Thursday, December 12, 2013

கண்ணீர்!


இன்றைய தொலைகாட்சிகள் அநேகம் பெண்களை அழ வைக்கின்றன.
அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
அழுதால் துயரங்களின் சுமை குறையும்.
ஆண்கள் அழுவதில்லை.
ஆண்கள் தான் பெண்களை விட அதிகம் மாரடைப்பால் இறந்து போகிறார்கள்
ஆண்கள் தான் பெண்களை விட அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
ஆண்கள் தான் பெண்களை விட அதிகம் மனநோயாளி ஆகிறார்கள்.

காரணம் என்ன தெரியுமா?
அவர்கள் அழுவதில்லை
ஆண்கள் தங்கள் துயரங்களை மனதுக்குள் அடக்கிக் கொள்கிறார்கள்.
விளைவு விபத்து
பிரஷர் குக்கரை பார்த்து இருப்பிர்கள். அதற்குள் திரளும் நீராவி அளவுக்கு அதிகமானால் அது வெடித்து விடும். எனவே அதிகம் திரளும் நீராவியை வெளியேற்ற குக்கரில் ஒரு சேப்டி வால்வ் இருக்கும்.
அழுகை ஒரு சேப்டி வால்வ். அது பெண்களிடம் இருக்கிறது. அதனால் அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.
ஆண்களிடம் அந்த சேப்டி வால்வ் இல்லை. அதனால் அவர்கள் பிரஷர் (இரத்தக் கொதிப்பு) அதிகமாகி வெடித்து விடுகிறார்கள்.

அழுகை கவலைககளை குறைக்கும்.
கவலை குறைந்தால் ஆயுள் கூடும்,
அமிர்தத்தை அருந்தினால் ஆயுள் கூடும் என்று புராணங்கள் சொல்கின்றன,
கண்ணீரும் அமிர்தம் தான்.
நம் இதயம் எனும் பாற்கடலை
உணர்சிகள் கடையும் போது
உண்டாகும் அமிர்தம் தான் கண்ணீர்

ஒரு வித்தியாசம்
அமிர்தத்தை அருந்தினால் ஆயுள் நீளும்
கண்ணீரை வெளியேற்றினால் ஆயுள் நீளும்

கண்ணீர் பலவீனமானது என்கிறார்கள்.
அது தவறு
உண்மையில் மென்மை வன்மையானது
மென்மையான அருவி வன்மையான பாறையை கூட நகர்த்தி விடுகிறது.

பெண்ணின் கண்ணீரை விட பலமான படை ஏதும் உண்டா?
முப்படை சாதிக்க முடியாததை இப்படை சாதிக்கிறதே.
பருவம் பெண்களை ஆண்களுக்கு எதிராக ஆயுதபாணி ஆக்குகிறது;
ஆனால் அவளுடைய பருவ ஆயுதங்களை விட அவளது கண்ணீர் பயங்கரமானது. அது எந்த பாறையும் உருட்டி விடும்.

கண்ணீரை தேவை கருதிய இறைவன் படைத்திருக்கிறான்.
நம் கண்களின் மேல் இமைக்குக் கீழே கண்ணீர் சுரபிகள் இருக்கின்றன.
நாம் ஒவ்வொரு முறை இமைக்கும் போதும் இமைகள் மெல்லிய கண்ணீர் படலத்தை கண்களின் மேல் பூசுகின்றன. அதனால் கண்கள் தூய்மை அடைகின்றன.

மனம் இருப்பதால் தான் நமக்கு மனிதன் என்று பெயர் வந்தது. மனிதனின் முகவரி அவனது கண்ணீர் தான்.
பாவங்களை போக்க நாம் கடும் தவம் பண்ணத் தேவை இல்லை.
கோவில் கோவிலாக சுற்ற வேண்டியதில்லை.
நம் பாவங்களை நினைத்து அழுதாலே போதும் நம் பாவங்கள் தீரும் என்று மறைகள் சொல்கின்றன.
அழுதால் போதும் ஆண்டவனை அடையலாம் என்கிறது திருவாசகம்

கண்ணீர் துயரத்தின் மொழி மட்டும் அல்ல
அளவுக் அதிகமான ஆனந்தத்தின் மொழியும் அது தான்,
அதை தான் ஆனந்தக் கண்ணீர் என்கிறோம்.

கண்ணீரை அற்பமாக நினைக்காதீர்கள்.
அது உணர்ச்சி விரல்கள் மீட்டும் மெளனராகம்
இமைகள் உருட்டும் ஜெபமாலை
நெருப்பில் பிறக்கும் நீர்
உள்காயத்துக்கு உடல் தானே தயாரிக்கும் அருமருந்து
கண் மலர்களில் சுரக்கும் தேன்.

0 comments:

Post a Comment