாவல்கள், காமிக்ஸ்களைப் படிக்கத் தவறியதாலேயே இப்படியெல்லாம் அவர்கள் பேசுகிறார்கள். இந்தப் படத்தை ஆதரிக்கத் தவறினால், இந்தத் தொழில்நுட்பத்தை தவறவிடுவதாக அர்த்தம்."

-இவ்வாறு பில் ஸ்டில்கோ கூறியுள்ளார்.

ஹாரி பாட்டர், அயன்மேன், ஹ்யூகோ, டோட்டல் ரீகால், வோர்ல்ட் வார்ஸ், 2012, லாஸ்ட் இன் ஸ்பேஸ், குவாண்டம் ஆப் சோலேஸ் உள்பட ஏராளமான படங்களுக்கு மோஷன் கேப்சரிங் மற்றும் 3 டி பணிகள் செய்தது பில் ஸ்டில்கோவின் சென்ட்ராய்ட் நிறுவனம். இப்போது கோச்சடையானுக்கும் மோஷன் கேப்சரிங் பணியாற்றியுள்ளது.

சென்னையில் இன்னொரு நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் பிற மொழிப் படங்களுக்கு பணியாற்ற முடிவு செய்துள்ளது சென்ட்ராய்ட்.

1 comments:

  1. மட்டமான சரக்கை விக்கிறதுக்கு யாருக்கோ காசு கொடுத்து கூவ வைக்கிறாங்க.

    ReplyDelete