Sunday, May 25, 2014

நூற்றெட்டின்(108) மகத்துவம்!

இந்து மத குருமார்களும், பெரியவர்களும் இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்ய நூற்றெட்டு மணிகள் கொண்ட ஜப மாலை பயன்படுத்துவது எல்லோருக்கும் தெரிந்ததே. காரணம், இந்துத் தெய்வங்களை அர்ச்சிக்கும் அஷ்டோத்திரங்கள் நூற்றெட்டு. இந்து மதத்தில் மட்டுமின்றி உலகின் பல்வேறு மதங்களிலும், நம்பிக்கைகளிலும், சாஸ்திரங்களிலும் 108 எனும் எண்ணுக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படக் காரணம் இயற்கையின் படைப்புகளிலும் இன்னும் பல்வேறு வகைகளிலும் 108-க்கு முதன்மையான இடம் உண்டு. அவை என்னென்ன, எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

1. பூமியின் விட்டத்தை (குறுக்களவு) விடச் சூரியனின் விட்டம் 108 மடங்கு அதிகம்.

2. பூமிக்கும் சூரியனுக்குமிடையே உள்ள தூரம் சூரியனின் சுற்றளவைப் போல் 108 மடங்காகும்.

3. பூமிக்கும் சந்திரனுக்குமிடையே உள்ள சராசரித் தூரம் சந்திரனின் விட்டத்தைப் போன்று 108 மடங்காகும்
.
4. ஆயுர்வேதத்தின்படி 108 மர்மப் புள்ளிகள் பூவுலகில் வாழும் அனைத்துயிர்களுக்கும் இன்றிமையாத சக்தி மையங்களாகக் கூறப்பட்டுள்ளன.

5. சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பில் குறுக்குக்கோடுகள் 54 இடங்களில் கடந்து ஆணின் ஆண்மையையும், பெண்ணின் நளினத்தையும் காட்டும் 108 ஆக அமைந்துள்ளன.

6. பரத நாட்டியத்தின் கரணங்கள் (முத்திரைகள்) 108.

7. வட மொழியில் 54 எழுத்துக்கள் சிவ ஸ்வரூபமாகவும், 54 எழுத்துக்கள் சக்தி ஸ்வரூபமாகவும் கருதப்படுகின்றன. ஆக மொத்தம் நூற்றெட்டு.

8. இந்து தர்மத்தின் புராணங்கள் நூற்றெட்டு; உபநிஷத்துக்கள் நூற்றெட்டு.

9. நீண்ட காலமாகப் புனிதமானவையாகக் கருதப்படுகிற ஒன்பதையும் பன்னிரண்டையும் பெருக்கினால் வருவது நூற்றெட்டு. மேலும், 108-ஐ ஒவ்வோர் இலக்கமாகப் பிரித்தால், முதல் இலக்கமான ஒன்று எல்லோருக்கும் மேலான பரத்துவம் ஒன்று இருக்கிறது என்பதையும், 0 இந்து மதத்தில் பெரிதும் போற்றப்படும் நிலையான வெறுமை அல்லது பூரணத்தைக் குறிப்பதாகவும், 8 என்னும் எண் எல்லையற்றதும், நிரந்தரமானதுமான உண்மைத் தத்துவத்தைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகிறது. தவிர, இந்த மூன்று இலக்கங்களின் கூட்டுத்தொகை ஒன்பது. அதாவது 1+0+8=9.

10. 108 என்பது ‘ஹர்ஷத் எண்’ (வட மொழியில் பெருமகிழ்ச்சி என்று பொருள்படும்).

11. இருதயச் சக்கரங்கள் எனப்படுபவை ஆற்றலை வெளிப்படுத்தும் 108 நுண் குழல்களாகச் செயல்பட்டு இவற்றுள் சுஷும்னா எனப்படும் நாடி தலை உச்சியை அடைந்தால் தன்னைத் தானே உணரும் பேரானந்த நிலையை அடையலாம் எனக் கூறப்படுகிறது.

12. பிராணாயாமப் பயிற்சி செய்த ஒருவர் ஒரு நாளைக்கு நூற்றெட்டு மூச்சுக்கள் மாத்திரம் விடப் பயின்றால் அவர் தன்னைத் தானே உணர்ந்து கொள்ள இயலும் என்கிறது யோக சாஸ்திரம்.

13. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என ஒவ்வொன்றுக்கும் முப்பத்தாறு நினைவுகள் எனும் வகையில் மனித மனதில் உணர்வுகள் நூற்றெட்டு எனக் கூறப்படுகிறது.

14. பாகவதத்தில் கிருஷ்ணனை விரும்பும் கோபிகைகள் எண்ணிக்கை நூற்றெட்டு.

15. யோக சாஸ்திரத்தில், மனிதச் சிந்தனைகளைத் தீர்மானிக்கும் கோளாகக் கூறப்படுவது சந்திரன். வானவியல்படிச் சந்திரனின் பிரதிநிதியாகக் கருதப்படும் வெள்ளியின் அணு எடை எண் 108.

16. தியான முறைகள் மொத்தம் நூற்றெட்டு.

17. சீக்கிய மதத்திலும் நூற்றெட்டு முடிச்சுக்கள் கொண்ட ஜப மாலையைப் பயன்படுத்துவது வழக்கம்.

18. அக்ரூட் மரத்தில் நூற்றெட்டு புத்த முகங்களைச் செதுக்கி வைத்துக் கொள்வது அதிர்ஷ்டம் தருவதாக நம்பப்படுகிறது.

19. புத்த மதத்தின்படி, சிலர் புத்தாண்டின் தொடக்கத்தில் 108 முறை மணி அடிப்பது வழக்கம்.

20. நற்குணங்கள், தீய குணங்கள் எண்ணிக்கை தலா 108 என்பதும் ஒரு புத்த மத நம்பிக்கை.

21. சீன புத்தர்களும், தாவொயிஸ்டுகளும் கூட 108 மணிகளுடன் கூடிய சூ சூ (su-chu) என்னும் மணி மாலையை பயன்படுத்துகிறார்கள். அந்த மணிமாலை 36 மணிகள் கொண்ட மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இடையிடையில் ஒரு மணி கோக்கப்பட்டிருக்கும்.

22. சீன வானசாஸ்திரத்தின்படிப் புனிதமான நட்சத்திரங்கள் மொத்தம் 108.

23. ஆன்மா தன் பயணத்தில் கடக்க வேண்டிய பகுதிகளின் எண்ணிக்கை 108.

24. ஜப்பானில் ஒவ்வோர் ஆண்டு முடிவிலும் பழைய ஆண்டுக்கு விடைகொடுத்துப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஒரு மணி 108 முறை ஒலிக்கப்படுகிறது. ஒவ்வொரு மணி ஓசையும் நிர்வாணம் என்னும் ஆனந்த நிலையை அடைவதற்குப் புவியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் 108 ஆசைகளைத் துறக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

0 comments:

Post a Comment