Thursday, November 7, 2013

அரைகுறை காமெடியன்கள் கவுண்டரின் கால் தூசிக்குக் கூட நிகரானவர்கள் கிடையாது!


கவுண்டமணி என்றாலே நக்கல், நையாண்டி, யாரையும் மதிக்காத பேச்சு என்று எல்லோர் மனதிலும் வேரூன்றிப் போயிருக்கும் அம்சங்கள், ஆனால் இவை அனைத்தையும் கடந்து கவுண்டமணி என்பவர் மற்ற சராசரி நகைச்சுவை நடிகர்களைப் போல் தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்ட...ுக் கொள்ளாதவர்.

அவர் சில காட்சிகளில் யாரும் சொல்லத் துணியாத சமூக, அரசியல் அவலங்களை வெகு இயல்பாக சொல்லிவிட்டுச் செல்பவர். ஆனால், அவரை வெறும் நக்கல் மன்னன் என்ற அளவில் மட்டும் மக்கள் அவரை உருவகம் செய்துவிட்டனர். அப்படி நாம் கவனிக்கத் தவறிய கவுண்டமணியின் படங்களில் ஒன்றுதான் "ஒன்னா இருக்க கத்துக்கனும்".

இந்தப் படத்தில் அவர் ஊர் வெட்டியான் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். இதை சாதாரணமாக எந்த நகைச்சுவை நடிகரும் ஏற்றி நடிக்காத ஒரு பாத்திரம். வடிவேலு ஒரு படத்தில் நடித்திருப்பதாக ஞாபகம், ஆனால் அதில் வடிவேலுவின் வசனங்கள் எல்லாம் மேம்போக்கானவை மட்டுமே. சட்டை கசங்காமல், கண்ணாடி கழட்டாமல் நகைச்சுவை பண்ணித் திரிந்த விவேக்கும், அதையே பின்பற்றி நடக்கும் சந்தானமும் இந்த விஷயத்தில் கவுண்டரிடம் பிச்சை வாங்க வேண்டும்.

மேலும், அந்தப் பாடம் வெளிவந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. 1992, அந்த ஆண்டில்தான் கவுண்டமணியின் நடிப்பில் திருமதி பழனிச்சாமி, சூரியன், சிங்காரவேலன், மன்னன் போன்ற படங்கள் வெளிவந்திருந்தன. அந்தப் படங்கள் அனைத்துமே நகைச்சுவையில் வெற்றிக்கொடி கட்டிய படங்கள். அதுவும் அந்தப் படங்களில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து கலக்கியிருப்பார் கவுண்டர்.

அப்படிப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்த ஒரு நடிகர், இப்படி ஒரு சிறிய படத்தில் அதுவும் வெட்டியான் பாத்திரத்தில் நடிப்பது என்பது அரிதான ஒன்று. அந்தப் படம் கிராமங்களில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், உயர்சாதி ஆட்களால் வஞ்சிக்கப்படும் சேரிவாழ் மக்களின் எதார்த்த வாழ்க்கையை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் படம். அதில், தன் மகனுக்கு கல்வி வழங்கத் துடிக்கும் தகப்பனாக, தான் வஞ்சிக்கப்படுகிறோம் என்று அறிந்ததும் ஆதிக்க சாதியினரை எதிர்க்கும் கிளர்ச்சியாளனாக சிறப்பாக நடித்திருப்பார் கவுண்டர்.

இதைப் படிக்கும் பொழுது சிலருக்கு சிரிப்பு வரலாம், ஆனால் உண்மையில் ஒரு சமூக பொறுப்புள்ள ஒரு கலைஞனை வெறும் காமெடி நடிகனாக மட்டுமே சித்தரிப்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். இப்பொழுது இருக்கும் அரைகுறை காமெடியன்கள் கவுண்டரின் கால் தூசிக்குக் கூட நிகரானவர்கள் கிடையாது.

0 comments:

Post a Comment