Friday, August 30, 2013

டிவிட்டர் அச்சு இயந்திரம்.

டிவிட்டர் அச்சு இயந்திரம்.

twittertape

   டிக்கர் டேப் இயந்திரம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்த இயந்திரங்கள் வழக்கொழிந்து போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன.எனவே டிக்கர் டேப்பை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. ஒரு வேளை பழங்கால பொருட்களின் மீது காதல் உள்ளவர்கள் இன்று அருங்காட்சியக‌த்தில் பாதுகாக்கப்படும் இவற்றை அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.இணைய யுகத்தில் தேவை இல்லாமல் போய்விட்ட மற்றொரு தொழில்நுட்பமான தந்தியுடன் கைகோர்த்து செயல்பட்டவை இவை.அந்த காலத்தில்  பங்கு சந்தை நிலவரத்தை அச்சிட  இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 

பங்குகளின் விலையை உடனுக்குடன் தெரிந்து கொள்வது இன்று ஒரு விஷயமே இல்லை. டிவி,டெஸ்க்டாப்,ஸ்மார்ட் போன் என எதன் மூலம் வேண்டுமானாலும் பங்குகள் விலையை தெரிந்து கொள்ளலாம்.ஆனால் 1800 களின் பிற்பகுதி மற்றும் 1900 களின் பாதி வரை பங்குசந்தை போக்கை அறிய உடனடி வழி தந்தி சேவை தான். இப்படி தந்தி வழியே பெறப்படும் பங்குகள் விலையை அச்சிட்டு தரும் இயந்திரமாக டிக்கர் டேப் உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் செல்வந்தர்களும் வர்த்தக பெரும் புள்ளிகளும் இதை பயன்படுத்தினர்.
twittertape 

twtape

ஆனால் டிவி அறிமுகமான போதே இந்த இயந்திரங்களின் முக்கியத்துவம் குறையத்துவங்கி விட்டது. கம்ப்யூட்டர் யுகத்தில் இவை முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு விட்டன.
ஆனால் டிக்கர் டேப்பை காலாவதியான தொழில்நுட்பம் தானே என்று அலட்சியம் செய்வதற்கில்லை. ஏனெனில் இந்த டிக்கர் டேப்பை உலகின் முதல் டிஜிட்டல் தகவல் தொடர்பு சாதனம் என்று சொல்லலாம்.விக்கிபீடியா கட்டுரை இப்படி தான் அறிமுகம் செய்கிறது.

எல்லாம் சரி 2013 ல் டிக்கர் டேப் பற்றி பிளேஷ்பேக்? காரணம் இருக்கிறது! பிரிட்டனை சேர்ந்த இணைய வடிவமைப்பாளர் ஆடம் வாகன் டிவிட்டர் யுகத்தில் இந்த இயந்திரத்தை புது விதமாக மீள் உருவாக்கம் செய்திருக்கிறார்.அதாவது பங்குகளை அச்சிட உதவிய டிக்கர் டேப் இய‌ந்திரத்தை டிவிட்டர் குறும்பதிவுகளை அச்சிட வைத்திருக்கிறார். தர்மல் பிரின்டர் மற்றும் ஈதர்நெட் இணைப்பு வாயிலாக 30 நொடிகளுக்கு ஒரு முறை குறும்பதிவுகளை இந்த இயந்திரம் அச்சிட்டு தள்ளும்.

பழைய திரைப்படங்களில் பார்த்த இந்த இயந்திரம் தனது மேஜை மீது இருந்தால் எப்படி இருக்கும் என்ற விருப்பம் ஏற்பட்டதை அடுத்து டிவிட்டர் யுகத்திற்கு ஏற்ப இதற்கு உயிர் கொடுத்திருக்கிறார். பழைய உதிரிபாகங்களை இணையம் மூலம் தேடிப்பிடித்து தானே இந்த டிவிட்டர் டேப் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். 

இந்த இயந்திரத்துக்கு என்று இணைய வீடு ஒன்றையும் உருவாக்கியுள்ளார். டிவிட்டர் டேப் பற்றிய விவரங்களும் புகைப்படங்களும் அடங்கிய அந்த தளத்தில் எந்த கலைப்பொருளையும் சேதப்படுத்தாமல் இந்த இயந்திரத்தை பழைய உதிரிபாகங்கள் கொண்டே உருவாக்கியிருப்பதாகவும் அவர் கலைப்பொருள் சேகரிப்பாளர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
டிவிட்டர் டேப் இணைய இல்லம்:http://twittertape.co.uk/

0 comments:

Post a Comment