Thursday, September 19, 2013

“கீழ் கோர்ட்டுகளில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு “! – ஹைகோர்ட்டு தலைமை நீதிபதி உறுதி!


ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும், கீழ்கோர்ட்டுகளில் தீர்ப்புகளை ஆங்கிலத்திலும் எழுதலாம் என்று, கடந்த 1994-ம் ஆண்டு தலைமை நீதிபதி கே.ஏ.சாமி தலைமையிலான நீதிபதிகள் குழு கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வக்கீல்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீல்கள் எழிலரசு, சூரியபகவான்தாஸ், வினோத், சட்டக்கல்லூரி மாணவர் திசைஎந்திரன் ஆகியோர் கடந்த 16-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். நேற்று 3-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.



sep 19 - judgement



இதனால் அவர்களது உடல்நிலை மோசமானது. மதுரை ஐகோர்ட்டு கிளையில் செயல்பட்டு வரும் ஆஸ்பத்திரி டாக்டர்கள், உண்ணாவிரதம் இருந்தவர்களின் உடல்நிலையை பரிசோதித்தனர். அப்போது வக்கீல் வினோத் உடல்நிலை மோசமாக இருந்ததால், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வினோத், மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 



இதற்கிடையில், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக சட்டக்கல்லூரி மாணவர்கள் 13 பேர் நேற்று ஐகோர்ட்டு கிளைக்கு வந்தனர். ஆனால் போலீசார் அவர்களை உள்ளே விடுவதற்கு மறுத்து விட்டனர். தடையை மீறி ஐகோர்ட்டு வளாகத்திற்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மேலும் 45 பேர் ஊர்வலமாக வந்தனர். மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் அருகே வந்த அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களுக்கு கொண்டு சென்றனர். 



இந்த நிலையில், போராடும் வக்கீல்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அக்ரவால், கீழ் கோர்ட்டுகளில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று, நீதிபதி சாமி தலைமையிலான குழுவின் பரிந்துரை அடிப்படையிலான விதிமுறை ரத்து செய்யப்படும் என்றும், அவர் அறிவித்தார்.


நேற்று மாலை 3.30 மணிக்கு, உண்ணாவிரதம் இருந்த வக்கீல்களிடம் மதுரை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் உறுதிமொழி பற்றி தெரிவித்து, உண்ணாவிரதத்தை தற்காலிகமாக வாபஸ் பெற வேண்டும்” என்று வற்புறுத்தினார்கள்.அதை ஏற்றுக்கொண்ட வக்கீல்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.

0 comments:

Post a Comment