Saturday, November 2, 2013

நாட்டையே உலுக்கிய இரண்டு சம்பவங்கள்! குற்றவாளிகள் யார் என தெரியாது?

சாதாரண மக்களுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள், அதன் நிர்வாகிகள், மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என, பலருக்கும் அவரை நன்கு தெரிந்திருக்கும்.


சுனிதா நாராயணன்:


உலக நாடுகள் அனைத்திலும், தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளிக்கும் பிரமாண்ட நிறுவனங்களையும் எதிர்த்து நிற்பவர் இவர் என்பதால், அந்த நிறுவனங்கள் இவரைப் பற்றி நன்கு அறிந்திருக்கும்.உதாரணமாக, குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் உள்ள கிருமிகளை அகற்ற, அளவுக்கு அதிகமாக, பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், குளிர்பானங்கள், உயிர்கொல்லி பானங்களாக மாறி விடுகின்றன என, நாட்டுக்கு வெளிப்படுத்தியவர் இவர்.அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஏராளமான ஆய்வுகளில், இவர் சொன்னது சரி தான் என்பது, தெரிய வந்த போதிலும், பூச்சிக்கொல்லி குளிர்பானங்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.அவர், சுனிதா நாராயணன்.டில்லியை சேர்ந்த இவர், 'சென்டர் பார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்' என்ற, அரசுசாரா தொண்டு நிறுவனத்தை, நடத்தி வருகிறார். அதன் மூலம், கண்ணுக்குத் தெரியாத பல, பிரமாண்ட எதிரிகளை சம்பாதித்துள்ளார்.சாதாரண மக்களின் பாதுகாப்பிற்காக, அவர்களின் வாழ்வாதாரத்திற்காக, இவர் மேற்கொள்ளும் முயற்சிகள், இயற்கையாகவே இவருக்கு, பல எதிரிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.இருந்தாலும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்த அவரைக் கொல்ல, இரண்டு வாரங்களுக்கு முன், முயற்சி நடந்தது.

அதை போலீசார், விபத்து என கூறினாலும், இன்னும் எழுந்திருக்க முடியாத வகையில், பலத்த காயம் அடைந்துள்ள சுனிதாவை கொல்ல நடத்தப்பட்ட முயற்சி என்றே, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.ஏனெனில், வாகனங்கள் அதிகம் ஓடாத அந்த காலைப் பொழுதில், வேகமாக வந்த கார் சைக்கிளில், சாலை ஓரம் சென்ற சுனிதா மீது மோதி, துாக்கி எறிந்து சென்றுள்ளது என்றால், அதை விபத்து என கூறுவதா...!

விபத்து என்றால், அதை ஏற்படுத்தியவர் யார் எனத் தெரியவேண்டுமல்லவா...?முகத்திலும், தோள்பட்டையிலும் பல அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. மிகவும் மோசமாக இருந்த அவரின் உடல் நிலை, கடந்த சில நாட்களாக, சற்றே முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால், அவர் மீது மோதிய கார் பற்றிய விவரமும் தெரியவி்ல்லை; விசாரணையில் முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இரண்டாவது சம்பவம், கொலை.மகாராஷ்டிராவின், புனே நகரில், பில்லி சூனிய பேர்வழிகளுக்கு எதிராகவும், மோசடி மந்திரவாதிகளுக்கு எதிராகவும், பல ஆண்டுகளாக போராடி வந்த, நரேந்திர தபோல்கர், கடந்த ஆகஸ்ட் மாதம், மர்ம நபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.அவரை சுட்டுக் கொன்ற கொலைகாரர்கள் பயணம் செய்த இருசக்கர வாகனம், சென்ற வழி எல்லாம், போலீசுக்கு தெரிகிறது; ஆனால், கொலைகாரர்கள் மட்டும், இன்னும் பிடிபடவில்லை.எம்.பி.பி.எஸ்., படித்து, நோயாளிகளின் நோயை போக்கும் முயற்சியில் சக டாக்டர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், நரேந்திர தபோல்கர், சமூகத்தை பிடித்திருந்த, நோயை போக்க முயற்சித்தார். அதனால், அவரின் சக டாக்டர் நண்பர்கள், கோடிகளைக் குவித்த நிலையில், இந்த உலகை விட்டே போய்விட்டார் நரேந்திர தபோல்கர்.மகாராஷ்டிர அந்தராஷ்ரதா
நிர்மூலன் சமதி என்ற பெயரில், ஒரு அமைப்பையே நிறுவி, மூட நம்பிக்கைகளுக்கும், பில்லி, சூனியத்திற்கும் எதிராக போராடிவந்த, நரேந்திரா மறைந்து விட்டார்.அவர் விட்டுச் சென்ற பணியை, அவரின் வாரிசுகள், ஹமித் மற்றும் முக்தா தொடர்கின்றனர்.


சடங்குகள் இல்லாமல்...:


வீடு கட்டுபவர்கள், நல்ல நாளில் வேலைகளைத் துவங்குவர். வீட்டின் அறைகளை, வாஸ்து சாஸ்திரப்படி அமைப்பர். வீட்டுக்கு வெளியே, திருஷ்டி பூசணிக்காயை போட்டு உடைப்பர்.நரேந்திர தபோல்கரும் வீடு கட்டினார்.எவ்வித சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கும் இடம் கொடுக்காமல், வாஸ்து பற்றி கவலைப்படாமல், தன் இஷ்டத்திற்கு வீட்டைக் கட்டினார். திருஷ்டி பூசணிக்காய் கிடையாது; புதுமனை புகுவிழா கிடையாது.எளிமையாக வாழ்ந்து காட்டியவர். எளிமையான முறையில் திருமணம் செய்த அவர், தன் இரு வாரிசுகளுக்கும், மிக எளிமையாக, எவ்விதச் சடங்குகளும் இல்லாமல் திருமணம் நடத்தியவர்.

0 comments:

Post a Comment