Thursday, November 14, 2013

உலக சதுரங்கம் (செஸ்) - கார்ல்செனின் கை சற்று(4–வது சுற்று) ஓங்கி இருந்தது!

சென்னையில் நடந்து வரும் உலக சதுரங்க (செஸ்) போட்டியில் ஆனந்த்–கார்ல்சென் இடையிலான 4–வது சுற்றும் ‘டிரா’வில் முடிந்தது.

                                            
உலக சதுரங்கம்
தமிழக அரசின் ஆதரவுடன் நடப்பு சாம்பியன் விசுவநாதன் ஆனந்த் (இந்தியா), உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) இடையேயான உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. 12 சுற்று கொண்ட இந்த போட்டியில் 6.5 புள்ளியை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை பெறுவர்.

இதில் முதல் 3 சுற்று ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இந்த நிலையில் 4–வது சுற்று ஆட்டம் நடந்தது. ஆனந்த் வெள்ளை நிற காய்களுடன் ஆட்டத்தை தொடங்கினார். ராஜாவின் முன்னால் உள்ள சிப்பாயை 2 கட்டம் நகர்த்தி ஆட்டத்தை தொடங்கினார். அதாவது ‘ரய் லோபஸ்’ முறையில் ஆனந்த் ஆட்டத்தை ஆரம்பித்தார். அதே பாணியைத்தான் கார்ல்செனும் கடைபிடித்தார்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடி காட்டினர். 6–வது நகர்த்தலில் ஆனந்த், எதிராளியின் குதிரையை வெட்டி தனது இரண்டு மந்திரிகளில் ஒன்றை விட்டுக்கொடுத்தார். 8–வது நகர்தலில் ராணியையும் (குயின்) அடிக்கு அடி என்று வெளியேற்றினர்.

18–வது நகர்த்தலில் ஒரு சிப்பாயை விட்டுக்கொடுத்து கார்ல்செனின் மந்திரியை கைப்பற்ற ஆனந்த் முயற்சித்தார். ஆனால் கார்ல்சென் ஆனந்தின் சிப்பாயை விழுங்கியதோடு, சாதுர்யமாக தனது மந்திரியையும் காப்பாற்றிக் கொண்டார். ஆனந்திடம் ஒரு சிப்பாய் குறைவாக இருந்ததால் கார்ல்செனின் கை சற்று ஓங்கியது.

டிரா ஆனது

இதனால் ஆனந்த் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட போதிலும், அதில் இருந்து தனது அனுபவத்தின் மூலம் சிறப்பாக மீண்டார். கார்ல்செனின் யுக்திகள் அனைத்தையும் முறியடித்தார். இறுதியில் 64–வது நகர்த்தலில் ஆட்டம் டிரா ஆனது. அப்போது ஆனந்திடம் ராஜாவுடன் ஒரு யானையும், கார்ல்செனிடம் ராஜாவுடன் யானை, சிப்பாயும் எஞ்சி இருந்தன. ஏறக்குறைய 6 மணி நேரம் போட்டி நீடித்த போதிலும் இந்த முறையும் முடிவு கிடைக்கவில்லை. டிரா ஆனதால் இருவருக்கும் அரை புள்ளி வீதம் வழங்கப்பட்டது. இருவரும் தற்போது தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment