Monday, November 11, 2013

குறட்டையை விரட்டும் சிகிச்சை!

 குறட்டையை விரட்டும் சிகிச்சை

குறட்டை என்பது மற்றவர்களால் கேலி செய்யப்படும் விஷயம் அல்ல. அது ஒரு நோய். தூங்கும் போது மூச்சுப் பாதை சிறிதளவோ அல்லது முழுவதுமாகவோ அடைத்துக் கொள்வதால்தான் குறட்டை தோன்றுகிறது. உடல் எடை அதிகரித்தால், அதிக கொழுப்பு சேரும்.

அப்போது நுரையீரலால் தேவையான அளவுக்கு விரிவடைய இயலாது. அதனால் மூச்சை உள்ளே இழுப்பதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டு குறட்டை என்னும் முரட்டுச் சத்தமாக வெளியேறும். குறட்டையால் அருகில் தூங்குபவர்களுக்கு மட்டும்தான் தொந்தரவு என்பதில்லை.

குறட்டைவிடுபவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும். குறட்டையை கட்டுப்படுத்தாவிட்டால் இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல நோய்கள் ஏற்படக்கூடும். குறட்டையை கட்டுப்படுத்துவதற்கு குறட்டை விடுபவரை தூக்கத்தில் ஆழ்த்தி, ஆய்வு செய்யவேண்டும்.

அதன் மூலம் தூக்கத்தில் குறட்டை எந்த அளவுக்கு, எந்த நேரத்தில் வருகிறது என்பதை முழுமையாக ஆய்வு செய்யமுடியும். இதற்கென இருக்கும் சிறப்பு ஆய்வுக்கூடத்தில், சிறந்த பரிசோதனை கருவிகளோடு அதை செய்யவேண்டும்.

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சிகிச்சை நடக்கும். மேல் தாடை மற்றும் கீழ் தாடைகளை சரியான முறையில் பொருத்துவதன் மூலம் பெரும்பாலான குறட்டை பிரச்சினையை தீர்த்துவிட முடியும்.

குறட்டையை சரிசெய்வதற்காக தாடை, நாக்கு, கன்னப்பகுதிகள், அண்ணப்பகுதிகள் மற்றும் சுவாச பகுதியுடன் இணைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். குறட்டை இல்லாத நிம்மதியான தூக்கம்தான் ஆரோக்கியமானது.

0 comments:

Post a Comment