Saturday, October 26, 2013

ஆயுர்வேதம் கற்றுத்தரும் பாடம்!















மனிதனிடம் தோன்றும் இயற்கையான உணர்வுகளை வேகம் என்று அழைக்கிறது ஆயுர்வேதம். இந்த வேகம் உடல் சம்மந்தமாகவோ அல்லது மனம் சம்மந்தமாகவோ இருக்கலாம்.


வேகத்தை தாரணீய வேகம் என்றும் அதாரணீய வேகம் என்றும் பிரிக்கிறார்கள். தாரணீய வேகம் என்றால் அடக்க வேண்டிய உணர்வுகள் என்றுபொருள். உதாரணமாக கோபம், போட்டி, பொறாமை, வஞ்சகம், காமம் போன்றவை அடக்கி நெறிமுறைப்படுத்த வேண்டியவை. அதாரணீய வேகம் என்றால் தடுக்கக்கூடாத உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் என்று பொருள். பசி, தும்மல், தண்ணீர் தாகம், அபான வாயு, மலம், சிறுநீர், இருமல், தூக்கம், மேல்மூச்சு, கொட்டாவி, கண்ணீர், வாந்தி, சுக்லம் ஆகியவையாகும்.


அபான வாயுவையும், மலத்தையும் அடக்கினால் வயிற்றுவலி, பசியின்மை, பார்வைக்குறைவு, இருதய நோய்கள், தலைவலி போன்றவை ஏற்படும். மலத்தை அடக்குவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். சிறுநீரை அடக்கினால் நீர்க்கடுப்பு, எரிச்சல், வலி, சக்தியின்மை போன்றவை ஏற்படும். அவ்வாறு அடக்க நேர்ந்தால் உடனடி பாதிப்பு தெரியாவிட்டாலும் நிறைய நோய்கள் வந்தடையும். ஏப்பம், தும்மல் அடக்கினால் தலைவலி, கழுத்துவலி போன்றவை ஏற்படும். தலைவலி, ஜலதோஷம், மூச்சு முட்டு, ஆசனக்கடுப்பு, நெஞ்சுவலி போன்றவை படையெடுக்கும்.


தண்ணீர் தாகத்தை அடக்க பழகிவிட்டால் நாவறட்சி ஏற்பட்டு ‘டீஹைட்ரேஷன்’ உண்டாகும். தலைசுற்றல், மயக்கம் வரும். தூக்கம் என்பது மனித ஆரோக்கியத்தின் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. தூக்கம் வரும்போது உடனே தூங்கிவிடுவது நல்லது. இரவில் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி விடியற்காலை குறிப்பிட்ட நேரத்தில் எழுந்தரிக்க பழகுவது சிறப்பானது. வேலைக்காக இரவில் விழித்திருப்பது பின்னாளில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.


இதைத்தான் தலாய்லாமா மனிதனின் விசித்திர பழக்கம் என்று குறிப்பிட்டார். இளமையில் இரவு பகல் பாராமல் உழைத்து பணத்தை சேர்க்கிறான். சரியான தூக்கம், ஓய்வு இல்லாததால் விரைவிலேயே உடல்நலத்தை கெடுத்துக்கொள்கிறான். பின் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் செலவு செய்து தொலைந்த உடல்நலத்தை மீட்கிறான் என்றார். உண்மைதான். மனிதன் சரியான ஓய்வு, சரியான தூக்கம் போன்றவற்றை இளமையில் இருந்தே கடைபிடித்தால் பின்னாளில் உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய வேண்டியதில்லை. கூட்டிக்கழித்துபார்த்தால் உடலை கெடுத்து இளமையில் சம்பாதிக்கும் பணம் பின்னாளில் அந்த உடல் ஆரோக்கியத்திற்கு செலவாகிறது. அதனால் தேவையான அளவு உழைத்து ஆரோக்கியத்தை காப்போம் என்கிறது ஆயுர்வேதம்.

0 comments:

Post a Comment