Sunday, September 8, 2013

2020ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் நடத்தும் வாய்ப்பை தட்டியது ஜப்பான்!

வரும்  ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ளது. 2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் மாட்ரிட் ஆகிய நகரங்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பானின் டோக்கியோ நகரம் தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக, கடந்த 1964ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.



sep 8 The-Olympic-

 


ஸ்விட்சர்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஆண்டு செயல்குழுக் கூட்டம் கடந்த வெள்ளியன்று துவங்கியது. அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்சில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. 


இதில் வரும் 2020ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரத்தினை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் துருக்கியின் இஸ்தான்புல் நகரைத் தோற்கடித்து ஜப்பானின் டோக்கியோ நகரம் இந்த வாய்ப்பினைப் பெற்றது. 


வாக்கெடுப்புக்கான முதல் சுற்றில் கனடாவின் மாட்ரிட் நகரத்துடன் சரிசமமான வாக்குகளைப் பெற்ற இஸ்தான்புல், பின்னர் நடந்த விவாதத்தில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்று வாக்கெடுப்பிற்குத் தகுதி பெற்றது. இதன்பின்னர் நடந்த தகுதிச் சுற்றில் இஸ்தான்புல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, டோக்கியோ தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக்குவஸ் ரோக் அறிவித்தார்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ச்பர்கில் நடைபெற்ற ஜி -20 கூட்டத் தொடருக்குப் பின்னர் இந்தக் கமிட்டியின் கூட்டத்தில் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே கலந்துகொண்டார். சுனாமியினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் புகுஷிமா அணு உலை குறித்த உறுப்பினர்களின் அச்சத்தை ஜப்பானியப் பிரதமர் நிவர்த்தி செய்தார். 


டோக்கியோவிலிருந்து 220 கி.மீ தொலைவில் உள்ள இந்த அணு உலையானது தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும், அதனால் டோக்கியோ நகரத்திற்கு எந்த ஆபத்தும் நேரிடாது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியினை நடத்த டோக்கியோ தேர்வு செய்யப்பட்டதை தொலைக்காட்சி வாயிலாக அறிய நேரிட்ட ஜப்பானிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.


கடந்த 2016ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவிடம் இந்த வாய்ப்பை இழந்தபின், டோக்கியோ இந்த முறை நேரிடையாக இரண்டாவது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டது. கடந்த 1964ஆம் ஆண்டு முதல்முறையாக டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. தற்போது, 2020 ஆண்டிற்கான போட்டிகளை நடத்தும் வாய்ப்பினைப் பெற்றிருப்பதன் மூலம், ஆசிய நகரங்களிலேயே இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரம் என்ற பெருமையை டோக்கியோ பெறுகின்றது என்பது அடிசினல் தகவல்.

0 comments:

Post a Comment